ரசவாதி - பாலோ கொயலோ

உறக்கத்தில் கண்ட கனவில் ஒரு புதையல் குறித்த தெளிவற்ற தகவல்களை நினைவில் வைத்துக் கொண்டு கண்ட கனவை நனவாக்கிப் பார்த்துவிடும் ஆசையோடும் மூர்க்கத்தோடு தீவிரமாக முன்னேறும் பயணத்தில் பிரபஞ்சத்தின் ஆன்மா பல்வேறான சகுனங்களைக் காண்பித்து வெற்றியை அடையச் செய்வதில் உதவி செய்தாலும் "உன் இதயம் எந்த இடத்தில் இருக்கிறதோ அங்குதான் நீ உன் புதையலைக் காண்பாயென்று ரசவாதியால் சாண்டியாகோவுக்குப் பலமுறை அறிவுறுத்தப்பட்டு அவன் பெரும்பாடுபட்டு ஒருவழியாகப் புதையலைக் கண்டறியும் சாகசப் பயணக் கதை.

புதையலைத் தேடித் தொடங்கும் பயணத்தில் தன் உடமைகளையும் , பணத்தையும் இழக்க நேர்கையிலும் மனத் தடுமாற்றங்களையும் உயிர்க்கே ஆபத்து வரும் சூழல்களிலும் என எப்போதும் புதையல் எடுக்கும் எண்ணத்திலிருந்து பின்வாங்கிக் கொள்ளலாமென்று பல முறை நினைக்கும் சாண்டியாகோ அதே வேளைகளில் எல்லாம் தான் பார்த்த பழைய, தன் மனதுக்குப் பிடித்த ஆட்டு இடையன் வேலையையும் செம்மறி ஆடுகளுடனான தன் இணக்கத்தையும் அடிக்கடி நினைத்து மகிழ்ந்து கொள்வான். அந்தத் தொழிலை விட்டு வந்தததற்காக வருந்தவும் செய்வான். ஆக அவனின் இதயம் முழுக்க செம்மறி ஆட்டுக் கொட்டகையில் தான் இருக்கும். அதனால் கதையின் முடிவாக சாண்டியாகோவின் இதயம் எங்கே இருக்கிறதோ எதை நினைத்துக் கொண்டே இருந்ததோ அங்கே தான் புதையலுமிருப்பதாக சுற்றி வளைத்து முடித்தது அட்டகாசம்

ஓரிடத்தில் தேங்குவதோ, சுற்றித் திரிவதோ, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதோ அல்ல அன்பு , அன்பென்பது பிரபஞ்ச ஆன்மாவைப் பரிபூரணமாக மாற்றி அதை மேம்படுத்தும் பொருட்டு மற்றவரிடம் செலுத்தும் போது நம்மை சிறந்தவர்களாக ஆக்குவதே அன்பு என்றும் கடவுள், பிரபஞ்ச அசைவுகளின் சங்கேத மொழி, ஆரம்ப கால வெற்றிகள், அதைக் கொண்டு முன்னேறும் சூட்சமம், துன்பம் வருகையில் கிடைக்கும் இயற்கையின் முன்னறிவிப்புகள், சிக்கல்களைச் சமாளித்தலின் போது கைக்கொண்டிருக்க வேண்டிய உடல் மற்றும் உள தைரியங்கள், காதல், காத்திருப்பு, துறவு,இழப்பு குறித்தெல்லாம் மிக ஆழமான விவாதங்கள் புத்தகத்தில் பேசப்பட்டு நாவலின் பலவரிகள் தத்துவச் சிதறல்களென்ற சிறப்பை அடைகிறது.

நீண்ட பயணத்தின் இடையில் இளைப்பாறக் கிடைத்த பாலைவனச் சோலையில் பூக்கும் ஒரு காதல் அத்தனை அழகு. பாலைவனப் பெண்களுக்கு பயணத்திலேயே தம் வாழ்வைக் கழிக்கும் பாலைவன ஆண்களின் இயல்புகள் குறித்த பார்வை உணர்வுப்பூர்வமான வெளிப்பாடாயிருந்தது. பாத்திமாவை சாண்டியாகோ இணைசேர்கையில் அன்பிலும் புரிதல்களிலும் வாழும் உலகக் காதலின் உன்னதப் பொழுதாயிருக்கும்.

பயணக்கதை என்ற அளவிலும் சிறப்பு பெற்று உலகம் முழுவதும் 100 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்த்து 9 கோடி புத்தகம் வித்திருக்காங்க இதுவரைக்கும். வாங்கி வாசித்த அத்தனை பேரையும் ஏதேனும் வகையில் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய எண்ண ஓட்டத்தில் கட்டாயம் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கும்.

மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பு. இத்தனை தத்துவார்த்த உரையாடல்கள் நிறைந்த நாவலை மொழிமாற்றம் போலத் தெரியாத அளவுக்கு தக்க சொற்களைத் தேர்வு செய்து எழுதி தமிழுக்கு மேலும் ஒரு அணியாய்ச் சேர்த்திக்கிறார்.

ரசவாதியைப் போலொரு மனிதன் நம் கூட இருந்து நம் எண்ணங்களைத் தெளிவாக்கிக் கொடுத்து வழிகாட்டினால் நம் விதிவழிப்பட்ட வாழ்வு இன்னும் எத்தனை சிறப்படையும் என்ற பேராசை பெருகுவதைத் தடுக்க முடியவில்லை.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.