சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்
சிலுவைராஜ் என்பவர் ராணுவ வீரனின் மகனாய்ப் பிறந்து கொண்டாட்டமும் கொடும்
கட்டுப்பாடுகளும் ஒருங்கே நிறைந்த பால்யங்களில் திளைத்து வளர்ந்து கூர்த்த அறிவே
பெற்றிருந்தாலும் மதம் மற்றும் சாதி அடிப்படையிலான கட்டமைப்புகளால் ஆசைப்பட்ட
படிப்பும் சுகவாழ்வுக்கான வேலை கிடைக்காமல் அலைந்து, தான் சார்ந்திருக்கும்
மதத்தால் இடஒதுக்கீட்டின் படி சலுகை கிடைக்காமல் போக வேறு மதம் மாறி
தாழ்த்தப்பட்டவனில் இன்னொரு பிரிவாதலின் மூலம் வேலை மட்டுமல்லாமல் சகல
சௌபாக்கியங்களும் கிட்டும் என்ற துர்நடைமுறைக்கு பலியாகி வேறு மதம் தழுவுவது
வரையிலான ஒரு தன் வரலாற்றுப் 'புனைவு' இந்த நாவல்.
நாவலின் முதல் 200 பக்கங்களில்
சிலுவையின் மகிழ்வு மிக்க பால்ய காலம் விவரிக்கப்படுகிறது. கிறிஸ்த்துவ கல்விக்
கூடங்களில் பயிலும் கல்வியும் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் அன்பும்
கண்டிப்புக்களும் முன்கோபக்காரத் தந்தையின் கொடூர அடிகளும் தாயின் திட்டுக்களும்
பாட்டியின் சாகசக் கதைகளும் குறும்புக்கரக் குழுவுடனான பலவகையான விளையாட்டுக்களும்
கிராமத்து திருவிழாக் கொண்டாட்டங்களும் மலையில் சிறு வேட்டைகளும் எம் ஜி ஆர் -
சிவாஜியின் குதூகலத் திரைப்படங்களும் நாய் பூனை பல்லி முதலிய அனைத்து வகை
அஃறிணைகளுடனான நெருக்கமும் பகையும் பெண்தோழிகளுடனான கள்ளமற்ற அணுக்கமும் சாதிய
வேறுபாடுகளை விளங்கிக்கொள்ள முடியாத எரிச்சலும் என நமது பால்யங்களை நினைவு
படுத்துவதோடல்லாமல் அதில் விடுபட்டவைகளுக்காக ஏங்கித் தவிக்கவும் வைக்கிறது. இந்த
நாவலின் உயிரோட்டமான பாகம் என்றால் இவைகள் தான். இந்தப் பகுதியை வாசிக்கையில்
மட்டும் நான் என் பால்யத்தின் பழைய நினைவுகளுக்கு ஆட்பட்டு நண்பர்களிடமெல்லாம்
அதைப் பற்றிக் கூறி மகிழ்ந்தேன்.
பிறகு சிலுவையின் ஊர் கடந்த உயர் நிலைப்
பள்ளிப்படிப்பும், மாவட்டம் கடந்த இளங்கலைப் படிப்பும் இடையே சிறு தற்காலிக
பணியமர்வுகளும் பிறகு தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தால் தடம் மாறும் முதுகலைப் படிப்பும்
படித்து முடித்து வேலையற்று நிற்கையில் குடும்பத்துள்ளும் சுற்றுப்புறத்திலும்
சூளும் அவமானம் தவிர்க்க மாநிலம் கடந்தலையும் விரக்திகளும் ஆற்றாமைகளும் இடையிடையே
இளமை மனதின் பெண்கள் மீதான அலைபாய்ச்சல்களும் அதிலிருந்து மீள்வதற்கான ஆன்மீக
நாட்டங்களும் இலக்கிய அறிமுகங்களும் தேர்ச்சியும் என நீண்டு நீண்டு சுமார் 25
ஆண்டுகாலத்தில் சிலுவையின் அகபுற மனவெழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் பேசுகிறது.
சிலுவைராஜ் ஒரு சாகசக்காரனோ சாதனைக்காரனோ புரட்சிக்காரனோ அல்ல. உங்களைப் போல
என்னைப்போல சாதரணன். ஆனாலும் அவர் வாழ்வை சரித்திரம் என்று பெருஞ்சொல் சொல்லக்
காரணம் அவர் ஒருவரின் வாழ்க்கை வழியேயான அவர் சார்ந்திருந்த நிலமும் குழுவும்
பதிவுசெய்யப்பட்ட வரலாறாதல் மூலமேயாகும். கிராமங்களின் ஊறியிருந்த சாதியப்
பகைமைகள், ஒரு சாதிக்குள்ளேயே இருந்த பிரிவினைகள், கிறிஸ்த்துவக் கல்விக் கூடத்
தேவைகள், வெள்ளையர்களால் நிகழ்ந்த புரட்சிகர மதமாற்றங்கள், என கால் நூற்றாண்டு சமூக
அரசியல் செயல்பாடுகளையும் பொருளாதார மாற்றங்களில் விளைந்த முன்னேற்றங்களையும் அறிய
முடிகிறது.
சிலுவை அடைந்த ஓரளவான வெற்றிகளுக்கு அவரின் குடும்பத்துக்குள் இருந்த
கல்வி சார்ந்த புரிதலுக்கும் ஆசிரியர்களுக்கு இருந்த இரக்க உணர்வுக்கும்
பங்கிருக்கிறதென்றாலும் அவ்வாதரவுகள் எதுவுமே கிட்டாதவர்களுக்கு மறுக்கப்பட்ட
வாய்ப்புகளும் அடைக்கப்பட்ட கதவுகளின் வழியே சாதிக்கும் மதத்ததுக்கும் பலியான
பல்லாயிரம் மனிதர்களின் வலியை உணரமுடிகிறது. கல்வியின் வழியாக சமூகத் தீட்டைக்
கடந்துவிடலாமென்ற கனவு நிராசைப்பட்டே போகிறது சிலுவைக்கு. அந்தக் கொடுமைகள்
சுதந்திர நூற்றாண்டை நாம் அடையப் போகும் இந்தக் காலத்திலும் எந்த மாற்றமோ
மலர்ச்சியோ அடையாமல் தொடர்வது இந்திய சமூகத்தின் இதயங்களில் ஊறிவிட்ட இகழ்வான
மனப்பான்மையையே காட்டுகிறது.
நாவலின் வட்டார வழக்கில் அமைந்த மொழிநடை ஆங்காங்கு
வெகு இயல்பாகக் கவர்கிறது. கிராம வாழ்வியலுக்கே உரிய பகடிகளும் வாய்க்குவந்தபடியாக
வெளிப்படும் வசைகளும் வீழ்ச்சியைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவங்களும்
நிறைந்திருக்கிறது. நாவலின் பிற்பாதி நீளமென்ற நினைப்பு வருவதைத் தடுக்க
முடியவில்லை. அதேசமையம் நீளமென்பதைக் குறையாகக் கருத முடியாத காரணம்
சுவாரஸ்யங்களும் சாகசங்களும் இல்லையென்றாலும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட வாழ்வை
ஒவ்வொரு நாளாக வாழ்ந்துதானே தீர்த்தாக வேண்டியிருக்கிறது.
Kanmun katchigalai virayachaithamaiku nanri. Oru mulu navalaiyum oru pakka katuraiyil kondu vandhamaiku nanri
ReplyDelete