அன்புள்ள ஏவாளுக்கு - ஆலிஸ் வாக்கர் தமிழில் - சஹிதா
பல்லாண்டுகாலமாக மிகவும் சிக்கலான கருத்துருவாக்கங்களைத் தாங்கி நிற்கும் இருபெரும் உருவங்களான - ஆம் உணர்தல் தவிர்த்த உருவங்கள் மட்டுமே - கடவுள் மற்றும் பெண்கள் என்பவற்றிற்கிடையிலான முரண் வாழ்வுக்கிடையில் ஆண் என்ற அதிபயங்கரமான ஆளுமை செலுத்தும் ஆதிக்கம் என்ற முக்கோண வடிவ வாழ்வியலின் மையத்தில் ஓர் மனம்திறந்த உரையாடலை இரு பெண்களின் கடிதப்போக்குவரத்தின் ஊடாக நிகழ்த்தியிருக்கிறது நாவல்.
தன் மனமும் உடலும் வேண்டும் வண்ணம் தன் வாழ்வைத் தேர்வு செய்து வாழ்ந்து தீர்க்கும் பெண்கள் மற்றும் முன்னோர்களின் ஆணைகளுக்கும் சம்பிரதாயங்களின் சகதிகளிலும் சிக்கி வாழ்வைத் தொலைக்கும் பெண்கள் என்ற இருபாதையில் பயணித்து பல்வேறான மன அலைக்கழிப்புகளுக்கும் உடல் பங்குவைத்தல்களுக்கும் பாலியல் மீறல்களுக்கும் தனிமனித இழப்புகளுக்கும் குடும்ப வன்முறைகளுக்கும் உலக நியதிகளை அறியாத புதிரான கேள்விகளுக்கு காலம் வழங்கும் பதில்களுக்கும் ஆட்பட்டு தமக்குள் தேடிக் கண்டடைவதே கடவுளென்றும் இன்னொரு மனதை தன் மனதால் அணைப்பதே வாழ்வெனும் புரிதலில் அனைவரும் ஒன்றுபடும் மகிழ்வில் முடிகிறது.
கருப்பு, வெள்ளை என்ற மனிதத் தோல் நிறத்தின் வேறுபாடு எப்படி சக மனிதனை வெறுத்து அடிமைப்படுத்தவும் அழிக்கவும் நினைக்கும் இனவெறியாக உருவெடுத்ததென்றும் நவீனமென்ற பெயரில் காலனியாதிக்கம் ஊடுருவுகையில் ஆதி அடையாளத்தையும் பூர்வ நிலத்தையும் நிலம்சார்ந்த வாழ்வையும் இழக்கும் பழங்குடி மக்களின் கதையும் கல்விச்சாயத்தில் மதம் கலக்கிப் பரப்பும் பிரச்சாரகர்களின் நாடோடி வாழ்வையும் உள்ளடக்கிய நாவல் பல்வேறு தளங்களில் விரிகிறது.
கடவுள் என்பது என்ன ? அதன் பால் அடையாளம் என்ன ? அவரா ? அவளா ? அதுவா ? பணி என்ன ? உருவம் எப்படிப்பட்டது ? என்று நாவல் முழுக்க நீளும் கேள்விகளுக்கு ஒரு அதிகாரத்தில் இரு வேறு பார்வைகளையும் அனுபவங்களையும் கொண்ட பெண்களின் உரையாடல் வழியாக வெளிப்படும் பதில்கள் ஏற்றுக்கொள்பவரின் வெவ்வேறான வடிவ மனக்கலத்தில் நிறையும் ஒரே உயிர் என்ற இறுதிப்பதத்தை அடைகிறது. இதை உணரத்தொடங்கும் போது கடவுள் என்பது நல்லது கெட்டதுகளை வழங்கும் புறச் செயல்பாடல்ல என்றும் தாமே தம்மை நிறுத்துப் பார்த்துக் கொள்ளும் அகத்தூய்மை சார்ந்த வினைப்பயன் என்றும் துலங்குகிறது.
பேணி நடப்பவளே பெண்ணென்ற அதிகாரத்தோரணை ஆணுக்கு பெண் வாழ்வின் மீதான தீர்மானங்களைச் செயல்படுத்தும் சுதந்திரத்தையும் உரிமையையும் பல்லாயிரமாண்டாகக் கொடுத்துவரும் வேளையில் நாவலின் நிலம்,காலம்,கதாபாத்திர பெயர்ச் சுட்டல்கள், என்ற எந்த அடைப்புக்குள்ளும் அடங்காமல் எந்த நிலத்திலும் எந்த காலத்திலும் எவருக்கும் நடக்கும் அநீதியாகவே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவேண்டும் . காரணம் அந்த ஆதிக்க புத்தியின் உட்சூடு ஒருதுளியும் குறையவில்லை என்பதாகத்தான் இன்றைக்கும் பெண்ணுக்கெதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் சான்றாகிறது. இவற்றிற்கெதிரான கலகக்குரல்கள் உயர்ந்தாலும் அந்த குரல்களின் பரிசுத்தத்தை பரிசோதிக்க நீளும் கைகளாக இன்றும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது
Comments
Post a Comment