சுளுந்தீ - இரா. முத்துநாகு.
சுளுந்தீ - இரா. முத்துநாகு.
பழந்தமிழகத்தில் சொக்க நாத நாயக்க மன்னராட்சியில் அரண்மனையார்கள் தமக்குப் பிரித்தளிக்கப்பட்ட குறுநிலப்பரப்பை ஆண்டுவந்த காலத்தில் இனக்குழுப் பிரிவினராக பல்வேறான மக்கள் வாழ்ந்தபோது நாவிதர் எனும் இனக்குழுவினர் ஆதிகாலத்தில் எத்தகைய தொழிலறிவுகளோடும் அவரினும் முன்னோர்களிடமிருந்து கற்றுத்தேர்ந்த மருத்துவ ஞானத்தோடும் வார்த்தெடுத்த வீரத்தோடும் இருந்தார்கள் என்றும் அவர்களை வெறும் தாழ்ந்த சாதிக்காரர்களாக மட்டுமே பார்த்து குலத்தொழிலை மட்டுமே செய்ய அட்சியாளர்களும் மற்ற ஆதிக்க சாதியினரும் பணித்தார்கள் என்றும் நாவிதர் வாழ்வியலின் ஏற்ற இறக்கங்களை வரலாற்றுத் தகவல்களோடும் ஏராளமான மருத்துவக் குறிப்புகளோடும் நிலவியல் ஆதாரங்களோடும் ஆசிரியரே குறிப்பிடும்படியாக உண்மைக்கு மிக அருகில் சென்று பல்லாண்டுகாலம் ஆய்ந்தறிந்து முதன்முதலாகப் பதிவுசெய்துள்ளார்.
விஜய நகரப் பேரரசின் ஆளுகைக்குட்பட்ட கன்னிவாடி அரண்மனையில் நாவிதராகப் பணிபுரியும் ராமன் என்பவர் பன்றிமலைச் சித்தரிடம் பண்டுவ உதவியாளராகவும் இருந்து மருத்துவ அறிவையும் அநேக அனுபவங்களையும் பெறுகிறார். அவருக்குப் பிறக்கும் மகன் மாடனையும் நாவிதர் என்ற குலத்தொழிலிருந்து விலக்கி அறிவும் வீரமும் செறிந்த படை வீரனாக்கும் ஆசையில் பல பயிற்சிகளைத் தாமே கொடுத்துத் தயார்படுத்துகிறார். ஆனால் நாவிதர் குலத்தைச் சேர்ந்தவன் குலத்தொழிலை விடுத்து போர்ப்படை வீரனாவதா !? சாதியக் கட்டமைப்புக்கு எதிராக எவரும் எழுந்துவிடக் கூடாதே ! என்ற ஆதிக்க மனப்பான்மையால் வீரனாகப் பயிற்சி எடுத்துக் கொண்ட மாடனை பல ஊரின் பெரிய சாதிக்காரர்களும் அரண்மனைத் தளபதியும் இணைந்து சூட்சியாலும் வன்மத்தாலும் போட்டி என்ற பெயரில் எதிராளியை விதிகளை மீறி விளையாடச் செய்து கொலை செய்துவதோடு நாவல் முடிகிறது.
நாவலின் முக்கியமாகப் பேசப்படும் குலவிலக்கம் என்ற கொடூரச் சட்டத்தின் பின்னிருந்த அதிகார வர்க்கத்தின் சுயநலங்களையும் பேராசைகளையும் தமிழ்ப் பூர்வகுடிகளிடம் திட்டமிட்டுக் களவாடப்பட்ட நிலங்களில் வேற்று மாநில மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்திய குரூரங்களையும் வெகு சாமர்த்தியமாகவும் சூட்சிகரமாகவும் கட்டப்பட்ட சாதியப் படிநிலைகளை மனதிற்கொண்டு மக்களுக்குள்ளாகவே மூண்ட வர்க்க பேதங்களையும் கலவரங்களையும் அதன் மூலம் ஆதிக்கபீடங்கள் அடையும் பலன்களையும் உடைத்துப் பேசியிருக்கிறது.
நாவலில் வரும் ஒரு உச்ச காட்சியில் ராமப்பண்டுவன் இறப்பதற்கு முன்பாக ஒரு மருந்து தயர் செய்வார். அந்த மருந்து யாருக்கென்று கேட்பான் மகன் மாடன். அப்போது "யாருக்காவாது உதவும் நாம் செய்து வைப்போமெ" என்று பதிலளிப்பார். அதன்படியே இன்று நம் கைவந்து சேர்ந்திருக்கும் நம் மரபின் மிச்ச சொச்சங்களெல்லாம் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைகள் யாருக்காவது பயன்படட்டுமே என்று பெரிய மனது படைத்த மானுட நேசம் சுரக்கும் சுயநலமறியாக் கைகளிலிருந்து மாறி மாறி வந்து சேர்ந்தவையே.
சித்தர் முதற்கொண்டு ராமன்,மாடன், அரச குலகுரு வழியாகவும் வெளிப்படும் பல்வேறான தகவல்கள் நம்முடைய அன்றாட வாழ்வியலின் சடங்குகளுக்கும், பயன்படுத்தும் சொற்களுக்கான விளக்கங்களும், மக்கள் பயப்படும் குறளி, முனி போன்ற அமானுஷ்யங்களுக்குப் பின்னிருக்கும் அறியாமைகளுக்கான தெளிவுகளும் மருத்துவப் பொருட்களின் வேதியல் தன்மையால் கிடைக்கும் மாற்றுப் பயன்கள், புழங்கப்பட்ட சொலவடைகள், அனுபவங்களில் விளைந்த விவசாய நலன்கள்
என நாவல் முழுக்க பக்கத்திற்குப் பக்கம் பொக்கிசமாக விரிகிறது. அத்தனையையும் பல கள ஆய்வுகளின் மூலமும் நூலாய்வுகளின் மூலமும் பல்லாண்டுகாலம் தேடித்தேடிச் சேர்த்துக் கொடுத்த நூலாசிரியரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் வணங்கத்தக்கதாகும்.
மருத்துவக் குறிப்புகள் நிறைந்துள்ள நூல் என்ற அடிப்படை ஆர்வத்தில் வாசிக்கத் தேர்வு செய்யப்படும் இந்த நூலில் நிறைந்துள்ள சித்தமருத்துவம் உட்பட எந்தக் குறிப்புகளையுமே இந்நூலை வாசிப்போர் பரீட்சித்துப் பார்ப்பார்களா என்பது சந்தேகமே. ஆனாலும் இந்த நூலை அனைவரும் பெரும் ஆவலோடு வாசிப்பதற்கான தலையாய காரணம் பல நூறாண்டுகளாக இந்த மண்ணில் புழங்கி வந்த அறிவையும் ஆற்றலையும் வீரத்தையும் கண்டறியும் நோக்கில் தம் வேர்களைத் தேடிப் பார்த்து அகமகிழும் ஒரு உணர்ச்சி நிலையை அடையவே என்று நான் நினைக்கிறேன்.
புனைவிலக்கியமான நாவல் என்ற வகைப்பாட்டில் வெளியாகியிருக்கும் இப்பிரதியில் கதைத்தேடல் என்ற நோக்கில் மட்டுமே விரிந்த முதல் வாசிப்பை முடித்திருக்கும் நான் இந்நாவல் பேசியிருக்கும் சமூக அரசியல் வரலாற்றையும் மருத்தவ அறிவின் மேதமைகளையும் புரிந்துகொள்ள மீள்வாசிப்பையும் மேலும் பல தேடல்களை நிகழ்த்த வேண்டுமென்பதை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்
Comments
Post a Comment