தாழிடப்பட்ட கதவுகள் - அ.கரீம்

அமைதியிழப்பிற்குச் சாட்சியாகும் ஆவணங்கள்... கோவை மாநகரில் நான் வசிக்கும் பகுதியிலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில், 90 களின் இறுதியில், குறிப்பிட்ட ஒரு மத மக்களுக்கு எதிராக நடந்தேறிய கொடும் வன்முறைகளைப் பற்றி அறிய அன்று போதிய வயதின்றியும் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னவெல்லாமோ நடந்தபோதும் எந்தச் செய்தியுமறியாமல் கடந்து வந்துவிட்டு இன்று அதுசார்ந்த வாசிக்க வாசிக்க அத்தனை அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உருவாக்குகிறது. எத்தனையோ முறை நடந்த வீதிகளில், நன்கறிந்த சாலைகளில் இப்படியெல்லாம் அதிகாரவர்க்கமும் அதுகொடுத்த தைரியத்தில் உள்நுழைந்த மதவெறியர்களாலும் திட்டமிட்டு மனிதம் அழிக்கப்பட்டிருக்கிறது என்று அறியவரும் வேளையில் அந்த வீதிகளில் அலறிய ஓலம் இன்றும் தொகுப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் கேட்கிறது. ஒரு குண்டுவெடிப்பு ஒரு சம்மந்தமில்லாமல் கூட யார்யாரையெல்லாம் தேடித்தேடி விரட்டிப் பிடித்து அவர்களின் மொத்த வாழ்வையுமே சிதைத்திருக்கிறது என்பதைப் பற்றிய சிறிய சித்திரத்தைக் காணும் போதே கண் நிறைகிறது. ஆனால் இன்று எந்தக் கரம்பிடித்து அவர்கள் மேலே எழுந்து வந்திருப்பார்களென்ற கேள்விக்கு முன்னால் ஒட்டுமொத்த சமூகமே தலைகுனிந்து தான் நிற்க வேண்டிவரும். சாதாரண மக்களுக்குள் எந்தப் பிரிவினையுமின்றி அவரவர் வாழ்க்கையை அவரவர் கடத்தும் அமைதியான போக்குக்கிடையில் மிக நீண்ட திட்டத்தோடு முளைக்கும் பிரிவினை சக்திகள் எப்படியெல்லாம் சமூக ஆர்வலர்கள் போன்ற பிம்பத்தைக் கட்டமைத்து மெல்ல மெல்ல காலம்கனியும் போது தத்தமது கடும் சுயரூபங்களோடு வெளிப்பட்டு எதிரணியில் எவர்மேலும் வன்முறையை நிகழ்த்தவும் வாழ்க்கையைச் சூறையாடவும் தலைப்படுகிறார்கள் என்ற உண்மைகள் உயிரை உலுக்குகிறது. எல்லாக் கதைகளிலுமே பெண்களையே முன்னிறுத்தி கதையைத் தொடர்ந்திருப்பது வன்முறை வெறிதாட்டத்திற்குப் பலியான அல்லது பொய்வழக்கில் சிறைபிடிக்கப்பட்ட ஆணில்லாத ஒருவீட்டில் பெண்படும் பாடுகளே அக்குடும்பத்தை எத்தனையோ அக-புற இடர்களுக்கிடையிலும் கைவிடாத நம்பிக்கையோடும் முன்னேற்றிக் கொண்டு வந்திருக்கிறதென்பதை எந்நாளும் மதித்துப் போற்ற வேண்டிய பெண்ணின் மனவலிமையைப் சரிவிகித சமூகப் பார்வையோடு அணுகியிருக்கிறது. இந்தக் கதைகள் நம் நிலத்தில் அதிகாரப் பசிக்கு பலிகொடுக்கப்பட்ட அன்பையும் குரலற்றவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும் குழந்தைகளுக்கு நிகழும் வல்லுறவுகளையும் கண்ணீர்மொழி கொண்டு பேசியிருக்கிறது. See less

Comments

Popular posts from this blog

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.