சழலும் சக்கரங்கள் - அகுதாகவா
ஆன்மாவின் அச்சில் சுழலும் சக்கரங்கள்
சொர்க்கத்தின் பாதைகளூடே நீளும் ஒளிவீசும் வெள்ளி போன்ற மிக மென்மையான இழையொன்றைப் பற்றியேறி நரகத்திலிருந்து தப்பித்துவிட முயன்று தோற்ற கந்தாதன் சுயநலக் கதையும் ...
கதிரொளி தன்னந்தனியாக செடார் மற்றும் மூங்கில் மரங்கள் மேல் வீசிக் களைத்து மங்கிப்போனபோதும் தனது மரணத்துக்கான காரணத்தை புதிராகவே விட்டுச் சென்ற தாகேஹிரேவின் கதையும்...
ஞானியாகும் விபரீத ஆசையில் சூட்சியின் பொறியிலுழன்று இருபதாண்டுகாலம் அடிமையாகிருந்தும் கடைசியாக உயிர்பறிக்கும் வன்மச் சோதனையில் மரத்திலேறி இருகைகளை விட்டுவிட்ட போதும் வீழாமல் மிதக்கும் தியாகமும் தியானமும் கூடிய கதையும்
எதுவுமே செய்ய இயலாத சூழலில், செய்ய முடிகிற இறுதியான சுயதேர்வாக தினமும் உயிரையாவது தக்கவைத்துக்கொள்ளல் என்ற நிலையிலிருந்து பாடம் கற்று பசியில் மடிவதிலிருந்து தப்பிக்க எதையும் செய்து உயிர்வாழத் துணியும் கீழ்நிலைப் பணியாளன் கதையும்
விவரிக்க இயலாத மனப்பிறழ்வில் நிலைத்த வாதையிலிந்தும் எழுதத் திராணையிலாதபடி கண்ணிலும் மனதிலும் சுழலும் சக்கரத்துக்குப் பலியாய் விடுவோமென்ற பயத்துடன் தன்னை உறக்கத்தில் கழுத்தை நெரித்துக் கொல்லத் தயாரான கருணை மிக்கவரின் வரவையெண்ணியும் காத்திருக்கும் எழுத்தாளரின் நீள்கதையும்
தினசரிக் குறிப்புகள் போல நினைவின் நித்திய கணங்களைக் கலைத்துப் போட்டபடி சிதறுண்டிருக்கும் கதையும்
இக்கதைத் தொகுப்பில் ஓரிடத்தில் குறிப்பிடுவதைப் போலவே -
பலவருடங்களுக்குப் பிறகும் என்றோ எதிர்பாராமல் பறந்திறங்கி வந்து உதடுகளைத் தொட்ட பட்டாம்பூச்சியின் தொடுதலைப் போல என் மனம் மறக்காமல் அறிந்திருக்கும்.
மனித வாழ்வில் என்றும் தீராத அகபுற அழுத்தங்கள் மனவெளியில் ஏற்படுத்தும் மூர்க்கங்களில் சிக்கித்தவிக்கும் மனிதர்களின் மனசாட்சிகளை உலுக்கும் கதைகளையே பேசுகிறது தொகுப்பு. ஆனால் அப்படியான மனிதர்கள் ஒருவிதத்தில் நாமன்றி வேறில்லை என்ற அளவுக்கு நெருக்கமாகவும் உரைப்பாகவுமே நம்முன் நிலைக் கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது.
திறம்படச் செய்திருக்கும் மொழிபெயர்ப்பிலும் நேர்த்தியான புத்தக ஆக்கத்திலும் சிறந்து மிக அழகான படைப்பாக உருமாறியிருக்கிறது
Comments
Post a Comment