
தனியறை மீன்கள் - அய்யனார் விஸ்வநாத் ஒரு கவிதைக்கு அதன் முதல் வாசிப்பு மிக உன்னதம். முதல் வாசிப்பிலேயே புரிந்து கடைசி வரியில் வெடித்து அதன் அர்த்தம் நம் மனம் முழுக்கப் பரவுகிற நொடியில் கவிதை தன் படைப்புப்பேற்றை அடைந்து கொள்கிறது. அதன் பிறகு அதை மனப்பாடம் செய்து கொள்கிற அளவுக்கு மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டு மகிழ்தலும் நிறைதலும் அவரவர் தனிப்பட்ட வாசிப்புத் தன்மைக்கேற்ற விருப்பம். அப்படி முதல் வாசிப்பிலேயே உன்னதத்தை அடைந்து விடுகிற கவிதைகள் நிறைந்த தொகுப்பு. காதல் மூத்துப் பித்தாகும் வேளையில் காமம் தொடும் கணங்கள் கவிதைகளாயிருக்கிறது. காமத்தை எழுதுகிறேன் பேர்வழி என்று வெறும் உறுப்புச் சிறப்புரைத்தல்களையும் புணர்ச்சி மகிழ்தலையும் மட்டுமே எழுதிக் குவிக்காமல் காதல் நுரைத்துச் சுழித்து மனமும் உடலும் கரையும் போதான நிகழும் போகத்தின் புனிதப் பிரதிகளாக உருப்பெற்றெருக்கிறது இத்தொகுப்பின் கவிதைகள். நிறைந்த நளின வளைவுகளோடும் அழிவில்லா அழகின் அமுதம் சுரந்தும் கலையாக் காமத்தின் கமக வாசங்களோடும் மழைக்கும் போதெல்லாம் வண்ண வண்ணமாய் மலர்வளாகவும் முத்தத்தின் போதெல்லாம் முகிழ்ப்பவளாகவ...