தனியறை மீன்கள் - அய்யனார் விஸ்வநாத்
ஒரு கவிதைக்கு அதன் முதல் வாசிப்பு மிக உன்னதம். முதல் வாசிப்பிலேயே புரிந்து கடைசி வரியில் வெடித்து அதன் அர்த்தம் நம் மனம் முழுக்கப் பரவுகிற நொடியில் கவிதை தன் படைப்புப்பேற்றை அடைந்து கொள்கிறது. அதன் பிறகு அதை மனப்பாடம் செய்து கொள்கிற அளவுக்கு மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டு மகிழ்தலும் நிறைதலும் அவரவர் தனிப்பட்ட வாசிப்புத் தன்மைக்கேற்ற விருப்பம். அப்படி முதல் வாசிப்பிலேயே உன்னதத்தை அடைந்து விடுகிற கவிதைகள் நிறைந்த தொகுப்பு.
காதல் மூத்துப் பித்தாகும் வேளையில் காமம் தொடும் கணங்கள் கவிதைகளாயிருக்கிறது. காமத்தை எழுதுகிறேன் பேர்வழி என்று வெறும் உறுப்புச் சிறப்புரைத்தல்களையும் புணர்ச்சி மகிழ்தலையும் மட்டுமே எழுதிக் குவிக்காமல் காதல் நுரைத்துச் சுழித்து மனமும் உடலும் கரையும் போதான நிகழும் போகத்தின் புனிதப் பிரதிகளாக உருப்பெற்றெருக்கிறது இத்தொகுப்பின் கவிதைகள்.
நிறைந்த நளின வளைவுகளோடும் அழிவில்லா அழகின் அமுதம் சுரந்தும் கலையாக் காமத்தின் கமக வாசங்களோடும் மழைக்கும் போதெல்லாம் வண்ண வண்ணமாய் மலர்வளாகவும் முத்தத்தின் போதெல்லாம் முகிழ்ப்பவளாகவும் கோபம் கொள்கையில் குரூரமாகிறவளாகவும் தவறிழைக்கையில் பூனைக்குட்டிகளுக்குப் பின் மறைந்து கொள்கிற மெல்லிய இதயம் படைத்தவளாகவும் இத்தொகுப்பு முழுக்க இயற்கையின் குண நலன்களையொட்டி ஒப்புவைக்கப்படும் ஒரு பெண் இருக்கிறாள். தொகுப்பின் வாசிப்பு நிறைவடைகையில் அப்பெண்ணை நாமும் காதலித்துக் களித்திருப்போம்.
இயற்கையைப் பாட்டில் வைத்தால் அழிவைப் பேசுவது இன்றியமையாகிவிட்ட துர்நிலையில் இயற்கையை காதல் பெருகிய வாழ்வியலின் இயல்பான கருட்பொருளாகப் பாவித்து பலகவிதைகள் எழுதப்பட்டிருக்கிறது. வாசிக்கும் நம் மனதிலும் ஈரமும் இன்பமும் உருப்பெருக்காகிறது.
கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பாம். கச்சிதத்தன்மையிலும் கவிதையொழுங்கிலும் கவிதைகள் மரபுமொழியில் மெல்லிய உணர்வுகளை உணர்ந்த புதுவித வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது. மகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறது. வாழ்த்துகள்.
புத்தகம் வழங்கிய மூத்த தோழிக்கு நன்றியும் அன்பும்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.