சதுரங்கக் குதிரை - நாஞ்சில் நாடன்
சதுரங்கக் குதிரை - நாஞ்சில் நாடன்.
நாவல் வாசித்து முடித்துவிட்டு சதுரங்கத்தில் குதிரையின் செயல்பாடு எப்படி இருக்குமென்று போய்ப் படித்தேன். சதுரங்கக் கட்டத்தில் அரைப்பகுதி மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் ஆனால் ஏனைய காய்களை கடந்து செல்லக் கூடிய சிறப்புத்தகுதி வாய்ந்ததுமாகும். இந்த இருபண்புகளும் வாழ்வின் இயல்பான போக்கில் ஒருங்கமைந்துவிட்ட ஒரு மனிதனின் தனிமை வாழ்வை காலச்சக்கரத்தில் முன்பின் ஓட்டிக் காட்டுகிறது இந்த நாவல்.
தாய் தந்தை, இல்லையென்றலும் கைத்தாங்கலுக்குச் சொந்தமிருக்கிறது, கை நிறையச் சம்பளம் வரும் வேலையிருக்கிறது , உழைப்புக்குப் பின் உட்கார்ந்து சாப்பிடச் சேமிப்பிருக்கிறது - இன்னும் மீதமிருக்கும் வாழ்வை இறுகப்பற்றிக் கொள்ள, ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ள - இன்னும் என்ன குறை? என்ன தேவை ? என்ற நினைப்பு தவிர்க்க முடியாத கேள்வியாய் நின்றாலும் காலத்தே செய்யத்தவறிய ஒன்றைப் பிறகு எப்போது நினைத்தாலும் திட்டமிட்டுக் கூட செய்யவே முடியாமல் போக்கடிக்கும் சலிப்புற்ற மனமும் நிலையும் வாய்த்துவிடுமென்ற எத்தனையோ எடுத்துக்காட்டுகளுள்ள கதையை நாவலாக்கியிருக்கிறார்
ஒருவருக்கு திருமணம் என்ற நிகழ்வு நிகழாமற்போகிற போது ஏற்படுகிற சமனிலைக் குலைவை, சமூகத்தினுள் உண்டாகும் இடைவெளியை, அடுத்த மனிதர்களுக்கு உண்டாகும் பார்வைக் குளறுபடிகளைக் கடந்து இயல்பான ஒரு வாழ்வு வாழ்வது அத்தனை சாதாரணமில்லையென்பதையும் இன்னொரு ஆளால் தீர்மானமாகும் தன்னுடைய எதிர்காலத்தில் தமக்கென எதுவுமென இல்லாமாற்போகும் சூன்யத்தைச் சுமந்துகொண்டே காலம் தள்ளும் ஒரு மனம் அத்தனை அழகாகவும் அழுத்தமாகவும் பதிவாகியிருக்கிறது
நான் ஆசிரியரின் சிறுகதைகளிலேயே வியந்தவாறு அவரின் கச்சிதமான புதுமையான விவரணைகள் காட்சியை இயல்பபாகவும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் கொண்டு வருகிறது. அலுவலக இயக்கத்தை அவர் விவரிக்கும் காட்சியில் மனதுள்ளே ஒரு அலுவலகம் விரியத் தொடங்கிவிடும். தமிழக கிராமத்துக்குள்ளும் பம்பாய் நகரத்துக்குள்ளும் மாறி மாறி பயணிக்கிற நினைவோடைக் கதையில் ஆசிரியரின் அனுபவம் நம் கைபிடித்துக் கூட்டிச் சென்று சமயத்திற்கேற்ப மாறும் மனிதர்களின் அகங்களையும் வெள்ளந்தி அன்பையும் கிராமச் சடங்குகளையும் உறவுகளின் உறுத்தாத அன்யோன்யங்களையும் விதவிதமான உணவுப் பதார்த்தங்களையும் பல்வேறான ஊர்களில் சுற்றியலையும் பேச்சிலர் வாழ்வின் சுதந்திரங்களையும் நெருக்கடிகளையும் அறவீழ்ச்சிகளின் போதான மன அலைச்சல்களையும் உணரச் செய்கிறது.
Comments
Post a Comment