தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ்.

வாழ்வாங்கு வாழவைத்த வயலும் தோப்பும் குடியிருப்பு நகரான எதார்த்தச் சித்திரம். அதில் இயற்கையின் மீதான நேசமும் சக மனித அன்பும் சரிந்த கதை.

வானுக்குக் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் அமிர்தமான மழை பொய்த்து விவசாயம் அழிந்து போகிறபோது சமூகம் அடையும் அகபுற மாற்றங்கள் , நிலம் மற்றும் சூழல் அடையும் உருமாற்றங்கள், நீராதாரப் பாழ்படல்கள், தொழில் நெருக்கடிகள் - போட்டிகள், பொருளாதாரப் பின்னடைவுகள், அதனுள் முளைக்கும் ஏற்றத்தாழ்வுகள், இடப்பெயர்வுகள், அதில் சோமு என்ற மூத்த குடியானவரின் குடும்பம் பாதிக்கப்பட்டு அவர்கள் பண்ணையம் பார்த்து வந்த நிலம் கைவிட்டுப்போவது சார்ந்த பிரச்சினைகள், அவரின் தம்பி குடும்பத்தின் கணவன் - மனைவி அதிகாரக் கூச்சல்களில் சிக்கி அழியும் வாழ்வு, பறிபோகிற உயிர்கள், சோமு குடும்ப உறவுகளுக்குள் நேர்கிற சொத்துப் பகிர்வுகள் தொடங்கிய மனஸ்தாபங்கள், அடுத்து என்னவென்று அறியாத அலைக்கழிப்புகள்,வாழ்வியல் தேவைகளுக்காக விவசாயத்தை விட்டு வெளியேறிப்போய்த் தேடிக் கொண்ட தேற்றுதல்கள், அடுத்தடுத்த தலைமுறைகளின் கேள்விக்குள்ளாகும் எதிர்காலங்கள், பிழைப்புக்கான அல்லல்கள், வழிமாறும் இளமைப் பருவங்கள், காதல், காமம் சார்ந்த அவசர முடிவுகள்,அதிலுண்டாகும் அடிதடிகள், இவையனைத்திலும் மையமாகவும் மர்மமாகவும் இருந்து ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கண்காணாமைகள், ஜாதிய பின்புல மார்தட்டல்கள், தாழ்த்தப்படவரை அடிமைகளென நடத்தும் ஆண்டை மனப்பான்மைகள் என இந்த நாவல் பெரும்ப்பேச்சு பேசியிருக்கிறது.

நாவல் நம் கண் முன் நடந்த இயற்கைப் பேரழிப்புகளையும் அதைத் தொடர்ந்த மனிதன் அடைந்த சீரழிவுகளையும் பக்கத்துக்குப் பக்கம் விவரிக்கிறது. நிலம் கொண்டவன் அதிகாரம் மிக்கவனாகவும் நிலமற்றவன் அடிமையாகவும் வாழ்ந்திருந்த காலங்களில் நிலமென்ற பெருஞ்சொத்து சமூகத்துக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் பெற்றுத் தரும் பெருமையையும் ஆளுமையும் அதனால கிட்டிய வளர்ச்சியும் நிம்மதியும் அதே நிலம் கைவிட்டுப் போகும்போது அடையும் அலைவுகள் சாதாரணமானதல்ல என்று சாட்சிகளுடன் நிறுவுகிறது.

கால மாற்றங்களுக்குப் பணிவது மறுமலர்ச்சியா மடமையா என்ற கேள்விக்கு முன்னால் அடைந்த வளர்ச்சிகளை விடவும் இழந்த வாழ்வே பெரிதெனும் போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. அந்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நம் மூத்த தலைமுறைகள் வாழும் வரைக்கும் புழுங்கிக் கொண்டே வாழ்ந்ததும் வேறு மார்க்கத்துக்கு வழிகாண முடியாமல் செத்ததும் வாழ்வியல் பிழைகளே.

கார்ல் மார்க்ஸ் அவரின் கவித்துவமான எழுத்து இந்த நாவலை அத்தனை ரசித்து வாசிக்கச் செய்கிறது. ஒவ்வொன்றுக்குமான நின்று நிதானமாக விரியும் நுண்ணிய விவரணைகள் காட்சிகளை மனதுள் உருப்பெருக்கிக் கொண்டே செல்கிறது. தேர்ந்த மொழி நம்மை மிக உன்னிப்பான வாசிப்பைக் கோருகிறது. தனது சிறுகதைகளைப் படித்து விரும்பி தனது முதல் நாவலை வாசிக்க வரும் வாசகனுக்கு பிரம்மாண்டமான வாசிப்பனுபவத்தை வழங்கியிருக்கிறது

அதே போல் கேட்டுக் கேட்டுத் தீராத கதையில் ஒவ்வாமைகளும் கேள்விகளும் நாவலில் நிறைய இருக்கிறது. விடைதேடும் அக்கேள்விகள் இந்த நாவலை நம் மனதில் எங்கு நிறுத்தும் என்பதும் கவனிக்கத்தக்கதே. புதிய நாவல் இன்னும் பரந்துபட்ட வாசிப்பை அடையும் போது அதைப் பற்றிப் பேசித் தெளிவோம்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.