சரீரம் - நரன்
அறை முழுக்கக் கதைகள் சரீர நிழலுருவம் பெற்று மிதந்தன. விதிவழிப்பட்ட வாழ்வின் வலியும் இழப்பும் நிறைந்த கதை மாந்தர்களின் கண்ணீர்க் கனம் தாளாமல் தரையில் படுத்துத் தலைச்சாய்த்தான்.
விரிந்து பரவும் கதைகள் மிதந்த படியே வந்து அவன் உடலின் மேல் விழுந்து விழுந்து மூடின.
***
நரனின் கதையுலகம் மனிதன் தன் மன ஈனங்களால் நரகம் காணும் மறுபூமியாகவே வடிவம் கொள்கிறது. அங்கே மகிழ்வின், நம்பிக்கையின்,புத்துணர்வின் வீதம் குறைந்து மரணவேதனைகளின், காம மீறல்களின், தனிமைகளின், நம்பிக்கை துரோகங்களின் என தீராத கண்ணீர் காட்சிகளின் துன்பியல் விவரணைகளுமே நிறைந்து மனம் கொள்ளா முறையீடல்களோடு முடிவு வேண்டி நிற்கிறது.
வாரணாசி கதையைத் தவிர அனைத்துக் கதைகளுமே விரைவில் நீங்காத மன அழுத்தத்தையும் அதிர்வுகளையுமே கொடுத்தது. வாரணாசி மட்டுமே முடிவில் வாசகன் விரும்பும் இயல்பைக் கொண்டிருந்து மகிழ்வித்தது.
தொகுப்பில் வாரணாசி கதை எனக்கு மிகவும் பிடித்த கதையாயிருந்தது. ஆண் - பெண் உறவுகள் இரண்டு விதமான சார்ந்திருப்புகளின் வேறுபாடுகளில் சொல்லப்பட்டிருந்தது. தானாகத் தரும் வரை காத்திருக்கும் ஆணை பெண்ணுக்குப் பிடித்துப் போவதில் மீறலுக்குட்படாத கவிதையாயிருந்தது முடிவு.
உடல் கதை கேசம் தொகுப்பின் ரோமம் கதையின் முடிவை நினைவுபடுத்தியது.
மயில் கதையில் தனிமையின் தாளா வெறுமையை உணர்ந்து கொள்ள முனைகையில் அப்பேர்ப்பட்ட முடிவைப் புரிந்து கொள்ள முடிந்தது.
தேடல் கதை சாதாரணனின் இயலாமையையும் பேராசைகளினால் நிகழ்ந்த பிரிவுகளையும் நம்பிக்கைதுரோகத்தினால் அடைந்த வாழ்விழப்பையும் மனத்திலறைந்தது.
வாசனாதி கதை மேஜிக்கல் ரியலிசத்தில் கற்பனைகளுக்கப்பாற்பட்ட உலகத்தை கண்ணில் நிறைத்தது.
சிறை கதை சில திரைச்சீலைகள் மாற்றலில் காலமும் இடமும் மாறும் நாடகீய முறையில் இருந்தது.
உடைப்பு கதை சிறை வீடாகும் போது உடைப்பு நிகழுமென்ற முன்கூட்டிய கணிப்பின் படியே பயணப்பட்டு முடிந்தது.
யேசு கதையில் இருகாலத்தில் நடக்கும் கதைகளின் ஒப்பீடு சிறப்பாயிருந்தது.
அமரந்தா கதை காலமாற்றங்களின் வழி ஆண் பெண் குடும்ப உறவிலும் பொதுச் சமூகப் பார்வைகளிலும் நடந்துவிட்ட மாற்றங்களைப் பேசியிருக்கிறது. கனவுகளை வெல்ல உறவுகள் ஒருபுறம் தடையாகும் போது வாடகைத் தாயாக சொந்தத் தாயே பொறுப்பேற்கையில் இளம் தலைமுறை முறிந்த ஒரு சிறகை மறந்து திறம் கொண்ட சிறகோடு வானம் பாய்கிறது.
நீலநிறம் கதை கார்ல்மார்க்ஸின் காட்டாமணக்கு கதையை நினைவுபடுத்தியது. எதோ ஒரு மையல் திடீரென ஆண் பெண் இருவருக்குள்ளும் உண்டாகிவிடும். அந்நேரத்தில் அந்த உறவுக்குப் பெயரற்றிருந்தாலும் அவர்களுக்குள் ஒரு உடல்சேர் உறவில் ஒரு தொடர்பு உண்டாகிவிடும். அது இக்கதையில் கொஞ்சம் நீண்டு கதியற்றிருந்த கதை இணைக்கு ஒரு எதிர்காலப் பிடிமானத்தைத் தந்து முடிநந்திருக்கிறது.
வித்தியாசங்கள் இருந்தும் ஏனோ கேசம் அளவுக்கு ஈர்க்காமலும் நிறையாமலும் போன தொகுப்பு.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.