சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்

சிலுவைராஜ் என்பவர் ராணுவ வீரனின் மகனாய்ப் பிறந்து கொண்டாட்டமும் கொடும் கட்டுப்பாடுகளும் ஒருங்கே நிறைந்த பால்யங்களில் திளைத்து வளர்ந்து கூர்த்த அறிவே பெற்றிருந்தாலும் மதம் மற்றும் சாதி அடிப்படையிலான கட்டமைப்புகளால் ஆசைப்பட்ட படிப்பும் சுகவாழ்வுக்கான வேலை கிடைக்காமல் அலைந்து, தான் சார்ந்திருக்கும் மதத்தால் இடஒதுக்கீட்டின் படி சலுகை கிடைக்காமல் போக வேறு மதம் மாறி தாழ்த்தப்பட்டவனில் இன்னொரு பிரிவாதலின் மூலம் வேலை மட்டுமல்லாமல் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்ற துர்நடைமுறைக்கு பலியாகி வேறு மதம் தழுவுவது வரையிலான ஒரு தன் வரலாற்றுப் 'புனைவு' இந்த நாவல். நாவலின் முதல் 200 பக்கங்களில் சிலுவையின் மகிழ்வு மிக்க பால்ய காலம் விவரிக்கப்படுகிறது. கிறிஸ்த்துவ கல்விக் கூடங்களில் பயிலும் கல்வியும் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் அன்பும் கண்டிப்புக்களும் முன்கோபக்காரத் தந்தையின் கொடூர அடிகளும் தாயின் திட்டுக்களும் பாட்டியின் சாகசக் கதைகளும் குறும்புக்கரக் குழுவுடனான பலவகையான விளையாட்டுக்களும் கிராமத்து திருவிழாக் கொண்டாட்டங்களும் மலையில் சிறு வேட்டைகளும் எம் ஜி ஆர் - சிவாஜியின் குதூகலத...