யாம் சில அரிசி வேண்டினோம் - அழகிய பெரியவன்
யாம் சில அரிசி வேண்டினோம் - அழகிய பெரியவன்
எங்களுடைய வாட்சப் குழுவில் அடிக்கடி சில விவாதங்கள் வரும். எழுத்தாளர் எதை எழுத வேண்டுமென்று வாசகர்கள் தீர்மானிக்க முடியுமா ? அல்லது வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப எழுத்தாளர்கள் எழுதுவார்களா? காலத்தின் தேவைக்கேற்ப புதிதுபுதியாய் உருவாகும் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்தும் அதையொட்டியே வரும் பிரச்சினைகள் குறித்தும் இலக்கியத்தில் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறதா ? என்றெல்லாம் விவாதங்கள் நீண்டுபோய் கடைசியாய் - எல்லா வகையான புத்தகங்களும் தான் வருகிறது. விருப்பத்திற்கேற்பத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள் - என்ற வேறுவழியின்று கொடுக்கப்பட்ட இறுதித்தீர்ப்போடு முடியும்.
ஆனாலும் இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும் கதைக்களம் நான் இத்தனை ஆண்டுகாலம் வாசித்த மற்றும் கேள்விப்பட்ட அளவில் ஒருமுறைகூட இத்தனை அழுத்தமாகவும் விரிவாகவும் பேசப்படாததும் பதிவுசெய்யப்படாததுமான ஒரு எளியதும் கொடியதுமான கதை. இந்தக் கதையில் வரும் சம்பவம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்நாளில் அடிக்கடி அல்லது ஒருமுறையேனும் எதிர்கொள்ளாமல் கடந்திருக்கவே வாய்ப்பில்லை. அப்படிக் கடந்திருந்தால் அவர்கள் பணம் படைத்தவர்களும் உயர்சாதி அதிகாரம் படைத்தவர்களுமாகத்தான் இருப்பார்கள். அரசை நம்பிப் பிழைக்கும் எளிய மக்கள் இதிலிருந்து தப்பியிருக்க வாய்ப்பேயில்லை.
அரசு அலுவலகத்தில் பொதுமக்களுக்கு என்னமாதிரியான வரவேற்புகளும் வசைகளும் அலட்சியங்களும் அவமானங்களும் பண இழப்புகளும் நேர விரயங்களும் கிடைக்கப்பெறுமென்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏதோ ஒரு அரசு அலுவகத்தில் கேட்கப்படும் ஒரு சான்றிதழுக்கோ சேவைக்கோ இன்னொரு அரசு அலுவலகம் செல்லும் போதும் அரசு வேலைக்காக விண்ணப்பிக்கச் செல்லும் அலுவலகங்களில் எளிய கல்வியறிவற்ற அல்லது பணமற்ற படித்தவர்களிடம் தனது அதிகாரத்திமிரைக் காட்டாத அரசு அலுவலர்களைக் காண்பதென்பது கிட்டத்தட்ட கடவுளைக் காண்பதற்குச் சமம். இது மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் அரசு அலுவலகங்களிலேயே பழக்கப்பட்டு விட்ட போது சுய பணத்தைப் போட்டு நடத்தப்படும் இப்போது தனியார் துறைகளிலும் தாங்கிக் கொள்ள முடியாத அளவு தாண்டவமாடுகிறது.
ஒரு நாளைக்கு ஆயிரம் பீடிகளைச் சுத்தி இரண்டு ரூபாய் சம்பாதிக்கும் ஒரு தந்தைக்கும் அதைவிடக் குறைவாகவோ அல்லது கூலியே இல்லாமல் பணியெடுத்துப் பிழைக்கும் தாய்க்கும் மூத்தமகனாகப் பிறந்து
படிப்பு முடித்து வேலைக்காக காத்திருக்கையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனது வேலைக்கான காத்திருப்பு நிலவரம் குறித்து ஒரு சிறுகேள்வியை எழுப்பிய போது அக்கேள்வி அவனின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் ஒரு பிரச்சினையாகவும் நீண்டு வழக்காகவும் ஒரு திமிர்பிடித்த அதிகாரியால் மாற்றப்பட்டும் ஒரு ஆண்டுக்கு மேல் அதுசார்ந்த வழக்குக்காக அலைக்கழிக்கப்பட்டும் மொத்தக் குடும்பத்தையும் நிம்மதியிழக்கச் செய்தும் அந்த வழக்கால் இருக்கும் வேலையை விட்டுவிட நேர்ந்து வீட்டிலிருக்கும் பொருட்களை விற்கவேண்டிய சூழல்கள் அமைந்து அரசியலறிவும் சட்ட அறிவும் கொண்ட சில நண்பர்களின் துணையோடு ஆர்பாட்டங்களும் சட்டப் போராட்டங்களும் நடத்தியு ஒருவழியாக வழக்கிலிருந்து விடுதலை பெறுகிறார்.
இந்தக் கொடுமைக்குப் பணத்திலும் ஜாதியிலும் கீழான நிலையிலிருப்பது மட்டுமே அல்லாமல் வேறென்ன காரணம் இருக்க முடியும். எளியவர்களின் மீதான அடக்குமுறைகளுக்குச் சாட்சியாக இந்த நாவலில் இரு சந்தர்ப்பங்கள் வருகிறது. இரண்டும் அரசின் மூத்தநிலை அதிகாரிகள் எளிய மக்களை மன அளவிலும் உடலளவிலும் மிகவும் கீழ்மையாகத் தாக்கும் நடவடிக்கைகள். இந்த இரண்டு காட்சிகள் தான் எத்தனையோ நூற்றாண்டுகளாய் மக்களின் மீது அரசுக்கிருக்கும் மனப்பான்மையை வெட்கக் கேடாய் முகத்திலறைகிறது.
நம்மிள் எத்தனையோ பேர் இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா என்று இலகுவாக எடுத்துக் கொண்டு ஒரு அதிகாரி ஒரு தவறும் செய்யாத நம்மை இகழ்ந்தைக் கடந்து வந்திருப்போம். அது அவர்களுக்கும் நம்மைப் பார்த்து மக்கள் பயந்துவிட்டார்கள் என்று பெருந்திமிராகப் பழகி விட்டது. நாமும் வேலை நடந்தால் போதுமென மழுங்கிவிட்டோம். ஆனால் இந்த நாயகன் அப்படி விலகாமல சற்றே எதிர்த்துக் கேள்வி கேட்கிறான். தன்னை அவமானப்படுத்திய அதிகாரிக்கு எதிராகப் போராடக் களமிறங்குகிறான். போதிய அச்சுறுத்தல்களுக்கும் அறிவுரைகளுக்கும் இழுத்தடிப்புகளுக்கும் இடையில் வெளியே சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் ஒரு சிறிய விடுதலையை அடைகிறான். எதைப் பற்றியும் பயமின்றி எதிர்த்துக் கேள்வி கேட்டால் இங்கே எந்தக் கதவும் திறக்குமென உணர்கிறான்.
தானுண்டு தன் சிறிய வாழ்வுண்டு என்றும் எந்தப் ஒரு பொது விவரமுமற்றவர்களாக
வாழ்ந்து வருபர்கள் ஒரு பிரச்சினை என்று வரும்போது தேடி ஓடுவது விபரமறிந்த ஆட்களைத் தேடித்தான். அவர்கள் துணையில்லாமல் எந்தக் காரியமும் இவர்களால் செய்யமுடியாது. அப்படித் தேடிப் போய்ச் சேருபர்களும் நல்லவர்களாய் இருக்கும் பட்சத்தில் இந்தக் கதை நாயகனைப் போல் தான் மாட்டிக் கொண்ட வழக்கில் சிறுவெற்றியாவது கிடைக்கிறது. அவர்களும் கெட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் ஏழைகளின் நிலை நினைத்துப் பார்க்கவே முடியாதவாறு நம்பியவர்களாலும் ஏமாற்றப்பட்டு விடுகிறார்கள்.
தனக்கான ரொட்டியைத் தன் வேலைக்கான கூலியாக மக்கள் வரிப்பணத்திலிருந்தே பெற்றுக் கொண்ட போதும் ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ளவும் மக்களின் குருதியையே எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் வேண்டி நிற்கும் அரசு அலுவலர்கள் மீது என்றைக்கும் தீராத வெறுப்பிற்கு மேலும் எடை கூட்டியிருக்கிறது இந்த நாவல்.
அரசு இயந்திரத்தைக் கட்டியாளும் ஊழியர்கள் தினம் தினம் எத்தனையோ எளிய மக்கள் மீது நிகழ்த்தும் வன்முறையைப் இத்தனை அழுத்தமாகப் பதிவுசெய்த அழகிய பெரியவன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்
Comments
Post a Comment