Posts

Showing posts from January, 2021

சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்

Image
சிலுவைராஜ் என்பவர் ராணுவ வீரனின் மகனாய்ப் பிறந்து கொண்டாட்டமும் கொடும் கட்டுப்பாடுகளும் ஒருங்கே நிறைந்த பால்யங்களில் திளைத்து வளர்ந்து கூர்த்த அறிவே பெற்றிருந்தாலும் மதம் மற்றும் சாதி அடிப்படையிலான கட்டமைப்புகளால் ஆசைப்பட்ட படிப்பும் சுகவாழ்வுக்கான வேலை கிடைக்காமல் அலைந்து, தான் சார்ந்திருக்கும் மதத்தால் இடஒதுக்கீட்டின் படி சலுகை கிடைக்காமல் போக வேறு மதம் மாறி தாழ்த்தப்பட்டவனில் இன்னொரு பிரிவாதலின் மூலம் வேலை மட்டுமல்லாமல் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்ற துர்நடைமுறைக்கு பலியாகி வேறு மதம் தழுவுவது வரையிலான ஒரு தன் வரலாற்றுப் 'புனைவு' இந்த நாவல்.  நாவலின் முதல் 200 பக்கங்களில் சிலுவையின் மகிழ்வு மிக்க பால்ய காலம் விவரிக்கப்படுகிறது. கிறிஸ்த்துவ கல்விக் கூடங்களில் பயிலும் கல்வியும் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் அன்பும் கண்டிப்புக்களும் முன்கோபக்காரத் தந்தையின் கொடூர அடிகளும் தாயின் திட்டுக்களும் பாட்டியின் சாகசக் கதைகளும் குறும்புக்கரக் குழுவுடனான பலவகையான விளையாட்டுக்களும் கிராமத்து திருவிழாக் கொண்டாட்டங்களும் மலையில் சிறு வேட்டைகளும் எம் ஜி ஆர் - சிவாஜியின் குதூகலத

செல்லாத பணம் - இமையம்

Image
"நமக்கு நடக்காதவரை உலகில் நடப்பதனைத்தும் வெறும் செய்தியே"

எங் கதெ - இமையம்.

Image
கண்ணீருல பொம்பள கண்ணீரு ஆம்பள கண்ணீருன்னு இருக்கா?, வலியில பொம்பள வலி , ஆம்பள வலின்னு இருக்கா ? ஆனா உலகம் அப்படித்தான் சொல்லுது. தனக்கு வந்தா சோகம்.கவல.துயரம். அதே மத்தவங்களுக்கு வந்தா வெறும் சும்மா. காத்து போல. - நாவலிலிருந்து.   இந்தக் கதைசொல்லப் பயன்படுத்தப்பட்ட மொழயிலும் நடையிலும் இதை 500 பக்க எழுதிருந்தாக் கூட ஒரு சலிப்பும் இல்லாம வாசிச்சிருக்கலாம். அப்படியொரு வெகு கச்சிதமான வட்டார வழக்கில் அமைந்திருக்கிறது. கொங்குப் பகுதியின் வட்டாரத்தில் 50 வயசுக்கார ஆள் கிட்ட ஒரு சைக்கிள் கடைல உட்கார்ந்து கதை கேட்ட மாதிரி இருக்கு

மெக்ஸிகன் - ஜாக் லண்டன்

Image
எதிர்பாராத எந்த நொடியிலும் தாக்கப்பட்டு வீழ்த்தப்படும் குத்துச் சண்டை வளையங்களுக்குள்ளும் ஒரு போதும் தனியாய்த் திட்டமிடக் கூடாத வழித்தடப் பயணத்தில் பனிமலைக்கிடையேயும் இனம் காத்தலில் தோற்கடிக்கப்பட்டதற்குப் பழிதீர்க்க வேண்டி வனத்துக்கிடையேயும் நாடுகள் தாண்டியும் தம் வாழ்வை அமைத்துக் கொண்ட மாந்தர்களின் மனப் போராட்டங்களும் வறுமையில் வீழ்ந்த உடல் வீழ்ச்சிகளும் மாற்றத்தைத் தருமென நம்பும் வெற்றிகளுமாக நிறையும் இந்தத் தொகுப்பின் கதைகளங்களைப் பற்றியும் எழுத்து மேன்மையைப் பற்றியும் மொழிபெயர்ப்புத்திறன் பற்றியும் வாசகனுபவத்தைப் பற்றியதுமான நீண்ட பத்திகளின் கடைசி வரிகளாக பின்வருவதை எடுத்துக் கொள்ளுங்கள். - "தமிழில் இப்படி விறுவிறுப்பானதும் நேர்த்தியானதுமான ஒரு நூல் நான் வாசித்ததில்லை. அத்தனை சுவாரஸ்யமானதும் மெச்சத்தக்கதுமாகும். தவறவிடாமல் வாசித்து விடுங்கள்"

ம் - ஷோபா சக்தி

Image
அச்சம் ஒரு ஆனையைப் போல பயங்கரமானது. எனினும் ஆனையைப் போலவே பழக்கப்படுத்திவிட்டால் நம்மிடம் பணியக் கூடியது. - நாவலிலிருந்து.   இலங்கையில் -ஷோபாவின் வார்த்தைகளிலேயே - தரகு முதலாளி வர்க்கத்தின் சிங்களப் பேரினவாத அரசிடமிருந்து தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த சனம் தனித்தனி குழுக்களாக பல்வேறான இயக்கங்கள் தொடங்கப்பட்டு எல்லா வழிகளிலும் போராட்டங்கள் செய்யத் தொடங்கிய காலத்தில் மையப்படும் - கடவுள் பிறந்தபோது தொடங்கிய - கதை அய்ரோப்பாவில் தொடங்கி நினைவோடையாக நேசகுமாரன் என்ற பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்ட பாஸ்டரின் பால்ய நினைவுகளுக்குள் மூழ்கி இலங்கையில் அவர் இளமையில் விடுதலை இயக்கத்தில் போராளியாகச் செயல்பட்ட களத்தை "ம்" கொட்டிக் கேட்க கேட்க நெஞ்சையழுத்தும் பகீர்களும் பட்டென்று வெடிக்கும் பகடிகளுமாக விவரிக்கிறது.   தேச விடுதலைக்காக தான் கொண்ட அனைத்தையும் இழந்து போராட வந்தவனுக்கு எந்த நிலையிலும் வெற்றிகிட்டாத வாழ்வில் உள்ளூரில் மிஞ்சும் அவமானங்களும், உயிர்மீதான அச்சங்களும், எதேச்சதிகாரத்தின் அடக்குமுறைகளும், சேர்ந்து பயணித்த தோழர்களின் கொலைக்காட்சிகளும், இவைகளுக்கு எதிராய்ச் செய

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.

Image
உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.  காலையில் எழுந்து குளித்து சாப்பிட்டு அலுவலகம் போய் 8-10 மணி நேரம் வேலை செய்து விட்டு மாலை வீட்டுக்கு வந்து 4-6 பேர் கொண்ட குடும்பத்தாரோடு கழித்தும் எப்போதாவது சந்திக்கும் நண்பர்களோடு பேசிச் சிரித்தும் அலுவலக வேலைக்காக வெளியே செல்கையில் தொடர்ச்சியாக கண்ணில் படுகிற ஆட்களோடு செலவழித்தும் தான் கழிகிறது நம் பெருமாலான நாட்கள். இதில் இன்னொரு மனிதனை கூர்ந்து கவனிக்கவோ அவனைப்பற்றி சிந்திக்கவோ நேரமும் சூழலும் இல்லாத நெருக்கடியில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.   எந்த ஒரு மனிதனுக்கும் ஆசைப்பட்ட வாழ்வென்பதற்கும் திணிக்கப்பட்ட வாழ்வென்பதற்கும் இடையில் எழும் விரக்தியும் வெறியும் வலியும் ஆசையும் ஏதாவது ஒரு மீறலை நிகழ்த்திப் பார்த்து தான் அனுபவிக்க வேண்டிய ருசியைக் காணச் சொல்கிறது. இப்படியாக அனைவரது நெருக்கடிகளையும் ருசிகாணும் ஆசையையும் பயன்படுத்திக் கொண்டும் பணப்படுத்திக் கொண்டு வாழ்வதும், குற்றம் என்பதை குற்றமாகவே கருத மனதும் வாய்ப்பும் வராத அல்லது வந்தாலும் அதற்காக பெரிதாக அலட்டிக் கொள்ளாமலும் தன் வாழ்வுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அழுத்தத்துக்

குற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி

Image
ஒரு இலக்கியவாதியின் கையில் நாவல் வெறும் கதையல்ல. இந்த மனித குலத்தின் பரிணாம இயக்கத்தைப் பிரதிபலித்துக் காட்டும் தாஸ்தாவேஜுகளாகும். - அசோகமித்திரன். குற்றப்பரம்பரை வாசித்து முடித்த கையோடு மேற்கண்ட வாக்கியத்தை அசோகமித்திரன் கட்டுரையில் வாசித்தேன். எத்தனை உண்மையான வாசகம் என்று உணர்ந்தேன். ஒரு சட்டத்தால் அடிமைகளாக்கப்பட்ட குறிப்பிட்ட மக்களின் வாழ்வை கதையாக எழுதி ஆவணப்படுத்துகையில் அது காலங்கள் கடந்தாலும் எத்தனை பெரிய வரலாற்று ஆவணமாக உருமாறும் என்பதை நாவல் நிருபித்திருக்கிறது. இதுவரை நாவல் 11,000 பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்திருக்கின்றவாம். அப்படி வாங்கி வாசித்த சக வாசகர்கள் அடைந்த பெரும் உணர்ச்சிப் பெருக்கும் சில போதாமைகளும் நானும் அடையப் பெற்றேன்.

நாஞ்சில் நாடன் -நாவல்கள்

Image
கடந்த 2019 டிசம்பர் முழுக்க பெருமாள் முருகனோடு கழிந்த மாதிரி இந்த டிசம்பர் முழுக்க நாஞ்சில் நாடனோடு கழிந்திருக்கிறது. கிராமத்தில் ஊன்றிய வேரும் பம்பாயில் பரப்பிய கிளையுமாக வட்டார மொழியிலும் அனுபவப் பட்டறிவோடும் விரிந்த இவரது எழுத்துக்கள் சமூகத்தின் மீது கொண்டிருக்கும் அன்பும் ஆற்றாமையும் கலந்த விமர்சனமாகவே நான் கருதுகிறேன். எளிய மனிதர்களின் எளிய வாழ்வுத் தேவைகளுக்கான அலைபாய்ச்சல்களையே ஆறு நாவல்களிலும் எழுதியிருக்கிறார். வேலைவாய்ப்பின்மையால் வாழ்விழந்த இளைஞர் பட்டாளத்தின் மனக்குமுறல்களையும் வறுமையையும் அதற்கான இடம்பெயர்வுகளையும் அதனைத் தீர்த்துவிடத் துணியாத அரசியலாளர்களின் மீதெழும் கோபக் கனல்களின் பிரதிநிதியாகவே தமது எழுத்தை முன்னிறுத்தியிருக்கிறார். குடும்ப உறவுகளுக்குள்ளான விருப்பு வெறுப்புகளையும் பலதரப்பட்ட சமூக பொருளாதார நிலைகளில் வாழும் பெண்களின் பல்வேறான மனவெழுச்சிகளையும் பூச்சுகளோ புரட்சிக் கவசங்களோ இல்லாமல் இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலும் சாதிய ஒட்டுப் பெயர்களையே பயன்படுத்தி கதாபாத்திரங்களை வடிவமைத்த்திருந்தாலும் தனக்குள்ளிருக்கும் முற்போக்கையே நிலை நிறுத்த வி

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

Image
பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா ஆறும் அருவியுமா அட்டகாசமா ஆரம்பிச்சு பக்கத்துக்குப் பக்கம் திருப்பங்களுடன் நீண்ட நாவலை முதல்ல ஏத்துக்கக் கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. காதல், நம்பிக்கை,வாக்கு அப்படின்னு எதையும் மதிக்காம எப்படி இப்படி இலகுவாக முடிவுகள் மனிதர்களால் எடுக்கப்படுதுன்னு கோபமா வந்துச்சு. எதிலும் ஸ்திரத்தன்மையற்ற மனிதர்களின் ஆசைக்குப் பலியான இளைஞனா ரகுவோட வாழ்க்கை கேள்விக்குறியான திகிலோட முதல்பாகம் முடிஞ்சு இரண்டாம் பாகம் ஒரு மாதிரியான முன்முடிவோட தான் படிக்கத் துவங்கினேன். ஆனா வாத்தியார் தன்னோட அமெரிக்கப் பயணச் சித்திரத்த நாவலுக்குள்ள கொண்டுவந்துட்டாரோன்னு நினைக்க வைக்கிற அளவுக்கு வீதிவீதியா அமெரிக்காவச் சுத்திக் காட்டிட்டு இரண்டாம் இன்னிங்கிஸின் பிட்ஸ்பர்க் பினிஷரா ரத்னாவைக் கொண்டு வந்தப்பத்தான் மீண்டும் வேகம் கூடுச்சு. ஆனாலும் திடீர்னு மதுமிதா இறந்துட்டதா சொல்ற காட்சில எதிர்பாராம கண்ல தண்ணி வந்துருச்சு. அப்பத்தான் மதுவோட இயலாமை பெருசா பாதிச்சது. வயது வந்தும் நாடு மாறியும் மழலைமாறாத தேவதையா ஒரு இளம்பெண் அநியாயமாப் பலியான அதிர்ச்சி நீங்கவே இல்ல இன்னும். கிட்டத்த 40 வருசமா நாவ

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் - அண்ணல் அம்பேத்கர்

Image
நானும் புத்தரின் வார்த்தைகளிலேயே அடைக்கலம் அடைகிறேன். நீங்களே உங்களை வழி நடத்துங்கள். உங்கள் பகுத்தறிவை உங்களுக்கு அரணாக்கிக் கொள்ளுங்கள். அடுத்தவரின் அறிவுரைகளுக்கு செவி சாய்க்காதீர்கள். அடுத்தவருக்குக் கீழ்ப்படியாதீர்கள். உண்மையாக இருங்கள். உண்மையின் பின் நில்லுங்கள். எதற்காகவும் உங்களை ஒப்புக்கொடுத்து விடாதீர்கள். புத்தருடைய இந்தச் செய்திகளை மனத்தில் இருத்திக் கொள்வீர்களானால் உங்கள் வாழ்வு தவறாகப் போகாது. இது உறுதி. - அண்ணல்.

சுளுந்தீ - இரா. முத்துநாகு.

Image
சுளுந்தீ - இரா. முத்துநாகு. பழந்தமிழகத்தில் சொக்க நாத நாயக்க மன்னராட்சியில் அரண்மனையார்கள் தமக்குப் பிரித்தளிக்கப்பட்ட குறுநிலப்பரப்பை ஆண்டுவந்த காலத்தில் இனக்குழுப் பிரிவினராக பல்வேறான மக்கள் வாழ்ந்தபோது நாவிதர் எனும் இனக்குழுவினர் ஆதிகாலத்தில் எத்தகைய தொழிலறிவுகளோடும் அவரினும் முன்னோர்களிடமிருந்து கற்றுத்தேர்ந்த மருத்துவ ஞானத்தோடும் வார்த்தெடுத்த வீரத்தோடும் இருந்தார்கள் என்றும் அவர்களை வெறும் தாழ்ந்த சாதிக்காரர்களாக மட்டுமே பார்த்து குலத்தொழிலை மட்டுமே செய்ய அட்சியாளர்களும் மற்ற ஆதிக்க சாதியினரும் பணித்தார்கள் என்றும் நாவிதர் வாழ்வியலின் ஏற்ற இறக்கங்களை வரலாற்றுத் தகவல்களோடும் ஏராளமான மருத்துவக் குறிப்புகளோடும் நிலவியல் ஆதாரங்களோடும் ஆசிரியரே குறிப்பிடும்படியாக உண்மைக்கு மிக அருகில் சென்று பல்லாண்டுகாலம் ஆய்ந்தறிந்து முதன்முதலாகப் பதிவுசெய்துள்ளார். விஜய நகரப் பேரரசின் ஆளுகைக்குட்பட்ட கன்னிவாடி அரண்மனையில் நாவிதராகப் பணிபுரியும் ராமன் என்பவர் பன்றிமலைச் சித்தரிடம் பண்டுவ உதவியாளராகவும் இருந்து மருத்துவ அறிவையும் அநேக அனுபவங்களையும் பெறுகிறார். அவருக்குப் பிறக்கும் மகன் மாடனையும்

செடல் - இமையம்.

Image
செடல் - இமையம்.  விளையாட்டுப் பிள்ளைய  வீதிக்கு இழுத்தாங்க  எனையென்ன கேட்கன்னு  வினையொன்னு செஞ்சாங்க  மழைக்கு நேர்த்தின்னு  மந்தைக்கு வரச்சொல்லி  சாமிக்கு நேர்ந்ததாக  சாதிக்காரங்க சொன்னாங்க  பெத்தவங்கள விட்டுட்டு  பிறந்தவங்கள விட்டுட்டு  அனாதையா வரச்சொல்லி  அதிகாரமா அழைச்சாங்க  நடப்பதெல்லாம் புரியாம  நினைவெல்லாம் தெரியாம  தடுமாறி நிக்கையிலே  தலமசிரச் சிரைச்சாங்க  வண்ணமாத் துணிகொடுத்து  வயிராறச் சோறுபோட்டு  பண்டிக முடியட்டும்  பண்டுதமும் பண்ணாங்க  சாதியில கீழன்னாலும்  சாமியாக் கும்பிட்டு  மக்க பஞ்சம் தீர்க்க  மழவேண்டச் சொன்னாங்க  ஊர உறவுன்னாங்க  கோயில வீடுன்னாங்க  கடவுளக் கைக்காட்டி  காலத்துக்கும் துணைன்னாங்க  வறுமைக்கு வாக்குப்பட்ட  சிறுமையில சீர்பட்ட  அன்பான பெத்தவங்க  அனாதையாக்கிப் போனாங்க  மழைவந்து சேர்ந்ததும்  மக்கட்பஞ்சம் தீர்ந்ததும்  சாமின்னு கும்பிட்டவங்க  சாதிசொல்லி ஏசினாங்க  கும்பிட்ட கையெல்லாம்  கொட்டத் துணிஞ்சிருச்சு  ஏந்திய சனமெல்லாம்  எடுத்தெறிஞ்சி பேசிருச்சு  வயசுக்கு வந்தும்  வழியத்து நின்னப்ப  ஊத்துற மழையில  ஊரவிட்டு துரத்தினாங்க  இருக்க இடம்தேடி  இன்னொரு ஊருபோனேன்  ப

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்.

Image
தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன். பாடம் நடத்தி விட்டுத் தேர்வு வைப்பது தான் வழக்கம் ஆனால் வாழ்க்கை மட்டும் தேர்வுகளின் மூலம்தான் பாடமே எடுக்கும் என்ற சொற்றொடருக்கு நீண்ட உரையாய் அமைந்ததே இந்த நாவல். தனிமனிதர்களுக்கு எந்த விருப்பு வெறுப்புமில்லாத ஒரு வாழ்க்கையைத் தான் குடும்ப அமைப்புகள் ஏற்படுத்தித் தருகிறதென்ற குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியிருக்கிற இந்தக் காலகட்டத்தில் இப்படியான கதைகள் மீண்டும் மீண்டும் அழுத்தி சொல்ல வருவது குடும்ப வாழ்வின் தேவையையும் பாதுகாப்பையுமே. உறவுகளின் பல்வகைப்பட்ட உணர்வுகள் நெருங்கி மோதி உருவாகும் நல்லது கெட்டதுகளை பிரித்தறிந்தோ விட்டுகொடுத்தோ ஏற்றுக்கொள்ளத் துணியும் போது சகல சௌக்கியம் பெற்ற ஒரு வாழ்வை அனைவருமே வாழ முடியும். ஆனால் அது அத்தனை எளிதல்ல என்பதையும் கசப்போடும் புரிதலோடும் ஒத்துக் கொள்ளவும் வேண்டும். தன் மானமே பெரிதென்ற போக்கில்லிருக்கும் ஒரு இளைஞன் தன் எதிர்காலத்துக்காகவும் தன் தம்பி தங்கைகள் நிறைந்த குடும்பத்தின் நல்வாழ்வுக்காகவும் ஊதியத்துக்கான ஒரு வேலையின்றியும் போதிய வயதின்றியும் இருக்கும் ஒரு சூழலிலும் "பெரும்போகமாய்" வலிய வரு

மாமிசப் படைப்பு - நாஞ்சில் நாடன்.

Image
மாமிசப் படைப்பு - நாஞ்சில் நாடன். நிலவுடமை முதலாளிகளுக்கும் அறுப்புக் கூலி ஆட்கூட்டத்துக்கும் இடையில் நடக்கும் வர்க்கப் போராட்ட வாழ்க்கை வட்டார மொழியின் அசலான விவரணைகளில் விரியும் எளிய கதை வாசிப்பில் முடிவில் மாங்கோண கிராமத்தில் உறுப்பினராகி விட்ட முழுமையை வழங்குகிறது. கிராமத்தில் வாழும் பல்வேறான கதாபாத்திர அறிமுகங்களின் வழியே நீட்டிக் கொண்டு செல்லப்படும் கதையில் பரம்பரை நிலத்தையும் சாதிய அதிகாரத்தையும் பலமாகக் கொண்டு நடத்தும் சுகபோக வாழ்க்கையில் ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் எதிர்த்துப் பேசவும் திருப்பியடிக்கவும் செய்யும் நாவல் நாயகன் கந்தையா மேல் ஊர் முதலாளிகளுக்கு உண்டாகும் பகையைக் காரணமாகக் கொண்டு அவரின் தொழிலை முடக்கி, தோட்டத்தைக் கபளீகரம் செய்து நட்டப்படுத்தி முடிவாகக் கந்தையாவைக் கொலைக்களப்படுத்தி முத்தாரம்மன் படையலின் போது உரிமைகளும் நியாயமும் வேண்டும் மனிதனென்பவனை வீழ்த்தி மாமிசமாக்குவதே மாமிசப் படைப்பு. மனித சமூகத்தின் உயர் நாகரிக வளர்ச்சியாக நாம் அடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச மாண்புகளைக் கூட அடித்து நொறுக்கி இன்னமும் ஆண்டான் - அடிமை அடிமைத்தனங்கள் உச்சத்திலிருக்கிறது என

எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்.

Image
எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன். காவல்,கற்பு, குளம் ,பெருமை என்ற சொற்கள் எல்லாம் மனித அகராதியில் என்று வந்து சேர்ந்தவை என்று தெரியவில்லை. சொற்கள் மட்டுமே மேலும் மேலும் சேர்ந்திருக்க வேண்டும் கரையான் புற்று வளர்வதைப்போல. சொற்களுக்கு அச்சப்பட்டுப் பதுங்கித் திரியும் மனிதன் சொற்களைத் தூக்கித் தூர ஏறிய முடியாமல், சொற்களை சுமந்து திரியும், முகமூடியாய் அணிந்து திரியும், வெறுமனே வாயிலிட்டு வெற்றிலை பாக்கு போலக் குதப்பித் திரியும் மனிதன். தொண்டைக்கும் சிக்கிக் கொண்ட மீன்முள் போல தோற்றம் கொடுப்பன சொற்கள். - நாவலிலிருந்து... இப்படியாகச் விளைவுகளறியாமல் ஏவப்பட்ட சிலபல விசச் சொற்களின் வழியே சாதி மீறலாகவும் இளமைத் துணிவாகவும் குலக் குற்றமாகவும் மாற்றப்பட்ட - செய்யாத ஒரு - பாவத்துக்கு சாதிக் காப்பாளர்களால் வன்மமாகத் தண்டிக்கப்பட, அதற்கு பதிலடியாக வேண்டுமென்றே ஒரு பாவம் செய்துவிட்டு தாய் தந்தையை பிரிந்து படிப்பைப் பாதியில் விட்டுட்டு ஊர் விட்டு நீங்கி ஊர்ஊராய் போய் கூரைக்கும் கஞ்சிக்கும் வழில்லாமல் கொடும்பாடுபட்டுப் பிழைக்கும் இளைஞனின் கதையே இந்நாவல். வாழ்க்கையென்பது எட்டுத்திக்கும்

மிதவை - நாஞ்சில் நாடன்

Image
மிதவை - நாஞ்சில் நாடன் கேரளாவில் பிறந்து படித்த அந்தக் கால பத்தாம் வகுப்பு படிப்பிற்குத் தோதான வேலையுமின்றி பஞ்சம் பிழைக்கத் தமிழகம் வந்துசேர்ந்து ஏதேதோ கிடைத்த வேலைகள் எல்லாம் செய்து கடைசியாக ஓரிடமாத் தொடரவேண்டி காட்டன் மில்லில் வேலைக்குச் சேர்ந்து அங்கேயே பெண்பார்த்துக் காதலித்துத் திருமணம் செய்து அத்திருமணத்தால் வந்து சேருமென்றிருந்த புதிய சொந்தமெல்லாம் விலகி நிற்க யாருடைய துணையுமின்றி இரண்டு பையன்களை பெற்று வளர்த்துப் படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துவிட்டு அவர்கள் இடும் உணவை உண்டு வந்தாலும் இன்றும் பழைய வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டு முதுமையைக் கழித்துக் கொண்டிருக்கும் என்னுடைய அப்பா எப்போதும் " நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தில் கஞ்சிக்கு வழியில்லாமல்" என்று ரிப்பேர் ரெக்கார்டு போல பாடாவிட்டாலும் எப்போதாவது நாங்கள் வெட்டிச் செலவு செய்துவரும் போது அவர் மாற்றுச் சட்டையில்லாமல் கூட ஊர்விட்டு ஊர்வந்து பிழைத்த கடந்த கால வறுமையைச் சுட்டிக் காட்டித் திட்டுவதுண்டு. அதெல்லாம் இன்று கேட்கும் போது எழும் பொதுவான சிரிப்பிற்குப் பிறகு சற்றே நினைத்துப் பார்க்கையில் வலிக்கவே செய்யும்.

சதுரங்கக் குதிரை - நாஞ்சில் நாடன்

Image
சதுரங்கக் குதிரை - நாஞ்சில் நாடன். நாவல் வாசித்து முடித்துவிட்டு சதுரங்கத்தில் குதிரையின் செயல்பாடு எப்படி இருக்குமென்று போய்ப் படித்தேன். சதுரங்கக் கட்டத்தில் அரைப்பகுதி மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் ஆனால் ஏனைய காய்களை கடந்து செல்லக் கூடிய சிறப்புத்தகுதி வாய்ந்ததுமாகும். இந்த இருபண்புகளும் வாழ்வின் இயல்பான போக்கில் ஒருங்கமைந்துவிட்ட ஒரு மனிதனின் தனிமை வாழ்வை காலச்சக்கரத்தில் முன்பின் ஓட்டிக் காட்டுகிறது இந்த நாவல். தாய் தந்தை, இல்லையென்றலும் கைத்தாங்கலுக்குச் சொந்தமிருக்கிறது, கை நிறையச் சம்பளம் வரும் வேலையிருக்கிறது , உழைப்புக்குப் பின் உட்கார்ந்து சாப்பிடச் சேமிப்பிருக்கிறது - இன்னும் மீதமிருக்கும் வாழ்வை இறுகப்பற்றிக் கொள்ள, ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ள - இன்னும் என்ன குறை? என்ன தேவை ? என்ற நினைப்பு தவிர்க்க முடியாத கேள்வியாய் நின்றாலும் காலத்தே செய்யத்தவறிய ஒன்றைப் பிறகு எப்போது நினைத்தாலும் திட்டமிட்டுக் கூட செய்யவே முடியாமல் போக்கடிக்கும் சலிப்புற்ற மனமும் நிலையும் வாய்த்துவிடுமென்ற எத்தனையோ எடுத்துக்காட்டுகளுள்ள கதையை நாவலாக்கியிருக்கிறார்

சழலும் சக்கரங்கள் - அகுதாகவா

Image
ஆன்மாவின் அச்சில் சுழலும் சக்கரங்கள் சொர்க்கத்தின் பாதைகளூடே நீளும் ஒளிவீசும் வெள்ளி போன்ற மிக மென்மையான இழையொன்றைப் பற்றியேறி நரகத்திலிருந்து தப்பித்துவிட முயன்று தோற்ற கந்தாதன் சுயநலக் கதையும் ... கதிரொளி தன்னந்தனியாக செடார் மற்றும் மூங்கில் மரங்கள் மேல் வீசிக் களைத்து மங்கிப்போனபோதும் தனது மரணத்துக்கான காரணத்தை புதிராகவே விட்டுச் சென்ற தாகேஹிரேவின் கதையும்... ஞானியாகும் விபரீத ஆசையில் சூட்சியின் பொறியிலுழன்று இருபதாண்டுகாலம் அடிமையாகிருந்தும் கடைசியாக உயிர்பறிக்கும் வன்மச் சோதனையில் மரத்திலேறி இருகைகளை விட்டுவிட்ட போதும் வீழாமல் மிதக்கும் தியாகமும் தியானமும் கூடிய கதையும் எதுவுமே செய்ய இயலாத சூழலில், செய்ய முடிகிற இறுதியான சுயதேர்வாக தினமும் உயிரையாவது தக்கவைத்துக்கொள்ளல் என்ற நிலையிலிருந்து பாடம் கற்று பசியில் மடிவதிலிருந்து தப்பிக்க எதையும் செய்து உயிர்வாழத் துணியும் கீழ்நிலைப் பணியாளன் கதையும் விவரிக்க இயலாத மனப்பிறழ்வில் நிலைத்த வாதையிலிந்தும் எழுதத் திராணையிலாதபடி கண்ணிலும் மனதிலும் சுழலும் சக்கரத்துக்குப் பலியாய் விடுவோமென்ற பயத்துடன் தன்னை உறக்கத்தில் கழுத்தை நெரித்துக

மணல்கடிகை - எம்.கோபால கிருஷ்ணன்

Image
வாழ்க்கைல எதுலையுமே திருப்தி கெடையாது. ஒண்ணு கிடைச்சதுமே அடுத்ததப் பத்தின ஆசை, பயம், அவசரம் கொரங்கு மாதிரி தாவித் தாவி ஓடி மனசு எதுலையுமே நிக்காம ஓஞ்சு போகுது. சிலருக்குப் பணக்கஷ்டம் சிலருக்கு மனக்கஷ்டம். மொத்தத்துல யாரும் சந்தோசமாயில்லை. திருப்தியாயில்லை. - நாவலிலிருந்து ... இந்த சில வரிகள் தான் 544 பக்கத்தில் ஒரு நகரமும் அதுசார்ந்தியங்கும் மனிதர்களின் அகபுற எழுச்சியும் வீழ்ச்சியுமென மணல்கடிகையாய் மாறி மாறி நில்லாது பயணப்படும் வாழ்வின் வழி வெளிப்படும் வாழ்வியல் நீதி. கடைசிப் பக்கத்தை மூடிவைத்த உணர்ச்சிப் பெருக்கோடு சொல்கிறேன் இந்நாவல் வாசிப்பனுபவம் என்பது வாழ்வனுபமே

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.

Image
கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார். புதியதொரு வாழ்வனுபவம் .... நான் வாழும் சூழலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கைய கற்பனையாக வாழ்ந்து பார்த்திட வேண்டுமென்ற ஆசையில் தான் நான் பெரும்பாலும் வாசிக்கவே செய்கிறேன். தொடர்ந்து அவ்வகை அனுபவங்களைக் கொடுக்கும் புத்தகங்களையே தேர்வு செய்து வாசித்தும் வருகிறேன். அப்படியான வகையில் மலையை நம்பி மலைக்கு மேலேயும் கீழேயும் வாழும் மக்களின் வாழ்வியலைப் பற்றிய இந்தக் கதை அம்மக்களோடு ஒருவனாக அவர்களின் நல்லது கெட்டதுகளை மலையிலும் தரைக்காடகாட்டிலிருந்து கழுதைகளோடு பயணப்பட்டுக் கொண்டே கிட்ட இருந்து பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது. சாதியத்தின் கீழ்மைகளும், சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் விளையும் ஏகாதிபத்திய - அடிமை மனோபாவ இயல்புகளும் பெரும் உருவெடுத்து நின்றாடிய காலத்தைத்தான் பழையகாலம் என்பதை, எந்த மறுமலர்ச்சிப் பாதைகளும் கண்டடைந்திராத, எந்த பொதிச்சுமையும் குறைந்தடாத கழுதையினும் தாழ்ந்தபடி வாழும் இக்காலத்திலும் நம்ப மறுக்கிறது மனம். வருடத்துக்கு ஒரு முறை தானென்றாலும் மணிக்கணக்கில் காத்திருந்து உண்ணும் இட்லிக்குக் கொஞ்சம் கூடுதலாகச் சாம்பார் கேட்டவர்கள் மீத

பிடிமண் - முத்துராசா குமார்

Image
"1 ரூபாய் சூடத்தீ உடம்பு" இந்த ஒரு வரியை எப்படிச் சிந்தித்திருப்பார் என்றே இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். காலம் முழுக்க மறக்காது இந்த வரி. மரபுக்குத் திரும்புதலை ஒரு பேஷன் போல ஆபாசமான வர்த்தகமாக மாற்றத் தொடங்கி அவலமாய்ப் பைநிறைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் உண்மையாகவே மரபென்பது பழமையைக் கொண்டாடுதல் அல்ல கைமாற்றுவதுதான் என்பதை நாம் இன்று இழந்து நிற்கும் நிலம், பண்பாடு , கல்வி, கலை, வழிபாடு, விவசாயம், உள்ளிட்ட அனைத்தின் அழிவிலும் கண்டுகொள்ளலாம். அந்தப் பூர்வீக நினைவுகளை சூடு குறைந்த பின்னும் சொத்தென்று கைப்பற்றியிருக்கும் பிடிமண்ணில் பதியமிட்டுருக்கிறார்

திருமார்புவல்லி - ஸ்ரீசங்கர்

Image
நீ என்பது எனக்கு தனித்து கரையில் அமர்ந்திருக்கும் பசித்த உயிரை இரை காட்டி அழைக்கும் தெப்பம் நானோ நீ தரும் மாமிசம் உண்டு உயிர்த்திருக்குமுன் வளர்ப்பு விலங்கு - ஸ்ரீசங்கர்

யாம் சில அரிசி வேண்டினோம் - அழகிய பெரியவன்

Image
யாம் சில அரிசி வேண்டினோம் - அழகிய பெரியவன் எங்களுடைய வாட்சப் குழுவில் அடிக்கடி சில விவாதங்கள் வரும். எழுத்தாளர் எதை எழுத வேண்டுமென்று வாசகர்கள் தீர்மானிக்க முடியுமா ? அல்லது வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப எழுத்தாளர்கள் எழுதுவார்களா? காலத்தின் தேவைக்கேற்ப புதிதுபுதியாய் உருவாகும் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்தும் அதையொட்டியே வரும் பிரச்சினைகள் குறித்தும் இலக்கியத்தில் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறதா ? என்றெல்லாம் விவாதங்கள் நீண்டுபோய் கடைசியாய் - எல்லா வகையான புத்தகங்களும் தான் வருகிறது. விருப்பத்திற்கேற்பத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள் - என்ற வேறுவழியின்று கொடுக்கப்பட்ட இறுதித்தீர்ப்போடு முடியும். ஆனாலும் இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும் கதைக்களம் நான் இத்தனை ஆண்டுகாலம் வாசித்த மற்றும் கேள்விப்பட்ட அளவில் ஒருமுறைகூட இத்தனை அழுத்தமாகவும் விரிவாகவும் பேசப்படாததும் பதிவுசெய்யப்படாததுமான ஒரு எளியதும் கொடியதுமான கதை. இந்தக் கதையில் வரும் சம்பவம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்நாளில் அடிக்கடி அல்லது ஒருமுறையேனும் எதிர்கொள்ளாமல் கடந்திருக்கவே வாய்ப்பில்லை. அப்

காதலெனும் வசீகர மீன்தொட்டி - சுபா செந்தில்குமார்

Image
கச்சிதமும் காத்திரமும் இத்தனை இயல்பாக நிகழ்கையில் கவிதைகள் வாசிப்பிற்கும் நெஞ்சில் நிறைத்துக் கொள்வதற்கும் இலகுவாகவும் சுகமாகவும் ஆகி விடுகிறது. ஒரு தொகுப்பின் அத்தனை கவிதைகளையும் நேசிக்கும்படியாக எழுத்தும் தேர்வும் அமைந்துவிடும்போது வாசகன் அடையும் நிறைவும் மகிழ்வுமே கவிஞருக்கான அங்கீகாரம்

வண்ணதாசன் சிறுகதைகள்

Image
மழை பார்த்துவிட்டு நனையாமல் விட்டுவிடுவதைப் போலத்தான் பிழைக்க வேண்டி நாட்களைக் கடத்துகிறேமே தவிர பின்னாட்களில் நினைத்துச் சுகிக்குமொரு வாழ்வை வாழவில்லையென்ற குற்றஉணர்வை இவரது கதைகள் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது.

பயணம் - அரவிந்தன்

Image
பயணம் - அரவிந்தன் எதிர்பார்ப்புகளின் சுமை நம்மோட புரிந்துகொள்ளும் அறிவின் கதவை அழுத்திகிட்டு இருக்கு. அந்தக் கதவு மூடியிருக்கிற வரைக்கும் கண்ணும் காதும் திறந்திருந்தாலும் பிரயோஜனம் இருக்காது. - அரவிந்தன். இந்த இரண்டு வரிகள் தான் ராமனாதன் என்ற இளைஞனின் வாழ்க்கைப் பயணமா 400 பக்கத்துக்கு விரிஞ்சிருக்கு. " நெருப்பு சுடும்" என்று முன்முடிவுடனே நெருப்பைப் பயன்படுத்தாமாலேயே பதறி விலகி ஓடிய ஒருவன் நெருப்பைத் தெளிவாகக் கவனமாகப் பயன்படுத்தினால் சுகமும் தரும் என்பதைத் தெரிந்து கொண்ட பயணத்தை அறியமுடியாத பல கேள்விகளோடு தொடங்கி பல விவாதங்கள் எழுப்பப்பட்டு சுயமாக விழுந்துவிட்ட பல சுழல்களில் மீண்டு புரிதல்களில் சங்கமிக்கும் அனுபவப்பூர்வமான பதில்களோடு முடித்து வைத்திருக்கிறார். வலிந்து திணிக்கப்படும் குடும்பச் சுமை, விவேகமில்லா இளமை, கட்டுக்கடங்காத காமம், தேவைகளை விடவும் விதிகளைக் கடைப்பிடிக்கக் கோரும் ஆன்மீகம், அடிபணியச் செய்யும் ஆசிரமக் கட்டுப்பாடுகள், கட்டுப்பாடுகளைக் கடந்தேனும் மக்களுக்கு மாற்றங்களைக் கொடுத்துவிடத் துடிக்கும் தூய சேவைமனப்பான்மை, மதம் குறித்த மக்கள் அறியாமை, அதைப் ப

தன்மீட்சி - ஜெயமோகன்.

Image
தன்மீட்சி - ஜெயமோகன். இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினவர் எந்த முன் விளக்கமும் கொடுக்காமல் " இதுவரை அனுபவிக்காத ஒரு நேர்மறை மன நிலையை வாசித்துக் கண்டடைவீர்கள் என்றும் வாசித்துவிட்டு குறைந்தது நான்கு பேருக்காவது பரிந்துரைக்கவும்" என்று மட்டும் சொன்னார். அதையே நானும் சொல்ல விரும்புகிறேன். நான்கு பேருக்கு மட்டுல்ல நட்பில் இருக்கும் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். கட்டாயம் வாங்கி வாசிக்கவும். பிடித்தமானதை முழு மகிழ்வோடு செய்யும் போது முழு ஆற்றலும் வெளிப்பட்டு வெற்றியின் உச்சத்தை திருப்தியென்று அடைவோமென்றும் அதுவே தன்னறமென்றும் அவ்வறம் கொண்டு தன் வலி துறக்க வழி கண்டடைந்த அனுபவக் கதைகளைக் கண்முன் நிறுத்தியும் மிகப்பிடித்த புத்தகமாகியிருக்கிறார் ஆசான். குக்கூவின் நேர்த்தியான புத்தக உருவாக்கம் அத்தனைஅழகு. கும்பிடுகிறேன் ஆசானே

வண்ணதாசன் சிறுகதைகள்

Image
திட்டமிட்டுத் தொடர்ச்சியாக ஒரே மனநிலையில் இயந்திரம் போல வாசித்துத் தீர்த்துவிடவும் அனுபவங்களை அடைந்துவிடவும் முயற்சிப்பதும் வண்ணதாசனுக்குச் செய்யும் துரோகமும் வன்முறையுமாகுமென்ற தெளிவையும் மன அமைதியையும் இந்த நான்கு தொகுப்பை வாசித்த பிறகுதான் அடைந்ததேனென்பதால் இத்தோடு வண்ணதாசன் சிறுகதைகளுக்கு சிறு இடைவேளை விட்டு இடையிடையே வேறு வேறு புத்தகங்கள் வாசித்து விட்டு வண்ணதாசனை வாசிக்கலாமென நினைத்திருக்கிறேன்.

கன்னிவாடி - க.சீ.சிவகுமார்.

Image
கன்னிவாடி - க.சீ.சிவகுமார். "காலத்தாற் குன்றாது கருவறை அடைக்காத்த வெப்பம்" என்ற சிவக்குமார் அவர்களின் வாக்கியத்திற்கு ஏற்பவே ஒரு டிவிஎஸ் - 50 யில் அவரின் பின்னாலமர்ந்து காலையிலிருந்து இரவு வரை தாராபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் - வயல்வெளிகளுக்குள்ளாகவும் முருங்கைமரங்களுக்குள்ளாகவும், சந்தைகளிலும் சாவடிகளிலும் சாலைகளிலும் சாராயக் கடைகளிலும் கல்லூரிகளிலும் அவர் கைகாட்டிப் பார்க்கச் செய்த மனிதர்களின் வெளி வறண்டு போனாலும் உள்ளூர ஓடும் அன்பின், காதலின், வறுமையின், கோபத்தின், இழப்பின், வலியின், வைராக்கியத்தின், ஏமாற்றத்தின், இயலாமையின், வேலையின்மையின், மழையின்மையின், என இப்படி நீளும் அனைத்துமான உள ஈரத்தைக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த உணர்வைத் தருகிறது சுகமும் சுவாரஸ்யமானதுமான கதைகளும் எழுத்தும்

கனவுப் புத்தகம் - ஜெ.பி.சாணக்யா

Image
கனவுப் புத்தகம் - ஜெ.பி.சாணக்யா காமத்தை எழுதுவது என்பது காமத்தைத் தூண்டுவது அல்ல, அது கலைஞனின் வேலை அல்ல. காமத்தை மானுடனின் முதன்மையான வெளிப்பாட்டுக்களங்களில் ஒன்று என்று காண்பவனே கலைஞன். - ஜெயமோகன். இந்தத் தொகுப்பு வாசிச்சிட்டு தான் எனக்கு முதல்முறையா ஒரு குழப்பம் வருது. இந்தக் கதைகளை பிடிச்சிருக்குன்னு நினைக்கவா ? ஏத்துக்க முடியலைன்னு நினைக்கவா ? மனித வாழ்வின் இருட்பக்கமாகவே இருந்தாலும் பெரும்பாலும் விரும்புவதும் அதே சமயம் துன்பப்பட வைப்பதுமான காமத்தை இயல்பென்று ஏற்றுக் கொள்வதா ? மீறலாய் வெளிப்படும் போது பொதுவெளியில் எவ்வாறு எடுத்துக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் படுமென்று யோசிப்பதா ? இதைப்போல நிறைய கேள்விகள் துளைக்கிறது. இக்கதைகளின் மாந்தர்கள் அசலா போலியா என்ற தராசின் முள் நம்முடைய முகமூடிகளுக்குள்ளிருக்கும் மனதுக்குள்ளேயே நிறுத்துப் பார்க்கக் கோருகிறது. வாசிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறதென்ற மேம்போக்கான வரிகளில் இத் தொகுப்பின் சில கதைகளைக் கடக்க முடியவில்லை. நான் கண்டும் கேட்டிராத வாழ்வின் இருட்பக்கச் சித்திரங்களின் மேல் வெளிச்சமென்ற அதிர்வுகளைப் பாய்ச்சுகிறதாகவே கருதுகிறேன். கவிதை

கனாத்திறமுரைத்த காதைகள் - சித்ரன்.

Image
கனாத்திறமுரைத்த காதைகள் - சித்ரன். நிறுத்தி நிதானமா கதை சொல்லும் முறையாகட்டும் ஆழமும் அழகுமான எழுத்தாகட்டும் நெடும் அதிர்வுகளை உண்டாக்குகிறது. பலவரிகள் (ஸ்டேட்டஸ்த்தன) தனித்தான வெளிப்பாட்டு உச்சங்களைக் கொண்டிருக்கிறது. கதைக்களத் தேர்வுகள் தான் மீண்டும் மீண்டும் மீறல்கள்தானா என்று உறுத்தியது. ஆனால் கதை நிகழ்களுக்குள்ளாகப் பயன்படுத்தும் ரசனை மற்றும் அறிவு சார்ந்த ஈடுபாட்டுச் செயல்களும் பயன்படுத்தல்களும் நமக்கும் அவைகளைப் பற்றி அறியாமலிருந்தால் அனுபவிக்கவும் அறிந்துகொள்ளவுமான வாய்ப்பை வழங்குகிறது. மொத்தத்தில் நெடுநாள் மறக்காத, எழுத்துக்காகவேத் திரும்ப வாசிக்கச் செய்யுமளவுக்கான தேர்ந்த எழுத்தில் விளைந்த நெடும்கதைகளின் தொகுப்பு

பான் கி மூனின் றுவாண்டா - அகரமுதல்வன்

Image
நீ எப்பொதும் என் இதயத்தின் நீர்ப்பரப்பில் நீந்திக்கொண்டே இருக்கிறாய். நினைவின் பேரிரைச்சல் எழுகிற போதெல்லாம் உனது பிம்பங்கள் தான் என்னில் மிதக்கிறது. உன் மெல்லிய விரல்களால் என்னை ஸ்பரிசிக்கும் அந்தக் கணங்களை நான் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கனவிலும் வாழ்விலும் நம்மை ஏமாற்றும் இந்த யுத்தத்ததை நம்மால் ஏமாற்றவே முடியவில்லை. - அகரமுதல்வன் பெற்றோர் அன்புடன் குழந்தைக் குறும்புகளையும் கவின் காதலுடன் இளமையையும் தோழமை நண்பர்களுடன் நேசக்காலங்களையும் சூளும் சுற்றத்தாருடனும் சுகதுக்கங்களில் இயல்பாக இணைந்திருந்து வாழ்வாங்கு வாழ்ந்து தீர்த்திருக்கவேண்டிய ஒரு வாழ்வு உரிமைக் குரல்களுக்காகவும் கடமைக் காரியங்களுக்காகவும் போர்க்களம் புகுந்து துரோகம் சூழ்ந்தடித்த துயரக் காற்றில் கரைந்து காணமல் போய்விட்ட கனவுகளாகக் கொன்றொழிக்கப்பட்ட கண்ணீர்க் கதைகளின் தொகுப்பு. விடுதலை என்பது சுவாசமெனப் புறப்பட்ட உயிர்கள் அழிந்தும் தொலைந்தும் போன இக்கதைகளை வாசிக்கும் போதே நாமடையும் ஆற்றாமையும் அச்சமும் களத்தில் நின்று அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறபோது இருமடங்காகி விடுகிறது. இந்திய

சூலப்பிடாரி - காலபைரவன்

Image
கதைகளில் நிகழும் சாதாரண நிகழ்வுக்குள் ஒரு கனவுலகத்தைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளும்படி நீண்டு சுவாரஸ்யமூட்டும் கதைகள். இந்த வகையைச் சார்ந்த பள்ளிக் கதைகளான வனம், ஆற்றைக் கடத்தல் ஆகியன நாம் விரும்பும் கல்வியை அடையாத அல்லது கொண்டு சேர்க்காத இயலாமையையும், விலகிச் செல்லும் நதி சூழல் நிகழ்த்தும் மனஅதிர்வின் உச்சத்தையும், சூலப்பிடாரி உள்ளொன்றும் புறமொன்றுமென வாழும் சாதிய வேற்றுமையையும், பனைகளின் காலம் இழந்த சொத்தின் வழி பழம்பெருமைகளை பேசியும், நீர்க்குமிழியும் , இருவழிப்பாதையும் மீறலின் இருவேறு பார்வைகளையும் காக்கா கதை நல்லதொரு எழுத்துச் சான்றையும், புலிப்பானி ஜோதிடர் போலி வழிபடல்களை ஆராயச் சொல்லியும், பூனைகள் யானைகளான கதை மாறும் காலத்திற்கேற்ப அல்லலுறும் எழுத்துச் சுதந்திரத்தைக் கிண்டல் செய்தும் நிறைவடைகிறது தொகுப்பு.

பட்டாளத்து வீடு - சாம்ராஜ்

Image
கிண்டிலில் வாசித்த முதல் புத்தகம் ... வாசிப்பை சிறுகதைகளுக்கு நேர்ந்துவிட்ட வருடத்தில் எதிர்பாராமல் கிடைத்த சுவாரஸ்யமும் சுவையும் நிரம்பிய கதைக்கொத்து. கதைகளின் வேண்டுதலுக்கேற்ப விதவிதமானதும் துல்லியமானதுமான காட்சி விவரிப்புகளுடன் கச்சிதமான நகர்த்துகளும் இணையும் போது கதைகள் மனம் நிறைக்கும். பெரும் சோகத்தையும் வலியையும் இழப்பையுமே முடிவாகக் கொண்டிருந்தாலும் அனைத்துக் கதைகளுக்குள்ளும் மனிதமும் அன்பும் மற்ற ஜீவிகளுக்கான கருணையும் அழுத்தமாக பதிந்திருக்கிறது. களி என்ற கதை இன்னும் பெருமளவு நீண்டும் ஆழ்ந்தும் ஒரு நாவலாகவே வெளிப்பட்டிருக்க வேண்டுமென்ற ஆசையை உள்ளூர உண்டாக்கியது. அனைத்துக் கதைகளுமே பக்க அளவில் சிறுத்திருந்தாலும் வாசித்துப் நெடும் நேரத்திற்கு பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. கவிஞர் சாம்ராஜ் அவர்களே நிறைய எழுதுங்கள் ப்ளீஸ்

கெடைகாடு - ஏக்நாத்.

Image
கெடைகாடு - ஏக்நாத். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரான போஸ்பாண்டி, கோடி, மாப்பிள்ளை நண்பர் , சீப்பு வைத்து சீவாத ஏ.ஆர். ரஹ்மான் காமெடிக்காரர், ஜெர்மனியில் முறுக்குச் சுடுபவரின் மாமா என எல்லாருமாகச் சேர்ந்து மாடுமேய்க்கக் காட்டுக்குள் சென்று சில நாட்கள் தங்கியிருக்க சிவனாண்டியும் கூட்டுக்கைகளான அந்த நாலு பேரும் ஊருக்குள் வரும் பஞ்சாயத்துகளைப் பார்த்துக் கொண்டிருக்க ஏழரை மூக்கன் பொம்பளைகளிடம் அத்துமீறி அடிவாங்கி ஊரவிட்டு ஓட என சம்பவங்கள் ஒரே கதையாக நீண்டால் எப்படி இருக்குமென நக்கலும் நையாண்டியுமாக கண்முன்னே கொண்டு வந்து அனுபவிக்க வைக்கிறது நாவல் ... வர்ணனைகளற்ற அசலான பழைய கிராமத்து வாழ்வியலை எழுத்தில் வாசிப்பது இதுவே முதல் முறை. ஒரு காட்சியை விவரிக்கும்போதே அக்காட்சிக்குள் நாமும் ஒருவர் அல்லது நாமும் ஒரு மூலையில் நின்று அக்காட்சியை வேடிக்கை பார்க்கிறோம் என்று நினைக்க வைக்கிற எழுத்து எப்போமே தனி சுகமும் பெரு வெற்றியும் தான். வாசகனுக்கும் எழுத்தாளருக்குமிடையே புத்தகமென்ற அச்சிட்ட பிரதியின் இடைவெளியைக் குறைப்பதுதான் தேர்ந்த எழுத்தின் அடிப்படை. அதை இந்த நாவல் சிறப்பாக அணுகியிருக்கிறது. &

தாழிடப்பட்ட கதவுகள் - அ.கரீம்

Image
அமைதியிழப்பிற்குச் சாட்சியாகும் ஆவணங்கள்... கோவை மாநகரில் நான் வசிக்கும் பகுதியிலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில், 90 களின் இறுதியில், குறிப்பிட்ட ஒரு மத மக்களுக்கு எதிராக நடந்தேறிய கொடும் வன்முறைகளைப் பற்றி அறிய அன்று போதிய வயதின்றியும் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னவெல்லாமோ நடந்தபோதும் எந்தச் செய்தியுமறியாமல் கடந்து வந்துவிட்டு இன்று அதுசார்ந்த வாசிக்க வாசிக்க அத்தனை அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உருவாக்குகிறது. எத்தனையோ முறை நடந்த வீதிகளில், நன்கறிந்த சாலைகளில் இப்படியெல்லாம் அதிகாரவர்க்கமும் அதுகொடுத்த தைரியத்தில் உள்நுழைந்த மதவெறியர்களாலும் திட்டமிட்டு மனிதம் அழிக்கப்பட்டிருக்கிறது என்று அறியவரும் வேளையில் அந்த வீதிகளில் அலறிய ஓலம் இன்றும் தொகுப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் கேட்கிறது. ஒரு குண்டுவெடிப்பு ஒரு சம்மந்தமில்லாமல் கூட யார்யாரையெல்லாம் தேடித்தேடி விரட்டிப் பிடித்து அவர்களின் மொத்த வாழ்வையுமே சிதைத்திருக்கிறது என்பதைப் பற்றிய சிறிய சித்திரத்தைக் காணும் போதே கண் நிறைகிறது. ஆனால் இன்று எந்தக் கரம்பிடித்து அவர்கள் மேலே எழுந்து வந்திருப்பார்களென்ற கேள்விக்கு முன்

சாலப்பரிந்து - நாஞ்சில் நாடன்

Image
மதிப்பீடுகளுக்குக் கூட அல்லாமல் குறைந்தபட்ச வேண்டுதல்களாகவேணும் கதை இலக்கணங்கள் இயல்பாக அமையப் பெற்று கதையை வாசிக்கும் மிகக் குறைந்தபட்ச காலத்துக்குள் அக்கதையை அனுபவிக்கச் செய்து மிக அதிகபட்ச காலம் நம் மனதில் இருந்து நீங்காமல் இருக்கச் செய்வது தேர்ந்த எழுத்தில் விளைந்த நல்ல கதை. கிழிசல் என்ற ஒரு கதை போதும். கதை எப்படி இருக்க வேண்டுமென்ற எடுத்துக்காட்டுக்கு ...

ஆதவன் கதைகள்

Image
"வித்தியாசங்கள் தான் ரசனையையும் கவர்ச்சியையும் தூண்டுகிறது. உலகைப் படைக்கின்றன. வித்தியாசங்கள் தான் வெறுப்பையும் தூண்டுகிறது. உலகை அழிக்கின்றன". - ஆதவன். *** ஆதவன் அவர்கள் கதைகள் எழுதிய காலத்தையும் அக்கதைகளுக்கான வயதையும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் மாயாத புத்துணர்ச்சியையும் நம்பத்தான் மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கிறது. மனித மனதை ஊடறுத்துச் சென்று உட்தளங்களைத் துளைத்துக் கண்டுவிடத் துடிக்கும் அவரது கலைநோக்கு காலங்கள் கடந்தும் அத்தனை வெளிச்சத்தோடு பாய்கிறது. அந்த வெளிச்சம் நிஜங்களின் பிம்பமாகப் படியும் நிழலிலிருக்கும் உண்மைகளையும் போலித்தனங்களையும் உருமாற்றம் செய்து காணச் சொல்கிறது. கண்டு தெளிய முயற்சிப்போம்
Image
வீடென்ப-தேவிபாரதி வீடென்ப தொகுதியின் முன்னுரையில் தேவிபாரதி பின்வருமாறு குறிப்பிடுகிறார் ... " யாராவது ஒரு வாசகர் இருபதாண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய சிறுகதையை வாசித்து விட்டு இன்றைக்கும் அதைப் பற்றிப் பகிர்கிறார், எனைக்காணும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது நெருங்கி நின்று என்கைகளை மிருதுவாகப் பற்றிக் கொள்கிறார்." அவர் குறிப்பிட்ட அந்த வாசகர் இன்றைக்கு நான் தான். தொடங்கி வளர்ந்து முடியும் வரை உள்ளூர ஒரு சீரான அதிர்வையும் தீவிரத்தையும் உணர்த்தி வாசிக்க வாசிக்க பித்துப் பிடிக்கச் செய்துவிடும் எழுத்தைக் கொண்ட கதைகள் நிறைந்த இரு தொகுப்புகளையும் வாசித்து முடித்ததும் இத்தனை நன்றாக எழுதுபவர்கள் ஏன் நிறைய எழுதுவதில்லை என்ற விடையற்ற கேள்வி எனக்கும் தோன்றாமலில்லை