செடல் - இமையம்.

செடல் - இமையம். 

விளையாட்டுப் பிள்ளைய 
வீதிக்கு இழுத்தாங்க 
எனையென்ன கேட்கன்னு 
வினையொன்னு செஞ்சாங்க 

மழைக்கு நேர்த்தின்னு 
மந்தைக்கு வரச்சொல்லி 
சாமிக்கு நேர்ந்ததாக 
சாதிக்காரங்க சொன்னாங்க 

பெத்தவங்கள விட்டுட்டு 
பிறந்தவங்கள விட்டுட்டு 
அனாதையா வரச்சொல்லி 
அதிகாரமா அழைச்சாங்க 

நடப்பதெல்லாம் புரியாம 
நினைவெல்லாம் தெரியாம 
தடுமாறி நிக்கையிலே 
தலமசிரச் சிரைச்சாங்க 

வண்ணமாத் துணிகொடுத்து 
வயிராறச் சோறுபோட்டு 
பண்டிக முடியட்டும் 
பண்டுதமும் பண்ணாங்க 

சாதியில கீழன்னாலும் 
சாமியாக் கும்பிட்டு 
மக்க பஞ்சம் தீர்க்க 
மழவேண்டச் சொன்னாங்க 

ஊர உறவுன்னாங்க 
கோயில வீடுன்னாங்க 
கடவுளக் கைக்காட்டி 
காலத்துக்கும் துணைன்னாங்க 

வறுமைக்கு வாக்குப்பட்ட 
சிறுமையில சீர்பட்ட 
அன்பான பெத்தவங்க 
அனாதையாக்கிப் போனாங்க 

மழைவந்து சேர்ந்ததும் 
மக்கட்பஞ்சம் தீர்ந்ததும் 
சாமின்னு கும்பிட்டவங்க 
சாதிசொல்லி ஏசினாங்க 

கும்பிட்ட கையெல்லாம் 
கொட்டத் துணிஞ்சிருச்சு 
ஏந்திய சனமெல்லாம் 
எடுத்தெறிஞ்சி பேசிருச்சு 

வயசுக்கு வந்தும் 
வழியத்து நின்னப்ப 
ஊத்துற மழையில 
ஊரவிட்டு துரத்தினாங்க 

இருக்க இடம்தேடி 
இன்னொரு ஊருபோனேன் 
பிழைக்கும் வழியாக 
உழைப்பைத் தேடிப்போனேன் 

நாடகக் கம்பெனில 
நானா ஆடல 
ஆணாச் சேர்த்த 
ஆசைக்கு ஆடினேன் 

பொன்னா இருந்தாலும் 
உரசிப் பார்ப்பாங்க 
பொண்ணா பிறந்துவளுக்கு 
புலம்பாத பிழைப்பிருக்கா 

அரிதாரமே அழகாச்சு 
ஆட்டமே வாழ்வாச்சு 
ஆடாத நாளுமில்ல 
ஆடாத இடமுமில்ல 

வீதில பார்த்தவனுக்கு 
விலையான வேசை 
கூத்துப் பார்த்தவனுக்கோ 
கூடப்படுக்க ஆசை 

ஆயுசுக்கும் துணையாய் 
ஆண்டவனே போதும்னும் 
ஆணே வேண்டாம்னும் 
அழுத்தமா இருந்துபுட்டேன் 

கலையைக் காவலாக்கி 
கண்ணீரத் துடைச்சிகிட்டேன் 
ஒழுக்கமே பக்தின்னு 
உள்ளுர நினைச்சுகிட்டேன் 

தனிமையே நிலையின்னு 
காலத்த ஓட்டிவந்தேன் 
மாறாது வினையுன்னு 
மனச நானும் தேத்திகிட்டேன் 

சாமிக்கும் சாதிக்கும் 
பூமியில வேலையில்ல 
சனத்தக் காப்பதற்கு 
சனமே போதும் மக்கா

Comments

Popular posts from this blog

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.