வெண்ணிலை - சு. வேணுகோபால்
கைவிடப்பட்டவர்களின் கதைகள்.
மழையால், விவசாயத்தால், ஊரால், குடும்பத்தால், உறவுகளால்,காதலால் என அனைத்திலும் கைவிடப்பட்டு வாழ்க்கையை விரக்தியுடனோ அல்லது அவ்விரக்தியிலிருந்து மீள சிறுபெரு நம்பிக்கைகளுடனோ அல்லது மீறல்களுடனோ வாழ்ந்து தீர்ப்பவர்களின் கதைகளாகவே தொகுப்பு முழுவதுமிருக்கிறது.
வாசித்த முதல் கதையே - உயிர்ச்சுனை - ஆழ்துளைக்கிணறு தோண்டியாவது தன் நிலத்தையும் வாழ்வையும் காத்துக்கொள்ள எண்ணி அரும்பாடு பட்டு ஆழ்துளை கிணறு தோண்டி அது நீரின்றிப் பொய்த்துப் போகிற சோகத்தோடு முடிகிற கதை. விவசாயத்தின் விவசாயிகளின் இன்றைய நிலைமை ஒரே கதையில் அறிந்து கொள்ளலாம்.
உள்ளிருந்து உடற்றும் பசி - திருமணமாகா அண்ணன் தங்கைகளின் மீது பாலியல் சீண்டலைத் தொடுப்பதான கதை. அதிர்ந்தே விட்டது கடைசி வரியில்.
வெண்ணிலை - யாரும் துணையில்லா முன்பின் பழக்கமில்லா நகரத்தில் இறந்த தந்தையின் பிணத்தை வைத்துக் கொண்டு அடுத்தென்ன செய்ய என்றறியாமல் நிற்கும் ஒரு பெண்ணிற்கு அவள் முன்பு வேலை பார்த்த கடைக்கு வந்து போன சில இளைஞர்களால் உதவி கிடைத்து வீடுபோய்ச் சேர்வதான கதை.
புத்துயிர்ப்பு - மழைபொய்த்துப் போன நிலையில் கால்நடைகளுக்காய்த் தீவனம் திருடப் போய்ப் பிடிபட்டுச் சிறைபுகும் விவசாயிக்குக் குறை மாதத்தில் பிள்ளை பிறந்து தொடர்ந்து வாழ்வதற்கான புத்துயிர்ப்பை அளிப்பது
தொப்புள் கொடி - கிறுக்கச்சிகளையும் கார்த்திகாவையும் - விட்டு வைக்காத காமவெறியர்களையும் மானம் எனக் கருதி அவளைக் கொல்லும் பெற்றோர்களையும் தூற்றுகிறது. ஒன்றுமறியாப் பெண் சாகும் காட்சி கொடூரம்.
பேரிளம் பெண் - தனக்குப் பிறந்த பெண் கர்ப்பிணியாய் பிரவச நாளில் வலியனுபவிக்கும் நாளிலும் தினம்தினம் மாயும் தன்னுடைய இளமையை எடுத்துக் காட்டிக் கொண்டு நடமாட விரும்பும் கதை.
வாழும் கலை - வேலைவாய்ப்பின்மையால் அல்லலுறும் குடும்பத்தில் ஆணுக்கு நேரும் அவமானங்கள்.
பேதை - எந்த கள்ளமும் இல்லாமல் பழகும் எதிர்வீட்டுப் பெண்ணை அத்தனை இச்சைகளுடனும் நினைத்துவிட்டு அவளின் உண்மைநிலை அறிந்த பின் திருந்தும் குடும்பத் தலைவன்.
தாய்மை - சொத்தைப் பங்கிக் கொடுத்த பின் தன்னை நடுவழியில் நிறுத்திய பிள்ளைகளை தன் வழிக்குக் கொண்டு வரவேண்டி காசுவெட்டிப் போடப் போய்விட்டு கடைசி நொடியில் மனமாறும் தாய்மை.
சந்தர்ப்பம் - கூடப்படிக்கும் நண்பனின் அக்கா திருமணத்திற்குப் போய்த் திரும்பும் சில இளைஞர்கள் வழியில் ஒரு இக்கட்டான சூழலிலிருக்கும் பெண்ணைக் காக்கும் கேயாஸ் தியரி முடிவு.
பிரியமான நாய்க்குட்டியின் பிரிவைத் தாங்க முடியாமல் அழும் குழந்தை, பயமுறுத்தும் ஆங்கிலவழிக் கல்வி, அம்மா - அப்பா சண்டை என தானும் வீடும் சுகமற்றிருந்தாலும் நடைபாதைப் பிச்சைக்கார தாத்தாவிற்கு பிஸ்கட் கொடுக்கும் குழந்தை என குழந்தைகளின் ஈர மனதையும் அது பெரியவர்களுக்கு மரத்துப் போன சோகங்களையும் பேசுகிறது.
விவசாய வாழ்க்கையைச் சார்ந்தே கதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்தின் முக்கியத்துவமறியாமற் போக்கடிக்கப்பட்ட தலைமுறைகளின் நகரத்துப் படையெடுப்பில் அழியும் கிராம வாழ்வியல் ஒரு பெரிய கேள்விக்குள்ளாகி நிற்பதை அவர்களுக்குள் ஒரு ஆளாக நின்றே குரலெழுப்புகிறார்.
பெண்களைப் பற்றி - அவர்களுக்கு ஆணிடமிருந்தான சரிசமப் பங்கீடுகள், காதல், காமம் உள்ளிட்ட புரிந்துகொள்ளப்படா மெல்லிய உணர்வுகள்,ஒரு வாழ்வியலுக்கான போதிய அடிப்படைத் தேவைகளற்றுப் போகும் சூழல்களில் பெண் முன்வந்து பொறுப்பேற்கும் அவசியங்கள், பெண் மீதாகக் கட்டவிழ்க்கப்படும் பாலியல் மற்றும் உளவியல் வன்முறைகள் என நீள்கிறது பட்டியல்.
ஒவ்வொரு கதையும் பெருஞ்சோகத்தில் தான் முடிகிறது. வாழ்வென்பது வாழமுடியாததாக ஆகும் சூழ்நிலைகளில் மனிதர்கள் அடையும் வலிகளும் இயலாமகளும் சகிக்க முடியாத துன்பங்களை அடைகிறது. இன்னும் இன்னும் கூறினால் நீண்டுகொண்டே போகும் மனக்குமுறல்களில் தொகுப்பே இக்கதைகள்.
கிராமத்து மொழியிலான எளிய மக்களின் கதைகள் அருகிலிருந்து பார்த்தாப் போன்றதான கூறல் என வாசிக்க வாசிக்க அத்தனை சுகமான தொகுப்பு ஒரு நிறைவைத் தருகிறது.
Comments
Post a Comment