தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்.
தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்.
பாடம் நடத்தி விட்டுத் தேர்வு வைப்பது தான் வழக்கம் ஆனால் வாழ்க்கை மட்டும் தேர்வுகளின் மூலம்தான் பாடமே எடுக்கும் என்ற சொற்றொடருக்கு நீண்ட உரையாய் அமைந்ததே இந்த நாவல்.
தனிமனிதர்களுக்கு எந்த விருப்பு வெறுப்புமில்லாத ஒரு வாழ்க்கையைத் தான் குடும்ப அமைப்புகள் ஏற்படுத்தித் தருகிறதென்ற குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியிருக்கிற இந்தக் காலகட்டத்தில் இப்படியான கதைகள் மீண்டும் மீண்டும் அழுத்தி சொல்ல வருவது குடும்ப வாழ்வின் தேவையையும் பாதுகாப்பையுமே. உறவுகளின் பல்வகைப்பட்ட உணர்வுகள் நெருங்கி மோதி உருவாகும் நல்லது கெட்டதுகளை பிரித்தறிந்தோ விட்டுகொடுத்தோ ஏற்றுக்கொள்ளத் துணியும் போது சகல சௌக்கியம் பெற்ற ஒரு வாழ்வை அனைவருமே வாழ முடியும். ஆனால் அது அத்தனை எளிதல்ல என்பதையும் கசப்போடும் புரிதலோடும் ஒத்துக் கொள்ளவும் வேண்டும்.
தன் மானமே பெரிதென்ற போக்கில்லிருக்கும் ஒரு இளைஞன் தன் எதிர்காலத்துக்காகவும் தன் தம்பி தங்கைகள் நிறைந்த குடும்பத்தின் நல்வாழ்வுக்காகவும் ஊதியத்துக்கான ஒரு வேலையின்றியும் போதிய வயதின்றியும் இருக்கும் ஒரு சூழலிலும் "பெரும்போகமாய்" வலிய வரும் திருமணத்துக்குச் சில நலவிரும்பிகளின் வற்புறுத்தலால் ஒத்துக் கொள்ளப் போய் அதன் பிறகு அவன் சம்பந்த வீட்டில் சந்திக்கும் மனக்கசப்புகளும் வறுமையால் சந்திக்கும் அவமானங்களும் வேளை தவறி வந்தாலும் நாளையைக் கௌரவப்படுத்தும் வேலை வாய்ப்பும் தகர்ந்து விடாத தாம்பத்தியத்தின் தளிர்த் தொடர்ச்சியாய் பிள்ளை பேறும் வனாந்தரத் தனிமையில் வண்ணமலராய் துளிர்க்கும் நட்பும் என சொல்லித் தீராத ரணங்களோடு நீண்டு சுயகௌரவங்களை இறக்கி வைத்து சுற்றம் வேண்டுமென்ற நினைப்பு மேலோங்குகையில் கதையும் வாழ்வும் சுபத்தை நோக்கி நகரத் தொடங்குகிறது.
முதல் நாவல் என்றே தெரியாத அளவிற்கு தேர்ந்த தத்துவ ஆசிரியன் போல நாவல் முழுக்க தம் முதிர்ச்சியான அனுபவத்தையும் கரைகண்ட கருத்துக்களையும் நிறைத்து வைத்திருக்கிறார். நாற்பதாண்டுகளுக்கு மேலாகி கிளாசிக் இடம் பிடித்துவிட்ட படைப்பை இன்று வாசிக்கும் போதும் நாவலின் பேசுபொருளில் நிகழ்காலத்தில் எதுவுமே மாறாததைப் போன்ற உணர்வு நாம் இன்னும் மாறவும் தேறவும் வேண்டியிருப்பதை எண்ணி உறுத்திக்காட்டவே செய்கிறது.
Comments
Post a Comment