இருமுனை - தூயன்
எப்போதுமே ஒரு கதையின் களம் பழையதோ புதியதோ ஆனால் அது சொல்லப்படுகிற விதத்திலும் மொழியிலும் இதுவரை சொல்லாத மயக்கத்தை வரித்துக் கொண்டு தன்னைத் தானே வேறொன்றாக மாற்றிக் கொள்ள விழையும்.
இந்தத் தொகுப்பின் கதைகள் இதுவரை சொல்லப்படாத கதைகளில்லையென்றாலும் கதைசொல்லும் பாங்கிலிருக்கும் நிதானமும் எழுதியிருக்கும் மொழியிலிருக்கும் புதுமையும் மிகவும் கவர்கிறது. காரணம் ஒரே ஒரு சொற்றொடர் கூட க்ளிஷேவாக இல்லை. திரும்ப வாசித்து மகிழச் செய்யும் புதிய புதிய விவரணைகளில் வாசிக்கும் போது கதைகள் நமக்கு புதிய அனுபவங்களைக் கொடுக்கிறது. வாசித்த 7 கதைகளுமே விடாது துரத்தும் வாழ்க்கைப் பாடுகளிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் போது ஆட்படுகிற அதீத மனவெழுச்சிகளுக்குள் அலைக்கழியும் மாந்தர்களைப் பற்றிய கதைகளே.
இன்னொருவன் பஞ்சம் பிழைக்க மாநில எல்லைகளும் மனித மாண்புகளும் கடந்து வந்து பணிபுரியும் வடமாநிலத்தவரின் சுகதுக்கங்களை போதிய புரிதல்களோடு நாம் அணுகவும் உடலுழைப்பாளர்கள் என்ற மலின வெளித்தோற்றத்திலிருந்து அவர்கட்கும் மனமென்பதும் உணர்வுகளென்பதும் உண்டென்று அரியவும் வேண்டுகிறது.
எஞ்சுதல் என்ற கதை குழந்தையில்லாத தம்பதியரின் அகபுற அழுத்தங்களையும் தனிமையின் தடுமாற்றங்களையும் பேசுகிறது. மிக மிக அழகான வர்ணனைகள் கொண்ட இந்தக் கதை தொகுப்பில் எனக்குப் பிடித்த கதை.
முகம் கதை மனிதத் தேவைக்கேற்ப துணியும் ஈனங்களையும் மூர்க்கங்களையும் கொடூரமாய்க் காட்டுகிறது. பன்றிகளைப் பற்றிய சித்திரங்கள் எனக்குப் புதியனவாக இருந்தது.
இருமுனை கதைதான் என்னை மிகவும் சோதித்த கதை. ஏதோ ஒன்றில் குவியும் மனம் அதீத ஈடுபாட்டில் நிலைதடுமாறி தனக்குள்ளேயே இன்னொருவராக உருவம் கொள்ளும் உளச்சிக்கலின் ஊறுகளையும் ஓவியங்கள் தொடர்பான தேடல்களையும் நிகழ்த்துகிறது.
மஞ்சள் மீன் கதை பால்யங்களில் நமக்கிருந்த ஆச்சர்யங்களின் வழியேயும் அறியாமைகளின் வழியேயும் நாமுணர்ந்த மகிழ்வுகளையும் இழப்புகளையும் நினைவுகளாக மீட்டெடுத்துத் தந்து கல்வியமைப்பின் போதாமைகளையும் சுட்டுகிறது.
பேராழத்தில் கதை ஒரு சிற்பியின் மனம் அவரது வயதுகளைக் கடந்தும் நிலைகொள்ளாத அலைபாய்ச்சல்களினால் உயிரிழப்பையே சந்திக்க நேர்ந்ததை புராதனக் காலத்துப் பின்னணியில் பேசியிருக்கிறது.
தலைப்பிரட்டைகள் கதை தலைமுறைகள் கடந்தும் தானடையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் நிச்சயமற்ற வாழ்வைத் பீடித்த தனிமைகளையும் வடிகாலாகும் காமத்தேடல்களையும் கொண்டு கடக்கிற இளைஞர்களின் இன்னல்ப் பக்கங்கள்.
என்றென்றைக்கும் மறக்காதிருக்கும்படியான கதைகளைக் கொண்ட மிக நல்ல தொகுப்பு
Comments
Post a Comment