எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்.

எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன். காவல்,கற்பு, குளம் ,பெருமை என்ற சொற்கள் எல்லாம் மனித அகராதியில் என்று வந்து சேர்ந்தவை என்று தெரியவில்லை. சொற்கள் மட்டுமே மேலும் மேலும் சேர்ந்திருக்க வேண்டும் கரையான் புற்று வளர்வதைப்போல. சொற்களுக்கு அச்சப்பட்டுப் பதுங்கித் திரியும் மனிதன் சொற்களைத் தூக்கித் தூர ஏறிய முடியாமல், சொற்களை சுமந்து திரியும், முகமூடியாய் அணிந்து திரியும், வெறுமனே வாயிலிட்டு வெற்றிலை பாக்கு போலக் குதப்பித் திரியும் மனிதன். தொண்டைக்கும் சிக்கிக் கொண்ட மீன்முள் போல தோற்றம் கொடுப்பன சொற்கள். - நாவலிலிருந்து... இப்படியாகச் விளைவுகளறியாமல் ஏவப்பட்ட சிலபல விசச் சொற்களின் வழியே சாதி மீறலாகவும் இளமைத் துணிவாகவும் குலக் குற்றமாகவும் மாற்றப்பட்ட - செய்யாத ஒரு - பாவத்துக்கு சாதிக் காப்பாளர்களால் வன்மமாகத் தண்டிக்கப்பட, அதற்கு பதிலடியாக வேண்டுமென்றே ஒரு பாவம் செய்துவிட்டு தாய் தந்தையை பிரிந்து படிப்பைப் பாதியில் விட்டுட்டு ஊர் விட்டு நீங்கி ஊர்ஊராய் போய் கூரைக்கும் கஞ்சிக்கும் வழில்லாமல் கொடும்பாடுபட்டுப் பிழைக்கும் இளைஞனின் கதையே இந்நாவல். வாழ்க்கையென்பது எட்டுத்திக்கும் சாமரம் வீசும் மலர்ப் பொய்கைகளால் ஆனதல்ல என்றும் அது நீங்கள் எட்டு வைக்கும் பக்கமெல்லாம் கூரியதும் வலியதுமான தந்தங்களை உடைய யானைகளை நிறுத்தி வைத்து ஒவ்வொரு நொடியும் உங்கள் மனதையும் செயலையும் பரிசோதிக்கவும், நீங்கள் தவறவோ மீறவோ செய்யும் போது அது உங்களை பலிபோட்டு விடும் ஆதலால் உயிர்பிழைத்தல் மட்டுமே இங்கே முக்கியம் என்பதுமாக பக்கத்துப் பக்கம் அத்தனை கசப்பான உண்மைகளோடும் விரிகிறது நாவல். அறத்தின் படியான ஒரு வாழ்வென்பது கற்பனையே என்றும் அப்படியான ஒரு நிஜ வாழ்வுக் கனவுக்கு விலையாக நாம் நம் உயிரையே கொடுக்க வேண்டியிருக்கும் என்ற தத்துவ விவாதங்களை இடையிடையே நிகழ்த்திப் பார்த்துக் கொண்டும் இயல்பின் இன்னல்களையும் இனிமைகளையும் ஒருசேர அனுபவித்துக் காலத்தை ஓட்டும் கதாபாத்திர மனங்களின் போக்கிலும் செல்லும் கதை தகுவன தப்பித் பிழைக்கும் என்ற மறுதலிப்புக்கு உள்ளாகாத முடிவில் வந்து நிற்கிறது. நான் நாஞ்சில் நாடன் அவர்களை வாசிக்க தேர்வு செய்ததில், தென்தமிழக கிராமமொன்றிலிருந்து வேலைக்கு வேண்டியோ உயிர் தப்பிக்க வேண்டியோ பம்பாய் போய்சேர்ந்து அங்கே வாழும் இளைஞர்களின் கதையாக இது மூன்றாவது நாவல் எதேச்சையாக. அதனால் கடந்த ஒரு வாரமாக பகிர்வு அறைகளில் தங்கிக்கொண்டு, சுமாராகவேனும் அனால் வாய்க்குத் தக்கன வழங்கும் ஹோட்டல்களில் மாதக் கணக்கு வைத்து சாப்பிட்டுக் கொண்டு பம்பாய் வீதிகளில் சுற்றித் திரிவது போலவே உணர்கிறேன்.அந்த அளவிற்கான உளப்பாதிப்பை ஏற்படுத்துமும் அருஞ்சொத்தான அனுபவப் பகிரல்களும் போலியற்ற எழுத்தாக்கமும் வணங்கத்தக்கது.

Comments

Popular posts from this blog

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.