மாமிசப் படைப்பு - நாஞ்சில் நாடன்.
மாமிசப் படைப்பு - நாஞ்சில் நாடன்.
நிலவுடமை முதலாளிகளுக்கும் அறுப்புக் கூலி ஆட்கூட்டத்துக்கும் இடையில் நடக்கும் வர்க்கப் போராட்ட வாழ்க்கை வட்டார மொழியின் அசலான விவரணைகளில் விரியும் எளிய கதை வாசிப்பில் முடிவில் மாங்கோண கிராமத்தில் உறுப்பினராகி விட்ட முழுமையை வழங்குகிறது.
கிராமத்தில் வாழும் பல்வேறான கதாபாத்திர அறிமுகங்களின் வழியே நீட்டிக் கொண்டு செல்லப்படும் கதையில் பரம்பரை நிலத்தையும் சாதிய அதிகாரத்தையும் பலமாகக் கொண்டு நடத்தும் சுகபோக வாழ்க்கையில் ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் எதிர்த்துப் பேசவும் திருப்பியடிக்கவும் செய்யும் நாவல் நாயகன் கந்தையா மேல் ஊர் முதலாளிகளுக்கு உண்டாகும் பகையைக் காரணமாகக் கொண்டு அவரின் தொழிலை முடக்கி, தோட்டத்தைக் கபளீகரம் செய்து நட்டப்படுத்தி முடிவாகக் கந்தையாவைக் கொலைக்களப்படுத்தி முத்தாரம்மன் படையலின் போது உரிமைகளும் நியாயமும் வேண்டும் மனிதனென்பவனை வீழ்த்தி மாமிசமாக்குவதே
மாமிசப் படைப்பு.
மனித சமூகத்தின் உயர் நாகரிக வளர்ச்சியாக நாம் அடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச மாண்புகளைக் கூட அடித்து நொறுக்கி இன்னமும் ஆண்டான் - அடிமை அடிமைத்தனங்கள் உச்சத்திலிருக்கிறது என்பதற்கான சாட்சியங்கள் நாவல் முழுக்க வீரியமாக வெளிப்படுகிறது. உணவுக்கே வழியிலையென்றாலும் கூலியாட்கள் என்றைக்கிருந்தாலும் தம் காலுக்கடியில் அடிமையாகத் தான் இருக்கவேண்டுமென்றும் இல்லாத பட்சத்தில் நிலத்தையும் கூலியையும் கவர்ந்தது மட்டுமல்லாமல் உயிரைக் கூடப் பலிகேட்போம் என்பதாக அன்று முதல் இன்று வரை உள்ளூர் முதல் உலக முதலாளிகளின் எதேச்சதிகாரம் குரூரமாகப் பதிவாகியிருக்கிறது.
நாஞ்சில் நாடன் அவர்களின் பலமே அவரின் அனுபவச் சித்தரிப்புகள் தான். அதன் வழியே அவர் நம்மை கதைச்சூழலையும் நிகழ்வுகளையும் நுண்ணிய விவரங்களோடு மூத்த ஒரு பாட்டாவாய் மாறி விவரிக்கும் போது கதை என்பது அத்தனை நம்பகத்தன்மையையும் காட்சிவடிவத்தையும் பெற்றுவிடுகிறது. அனாலேயே கிராமத்தில் நாம் நடமாடுவது போலவும் நடக்கும் நிகழ்வை கிட்ட நின்று பார்ப்பது போலவும் நெடுநாள் மனதை விட்டு நீங்காதது போலவும் செய்துவிடுகிறார்.
வட்டார மொழியின் சொற்களைச் சார்ந்தோரிடம் கேட்டுக் கேட்டுப் புரிந்துகொண்டு படிப்பது மட்டுமே சிரமமாக இருந்தது. வழக்குச் சொற்களுக்கு பொது அர்த்தம் சேர்த்திருக்கலாமென்று தோன்றுகிறது.
Comments
Post a Comment