பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்- மயிலன் ஜி சின்னப்பன்

காரணம் தெரியாத மரணமொன்றின் பலியாய் மறைந்த ஆளின் கதையொன்று எங்கள் வீட்டிலும் இருக்கிறது.
நேற்றைக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கழிந்த அவனின் மரணக்காரணம் இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.
வேலைக்குப் போன இடத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டானென்ற முதல் தொலைபேசி எனக்குத்தான் வந்தது.
உயர் சிகிச்சைக்கு வேண்டி (உயிர் இருக்கிறதா என்றறியாத மர்மங்களுடன்) தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றும் செய்தி எனக்குத்தான் முதலில் சொல்லப்பட்டது.
எத்தனையோ முயன்று பார்த்து விட்டோமென்றும் நாங்கள் அளிக்கும் மருத்துவத்தை அவனது உடல் ஏற்க மறுத்துவிட்டது என்ற பூடக மொழியில் ஆள் செத்துப் போய்விட்டானென்ற துக்கச்செய்தியும் அரசு மருத்துவமனையில் 8 மணி நேரக் காத்திருப்புக்குப் பின் முதன் முதலாக எனக்குத்தான் சொல்லப்பட்டது.
பொட்டலமாய்க் கிடைத்தவனை குழிக்குள் இறக்கி வைத்து கடைசியாக முகம் பார்ப்பவர்கள் என்ற வரிசையில் முதல் ஆளாக நின்றதும் நான் தான்.
ஆனால் அவனின் மரணம் ஒருபோதும் தற்கொலையல்ல என்ற தீர்க்கமான முன்முடிவுடன் இறப்பிற்கான காரணமறியாத வலியைச் சுமந்துகொண்டலையும் நான் எழுதியிருக்க வேண்டிய கதை இது.
நாவலின் ஒவ்வொரு பக்கத்தையும் அரசு மருத்துவமனையில் பனியில் நடுங்கிக் கொண்டே இரவு முழுக்க ஒரு உயிருக்காக 100 பேருக்கு மேல் காத்திருந்தைக் கண்கூடாகப் பார்த்துக் கடந்த மன நிலையுடனே படித்தேன்.
விறுவிறுப்பான நடையில் நாவல் ஒரு கிரைம் இன்வெஸ்டிகேசன் அனுபவத்தைக் கொடுக்கிறது. உண்மையாகவே ஒரு மூச்சில் வாசித்துவிடும் தேவையைக் கோரும் நாவல். சில பகுதிகள் ஒரு மலையாளப்படத்தை ஞாபகப்படுத்தியது. இருந்தாலும் நான் சமீபத்தில் வாசித்ததில் சிறப்பான நாவல்.
இரண்டு ஆத்மாக்களும் நினைவுகளில் சாந்தி பெறட்டும்.

Comments

Popular posts from this blog

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.

பிடிமண் - முத்துராசா குமார்