பான் கி மூனின் றுவாண்டா - அகரமுதல்வன்
நீ எப்பொதும் என் இதயத்தின் நீர்ப்பரப்பில் நீந்திக்கொண்டே இருக்கிறாய். நினைவின் பேரிரைச்சல் எழுகிற போதெல்லாம் உனது பிம்பங்கள் தான் என்னில் மிதக்கிறது. உன் மெல்லிய விரல்களால் என்னை ஸ்பரிசிக்கும் அந்தக் கணங்களை நான் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கனவிலும் வாழ்விலும் நம்மை ஏமாற்றும் இந்த யுத்தத்ததை நம்மால் ஏமாற்றவே முடியவில்லை.
- அகரமுதல்வன்
பெற்றோர் அன்புடன் குழந்தைக் குறும்புகளையும் கவின் காதலுடன் இளமையையும் தோழமை நண்பர்களுடன் நேசக்காலங்களையும் சூளும் சுற்றத்தாருடனும் சுகதுக்கங்களில் இயல்பாக இணைந்திருந்து வாழ்வாங்கு வாழ்ந்து தீர்த்திருக்கவேண்டிய ஒரு வாழ்வு உரிமைக் குரல்களுக்காகவும் கடமைக் காரியங்களுக்காகவும் போர்க்களம் புகுந்து துரோகம் சூழ்ந்தடித்த துயரக் காற்றில் கரைந்து காணமல் போய்விட்ட கனவுகளாகக் கொன்றொழிக்கப்பட்ட கண்ணீர்க் கதைகளின் தொகுப்பு. விடுதலை என்பது சுவாசமெனப் புறப்பட்ட உயிர்கள் அழிந்தும் தொலைந்தும் போன இக்கதைகளை வாசிக்கும் போதே நாமடையும் ஆற்றாமையும் அச்சமும் களத்தில் நின்று அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறபோது இருமடங்காகி விடுகிறது.
இந்திய அமைதிப்படை பிஞ்சும் குழந்தையின் ஈரலைத் துப்பாக்கியால் துளைப்பதும் இயக்க வீரனின் காதலி தனிமையில் உழன்று உயிர் நீத்த காதலியை அணைப்பதும் உடும்பு வேட்டைக்கு முயலுடன் போகும் வேட்டைக்காடும் இளம் அகதி புலம்பெயர் நாட்டில் பெயரற்றலைவதும் பூ ராணி கண்ணிழந்த கரைசேரா மகளை அனாதையாய் விட்டுவிட்டு மரிப்பதும் கொலையை நியாயமெனச் சொல்லச் செய்யும் கொடுமையும் படிக்கப் படிக்கப் பதைபதைக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளுக்கான மரிப்பில்லா சாட்சியங்களே
வரும் காலங்களிலேனும் அனைவருக்கும் அமைதி மலரட்டுமென வேண்டுவதைத் தவிர அவர்கள் முன் நாம் தலை நிமிர வக்கற்றவர்களாயிருக்கிறோம். புறக் கவனம் பெற்று மலர்ச்சி உருவாகிட இந்த எழுத்துக்கள் வேண்டுவதும் அதைத்தான்.
அகரமுதல்வனின் அழகிய தமிழில் நுண்ணிய விவரணைகள் காதல் கணங்களையும் கண்ணீர்த் தருணங்களையும் சமர்க்கள சந்தர்ப்பங்களையும் சங்கடப் பொழுதுகளையும் வாசிப்பவர் மனம் நினைத்து நினைத்து மகிழவும் கலங்கவும் உரைநடைக் கவிதைகளாக மாற்றிக் கொடுத்திருக்கிறது.
Comments
Post a Comment