சிலிர்ப்பு

தி. ஜானகிராமன் 

கோபுரத்துடன் சந்நிதிசங்கீதம்
காவிரி
வெற்றிலைச் சீவல்
காபி
ரயில்
குளம்
அதீத ரசனையுடன் படைக்கப்பட்ட ஏராளமான பெண்கள்
அவர்களைச் சுற்றி வாழும் ஆண்கள்
வாழ்ந்து நிறைந்த கிழவர்கள்
தீர்வுதேடும் மனச்சிக்கல்கள்
நிறைய அறம்கொண்ட மனிதர்கள்

இவைகள் தான் இந்தத் தொகுப்பு முழுக்க.
வாசிக்க வாசிக்கத் திகட்டாத இவ்வளவு சுகமான எழுத்து நடை. திண்ணையிலமர்ந்து கொண்டு ஒரு மூத்தவரிடம் கதை கேட்பது போலான சுகத்தில் அவர்சமூக மக்களின் வாழ்க்கையை அத்தனை உன்னிப்பான கவனிப்போடு பதிவு செய்திருக்கிறார்.

நீட்ட வேண்டிய இடத்தில் கொஞ்சம் நின்று நிதானமாகவும் சுருக்கிய சொற்களில் பட்டென்றும் பேசிச் செல்லும் எழுத்தாளுமை வியப்பு. தி.ஜா.வின் தனித்தன்மையை யாரும் நெருங்க முடியாதபடிக்குப் பார்த்தும் கொள்வது அவரின் எளிமையான உரையாடல்களில் மறைந்திருக்கும் அழுத்தமான சொற்களில் அமைக்கப்பட்ட நுட்பமான பார்வைகள் தான்.

29 கதைகள். 29 கருத்து. அப்படியெல்லாம் இல்லை. ஒரே முழக்கம் மனிதம் மட்டுமே. அதை விதவிதமான மனிதர்களின் கீழ்மைகளுக்கும் மேன்மைகளுக்கும் இடையிலாக ஓடும் நதி போல காட்டுகிறார். ஒரே ஆள் சில நேரங்களில் கெட்டவராகவும் அடுத்த நொடியே மகானாகவும் மாறுவது அவர்தான் கொண்டிருக்கும் சுயநலத்தைக் கைவிடும்போதுதான் என்று உரக்கக் கூறும் கதைகள்.

தி.ஜா.வின் பெண் கதாப்பாத்திரங்கள் அனைத்துமே அதி அழகானவர்கள். அவரின் எழுத்து அவரை அழகாகவே காட்ட விரும்புகிறது. கொஞ்சம் சுட்டித்தனமானவர்கள். ஒரே குறையா இல்லை காலம் அப்படித்தானா என்று தெரியவில்லை அனைத்துப் பெண்களுமே கட்டுப்பெட்டித்தனமானவர்கள். இத்தனை பெண்களை ஒருவரால் எப்படி இத்தனை அழகாகவே ரசனையோடே படைக்க முடிந்திருக்கிறதென்பது ஆச்சர்யமே. உடலமைப்பு, அலங்காரம்,மன ஓட்டங்கள் பற்றிய விவரணைகள் அனைத்துமே அத்தனை அழகு.

ஒழுக்கம்,விதிகள் எல்லாம் மனிதன் நேர்கொள்ளும் சந்தர்ப்பங்களின் முன் போற்றிப் பாதுகாக்க முடியாதவை என்றும் பேசும் தி.ஜா.அனைத்துக் கதைகளிலும் சுபத்தையே விரும்புகிறார்.

சுஜாதாவைப் படித்துவிட்டு தி.ஜா.வைப் படிக்கும் போது ஒரே சமூகத்தைச் சார்ந்த இரண்டு ஆளுமைகள் தான் தேர்வுசெய்த வெவ்வேறு பாதைகள் குறித்து வியப்புறச் செய்கிறது.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.