கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.
கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.
புதியதொரு வாழ்வனுபவம் ....
நான் வாழும் சூழலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கைய கற்பனையாக வாழ்ந்து பார்த்திட வேண்டுமென்ற ஆசையில் தான் நான் பெரும்பாலும் வாசிக்கவே செய்கிறேன். தொடர்ந்து அவ்வகை அனுபவங்களைக் கொடுக்கும் புத்தகங்களையே தேர்வு செய்து வாசித்தும் வருகிறேன். அப்படியான வகையில் மலையை நம்பி மலைக்கு மேலேயும் கீழேயும் வாழும் மக்களின் வாழ்வியலைப் பற்றிய இந்தக் கதை அம்மக்களோடு ஒருவனாக அவர்களின் நல்லது கெட்டதுகளை மலையிலும் தரைக்காடகாட்டிலிருந்து கழுதைகளோடு பயணப்பட்டுக் கொண்டே கிட்ட இருந்து பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது.
சாதியத்தின் கீழ்மைகளும், சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் விளையும் ஏகாதிபத்திய - அடிமை மனோபாவ இயல்புகளும் பெரும் உருவெடுத்து நின்றாடிய காலத்தைத்தான் பழையகாலம் என்பதை, எந்த மறுமலர்ச்சிப் பாதைகளும் கண்டடைந்திராத, எந்த பொதிச்சுமையும் குறைந்தடாத கழுதையினும் தாழ்ந்தபடி வாழும் இக்காலத்திலும் நம்ப மறுக்கிறது மனம்.
வருடத்துக்கு ஒரு முறை தானென்றாலும் மணிக்கணக்கில் காத்திருந்து உண்ணும் இட்லிக்குக் கொஞ்சம் கூடுதலாகச் சாம்பார் கேட்டவர்கள் மீது சுடுதண்ணியை ஊற்றுவதாகட்டும் தனக்குத் திருமணமென்று அழைப்பிதழ் கொடுக்க வந்தவனிடம் வீட்டு வேலைகளைச் சொல்லி செய்யக் கட்டாயப் படுத்துவதாகட்டுமென நாவல் முழுக்க முதலாளிகள் தங்களின் தொழிலாளர்கள் மீது காட்டும் அதிகாரமெல்லாம் மனதளவில் நொடியச் செய்யும் வன்முறைகளாகப் பாதிக்கிறது. தலைமுறைகளாத் தொடர்ந்த அடிமைக் குடும்பங்களிலிருந்து சில சிறுவர்கள் பள்ளி செல்வதாகக் காட்டுவதிலிருந்து கல்வியின் மூலம் தான் கொஞ்சமேனும் முன்னேற்றமடைந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
மலையிலும் தரைக்காட்டிலும் மலைவாழ் மக்கள், தோட்ட முதலாளிகள் - தொழிலாளர்கள், பொதி சுமையாட்கள், கழுதையோட்டுபவர்கள், வியாபாரிகள், என பலரின் கதை சொல்லும் நாவலில் தொழிலுக்குப் போய் சாதிமீறி ஆசைப்பட்டதாகக் குற்றம் சொல்லிப் பிரிக்கும் செல்வத்தின் காதல் தோற்கும் சூழலும் வெகுகாலத்திற்கு முன் நடந்த ஒரு மீறலால் குடும்பம் அழிந்த கதை நாயகனான மூவண்ணாவின் கழுதைகள் தீக்கிரையாகும் சூழ்ச்சியும் கண்ணீர்த் தடங்களாகப் அழுந்திப் பதிகிறது
மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தைக் கொஞ்சம் நினைவுறுத்துகிறது நாவல். ஒருசில போதாமைகள் இருந்தாலும் வாசிக்க புதியகளம்.
Comments
Post a Comment