உலகின் மிக நீண்ட கழிவறை - அகர முதல்வன்

ம்ம்ம் கொட்டிக் கேட்டுத் துயருர மேலும் சில வசனகவிதை நடையிலான கொடுங்கதைகள்.

அகரமுதல்வனின் தமிழுக்கு முதற்பெருவணக்கம்.

கொதித்துச் சிந்திய ரத்தத்துளி போல் வரைபட அடையாளம் பெற்றுவிட்ட நாட்டில் ஆளப் பங்கு கேட்டதால் மரணங்களைக் கொண்டு நாட்களை நினைவுகூறும் ரத்தச் சிவப்பில் ஒளிரும் நாட்காட்டிகளைப் பார்த்துக் காலம் கடத்தும் பெருந்துயர் வாழ்வின் சிற்றுயிர்க் கதறல்களே இந்தக் கதைகள்.

விடுதலைக் காற்றைத் சுகிக்கப் போராடிய பல்லாயிரம் போராளிகளின் கடைசி மூச்சுக் காற்றும் கூடிச் சேர்ந்து கனமேறி வீசும் நிலத்தில் பிறந்துவிட்ட மக்களின் நலமும் மகிழ்வும் நிர்மூலமாக்கப்பட்டதின் சாட்சியங்கள் கல்லறையிலுறைந்துவிட்ட பின் யுத்தத்தில் தப்பிப் பிழைத்ததும் சிறையுண்டதும் நாடு கடந்ததும் மரணத்தை விடவும் வலி மிகுந்ததாகவும் வெளிச்சமும் தெளிவுமற்ற எதிர்காலத்தைக் கொண்டதாகவுமே இருக்கிறது உலக நாடுகள் சேர்ந்து முதுகில் குத்தி முகம் சிதைத்த அந்நில மக்களுக்கு.

போர்முடிந்து பகைமுடியாத கணக்காய் உலவும் கண்ணிவெடிகளாய் வாழும் இயக்கத்தினரைத் தேடித் தேடிக் களைதலையும் சிறைவைத்துத் துன்புறுத்தலையும் பலிபீடங்களுக்குள் காலூன்றிக் கொக்கரிக்கும் கொடுங் கோலரசமைப்பின் ஆதாரத்தைக் கட்டிக் காக்கும் அரும்பெரும் பணியாய்ச் செய்து வரும் சிங்களச் சிற்றரசின் ஆதிக்கத்திலிருந்து தப்பி வாழ்விழந்தும் வலுவிழந்தும் புலம் பெயரும் ஆண் மீதமிருக்கும் வாழ்வு முழுக்க கண்காணிப்பின் கண்களில் சந்தேகத்தின் நிழலில் சோதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான். புலம்பெயரும் பெண்ணுக்கு உதவிகளென்ற பெயரில் அனுசரிக்கப்படுவது போல் நடித்து ஆசைக்கிணங்க மறுக்கையில் வேசையென்று தூற்றப்படுகிறாள்.

அன்பின் ஆதரவுகளோடும் காதற் கனவுகளோடும் எத்தனையோ கதிரொளியிலும் நிலவழகிலும் ரசித்து வாழ்ந்து தீர்ந்திருக்க வேண்டிய ஒரு வாழ்வு மூதாதையர்களைப் பலிகொண்ட அசையும் கல்லறையான கடலிடம் சரண்டைந்ததைக் கைபிடித்துக் கூட்டிப் போய்க் காணச் செய்திருக்கிறார். தலை நிமிரத் தகுதியற்ற நாமும் கூட நின்றிருக்க வேண்டிய நாட்களில் குதூகலித்து வாழ்ந்த குற்ற உணர்வோடு குனிந்த படியே கண்டு வரலாம்.

அகரமுதல்வனின் புலமையில் முதுமொழி தன்னை புதுமுறுக்கம் கொண்டு வேண்டிய வெம்மையோடு வெளிப்பட்டிருக்கிறது. வர்ணனைகள் வலியையும் வாசித்து வாசித்துத் திளைக்கச் செய்திருக்கிறது. ஒரு கதைக்குள்ளாகவே மற்ற கதைகளும் வருவது மட்டும் தொடர்ச்சியான வாசிப்பைத் தடுமாற்றமடையச் செய்கிறது.

இணையில்லா இன்னல்களுக்குள்ளும் முடியாத முறையீடுகளுக்குள்ளும் இன்றுகளைக் கடத்தத் துடிக்கும் மனிதர்கள் நேற்றுகளை துர்கனவாக மறக்க நினைப்பதும் நாளைகளை நல்லதாய் எதிர்நோக்கப் பயப்படுவதும் இந்த உலகம் அழியுமட்டும் அவர்கள் நெஞ்சிலிருந்து மாயாத ஒன்றாய்த்தானிருக்கப் போகிறதெனும்போது நம் ஆறுதல்கள் அருகதையற்றாகிறது.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.