அகாலம் - கே.என்.செந்தில்

எழுத்தாளர் - "நான் சில கதைகள் சொல்றேன். கதை மட்டும் சொல்றேன். அதுக்குள்ள என்னோட அனுபவக் கருத்திருக்கா அல்லது அது உன் அறிவைச் சோதிக்குமா என்றெல்லாம் நீயே படிச்சுத் தெளிஞ்சுக்கோ. அதையும் நானே வரிக்கு வரி சொல்ல மாட்டேன்" என்ற முன்கூட்டிய திட்டமிடலோடோ அல்லது இயல்பாகவோ அமைந்து விட்ட 5 கதைகள் கொண்ட தொகுப்பு.

ஒரே ஒரு வரி கூட கதைக்கு வெளியே எழுதப்படவில்லையென்பதே இதன் ஆச்சர்யம். வாழ்வு என் கருத்தைச் சொல்கிறேன் கேள் என்று கதைக்கிடையே தன் மேதமைப் பிரசங்கங்களை நிகழ்த்தாமல் கதையை மட்டுமே சொல்லிச் சென்றிருக்கிறார். இது பிரசங்கங்கள் கூடிப்போனதால் உண்டாகும் அலுப்பைவிட குறைவாக இருப்பதால் தடையற்ற வாசிப்புக்கு நல்லதாகவே படுகிறது.

3 கதைகளில் பொருந்தாக் காமமும் அதனியல்பாக நிகழும் மீறலும் சுகம் கண்ட மயக்கத்திலாழ்ந்திருந்த வேளையில் வெளிப்படும் தெளிவும் பின்வாங்கலும் அதன் பிறகான விலகலும் தனிமையும் இயலாமையும் அன்பின்மையும் ஒன்று சேர்ந்து வெளிப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் எப்படியாவது வாழ்வைக் கடத்திவிட வேண்டுமென்ற சுயநல எண்ணத்தைத் தவிர வேறொரு காரணியாக என்ன இருந்திடப் போகிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

தொகுப்பில் "இரண்டாமிடம்"என்ற கதை எனக்குப் பிடித்த கதை. குடும்பத்தில் முதலாவதாகப் பிறந்த குழந்தை அடுத்த குழந்தை பிறந்தவுடன் படிப்படியாக கண்டுக்காமல் விடப்பட்டு இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டு துயருறும் -பெரும்பாலான வீடுகளில் நடந்திட்ட - உளவியல் சிக்கலை யார் பக்கம் நியாயம் என்ற கேள்வியோடே அணுகி பதிலை வாசகனுக்கே விட்டுக் கொடுத்து முடித்திருக்குறார்.

அகாலாமென்ற பெயர் தொகுப்புக்கு மிகப் பொருத்தம். கதைகளில் காலவரிசை ஒரு ஒழுங்குக்குள் நிற்காமல் சுழன்றுகொண்டே இருக்கிறது.

நாவல்களாகவே வெளிபட்டிருக்கவேண்டிய ஆழத்தையும் அடர்த்தியையும் கொண்டிருக்கும் கதைகள் சொல்லும் முறையிலும் முன்னும் பின்னுமாகப் போய் வரும் கதையின் அமைப்பிலும் வித்தியாசம் இருப்பதால் புதுவித அனுபவத்திற்காய் வாசிக்கலாம்
.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.