ம் - ஷோபா சக்தி

அச்சம் ஒரு ஆனையைப் போல பயங்கரமானது. எனினும் ஆனையைப் போலவே பழக்கப்படுத்திவிட்டால் நம்மிடம் பணியக் கூடியது. - நாவலிலிருந்து. 

 இலங்கையில் -ஷோபாவின் வார்த்தைகளிலேயே - தரகு முதலாளி வர்க்கத்தின் சிங்களப் பேரினவாத அரசிடமிருந்து தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த சனம் தனித்தனி குழுக்களாக பல்வேறான இயக்கங்கள் தொடங்கப்பட்டு எல்லா வழிகளிலும் போராட்டங்கள் செய்யத் தொடங்கிய காலத்தில் மையப்படும் - கடவுள் பிறந்தபோது தொடங்கிய - கதை அய்ரோப்பாவில் தொடங்கி நினைவோடையாக நேசகுமாரன் என்ற பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்ட பாஸ்டரின் பால்ய நினைவுகளுக்குள் மூழ்கி இலங்கையில் அவர் இளமையில் விடுதலை இயக்கத்தில் போராளியாகச் செயல்பட்ட களத்தை "ம்" கொட்டிக் கேட்க கேட்க நெஞ்சையழுத்தும் பகீர்களும் பட்டென்று வெடிக்கும் பகடிகளுமாக விவரிக்கிறது. 

 தேச விடுதலைக்காக தான் கொண்ட அனைத்தையும் இழந்து போராட வந்தவனுக்கு எந்த நிலையிலும் வெற்றிகிட்டாத வாழ்வில் உள்ளூரில் மிஞ்சும் அவமானங்களும், உயிர்மீதான அச்சங்களும், எதேச்சதிகாரத்தின் அடக்குமுறைகளும், சேர்ந்து பயணித்த தோழர்களின் கொலைக்காட்சிகளும், இவைகளுக்கு எதிராய்ச் செய்துகாட்ட எதுவுமியலாத இயலாமைகளும் தான் மிஞ்சுகிறது. இலங்கையின் சிறைச்சாலைகளிலும் (காதுக்குள் பென்சிலை அடித்திறக்குதல்) இயக்கத்தினரின் (வாயை அடித்துடைத்துக் கொல்லுதல்) கொட்டடிகளிலுமாக மாறுபாடில்லாத விதவிதமான மனிதத்தன்மையற்ற வன்கொடுமைகளுமாக நீண்டு எதிர்பாராத ஒரு முடிவையடையும் வரை பக்கத்துப் பக்கம் யுத்தக் களத்தின் அரசியலையும் ஆற்றமையையும் உலகப் பார்வைக்கு உயிர்சாட்சிகளாய்ப் பதிவாக்கியிருக்கிறது. 

 கதை நாயகன் நேசகுமாரன் விடுதலை வீரனாகும் அத்தனை வெறியும் ஆசையுமிருந்தாலும் சாதாரண மனிதனுக்கிருக்கும் அச்சமும் திடமின்மையுமே நிறைந்து காணப்படுகிறார். அவரிடம் கொள்கைகளும் போராட்ட குணமும் இருந்த அளவு திட்டமற்றவராக இருக்கிறார். அதன் மூலமே பல இழப்புகளுக்கும் மரணங்களுக்கும் பொறுப்பாகிறார். அதைத் திருத்திக் கொள்ளதாவர் கடைசியாக ஒரு இழிசெயலுக்கும் இணைசேர்ந்து மண்ணைவிட்டுப் பிரிந்தாலும் மன நிம்மதியோடு வாழப் போன இடத்தில் மரணப்படுகிறார். 

ஷோபா சக்தியின் கதைகளை வாசிக்கையில் எல்லாம் இயக்கங்களின் போராட்ட முறைகள் கேள்விக்குறியாவதைத் தடுக்க முடியவில்லை. போருக்கெதிரான தன் பார்வையை அவர் இயக்கங்களுக்கு எதிராகவும் வைக்கிறார். தமிழ் "மக்களிடம் அதிகம் கொள்ளையடித்த இயக்கம் எது?" என்ற கேள்விதான் எவராலும் சொல்லப்படமுடியாத ஒரு கடினமான பதில் என்று நாவலில் எழுதியிருப்பதையும் அடைக்கலம் தேடி வந்தவர்களைக் கொன்று குவிப்பதைப் படிக்கும் போதும் இயக்கங்களின் நம்பகத்தன்மை மீதே சந்தேகம் எழுகிறது. அதன் உண்மைத்தன்மையை அந்தக் காலகட்டத்தில் அங்கு இயங்கிய விடுதலை அரசியல் பற்றிய போதிய வாசிப்பின் மூலமும் புரிதலின் மூலமுமே நாம் கண்டறிய முடியும்.

 இலங்கை மண்ணிலும் சிறையிலும் சுவர்மட்டுமே வேறுபாடாக அம்மக்கள் விடுதலைக்காக தம் வாழ்வில் அனுபவித்த கொடுரங்களை வாசிப்பதில் பதறுவதோடல்லாமல் அக்காலத்திலெல்லாம் உலக நாடுகளும் அண்டை நாடான நாமும் எத்தனை பாதுகாப்போடும் மகிழ்வோடும் இருந்துகொண்டு அடுத்த நாட்டு அரசியலைத் தீர்மானிப்பதிலும் அடக்குமுறைகளுக்கு ஆதரவாகவும் பங்கு கொண்டிருப்போம் என்று நினைக்கையில் குற்ற உணர்வும் வேதனையும் நிறைகிறது

Comments

Popular posts from this blog

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.