மிதவை - நாஞ்சில் நாடன்
மிதவை - நாஞ்சில் நாடன்
கேரளாவில் பிறந்து படித்த அந்தக் கால பத்தாம் வகுப்பு படிப்பிற்குத் தோதான வேலையுமின்றி பஞ்சம் பிழைக்கத் தமிழகம் வந்துசேர்ந்து ஏதேதோ கிடைத்த வேலைகள் எல்லாம் செய்து கடைசியாக ஓரிடமாத் தொடரவேண்டி காட்டன் மில்லில் வேலைக்குச் சேர்ந்து அங்கேயே பெண்பார்த்துக் காதலித்துத் திருமணம் செய்து அத்திருமணத்தால் வந்து சேருமென்றிருந்த புதிய சொந்தமெல்லாம் விலகி நிற்க யாருடைய துணையுமின்றி இரண்டு பையன்களை பெற்று வளர்த்துப் படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துவிட்டு அவர்கள் இடும் உணவை உண்டு வந்தாலும் இன்றும் பழைய வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டு முதுமையைக் கழித்துக் கொண்டிருக்கும் என்னுடைய அப்பா எப்போதும் " நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தில் கஞ்சிக்கு வழியில்லாமல்" என்று ரிப்பேர் ரெக்கார்டு போல பாடாவிட்டாலும் எப்போதாவது நாங்கள் வெட்டிச் செலவு செய்துவரும் போது அவர் மாற்றுச் சட்டையில்லாமல் கூட ஊர்விட்டு ஊர்வந்து பிழைத்த கடந்த கால வறுமையைச் சுட்டிக் காட்டித் திட்டுவதுண்டு. அதெல்லாம் இன்று கேட்கும் போது எழும் பொதுவான சிரிப்பிற்குப் பிறகு சற்றே நினைத்துப் பார்க்கையில் வலிக்கவே செய்யும்.
அப்படியான ஒரு சண்முகம் தமிழகக் கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்துவிட்டு வேலையின்மை காரணமாக மாநிலங்கள் தாண்டிப் போய் வேலை தேடியலைந்து கிடைத்த சிறிய வேலையையும் தக்க வைத்துக் கொள்ளவும் முன்னேற்றங்களின்றி தொடரவும் வேண்டிய சூழலிலும் தலைசாய்த்துத் தங்கவும் உண்ணவும் இளைமை இன்னல்களைக் கடக்கவும் இன்றைக் கழிக்கவும் நாளையைக் கனவுகாணப் பணம் சேர்க்கவும் என எத்தனையோ கொடுமைகள் அனுபவித்து ஏதாவது ஒரு மிதவை கிடைத்து தான் இந்த துன்பக்கடலிலிருந்து மீண்டுவிட மாட்டோமா என நினைப்பிலேயே நீந்திக் கொண்டிருக்கும் கதை இந்த நாவல். இந்த நாவல் முழுக்க எனக்கு சண்முகத்தின் முகமாக என் அப்பாவின் முகமே தான் நிலைத்து நின்றுவிட்டது. இப்படியான கொடூரக் காலங்களிலும் நம்மைக் கொண்டாட்டமாகவே வளர்த்த பல அப்பாக்களின் கதையைக் கேட்க ஆரம்பித்தால் நம்முடைய இன்றைய ஆடம்பரங்களின் மீது நமக்கே வெறுப்பு வந்து திருந்தத் தொடங்கி விடுவோமென நினைக்கிறேன்.
இன்றைய தலைமுறைக்குச் சொன்னால் நம்பக்கூட முடியாத வறுமைக்காலங்களில் பிறந்து வளர்ந்து படித்து வேலைதேடி குடும்பம் காத்து வாழ்ந்த காலத்தில் திரும்ப நினைத்துப் பார்த்துக் கொள்ள சுகானுபவங்கள் ஏதுமற்று முதுமையில் சீந்துவாரற்றுச் செத்தும் போன தன்னலமற்ற கோடான கோடி மனிதர்களின் அசல் துன்பியல் பிரதி இது.
Comments
Post a Comment