உயர்திணைப்பறவை - கதிர்பாரதி.


 



முதல் வரியில் ஆரம்பித்து கடைசி வரியை வாசித்து முடிக்கும்போது ஒரு "அட!' என்ற ஆச்சர்யத்தையும் நம்முடைய ஏதாவது ஒரு உணர்வைத் தொட்டுத் திறக்கும் கவிதைகளை மட்டும் நல்ல கவிதைகளென்பதைத் தவிர கவிதைக்கு எந்த பின்னூட்டமும் வழங்கத் தெரியாத எனக்கு விருப்பக் கவியாகிவிட்டவரின் மூன்றாவது தொகுப்பு ...

முதலில் ஆனந்தியை வாசிக்கும்போதே பிடித்துப் போனது. அடுத்து மெசியாவை வாசித்துவிட்டு பெரும் திருப்தியோடும் உணர்ச்சிப் பெருக்கோடும் கதிர் அவர்களிடம் சிலாகித்துப் பேசும் போது "தொகுப்பு முழுக்க சிறந்த கவிதைகளாக இருக்கிறதே !" என்ற என் கேள்விக்கு " நான் பத்துவருடங்களாக எழுதியதில் இருந்து எனக்குப் பிடித்ததை எடுத்து இத்தொகுப்பை அமைத்திருக்கிறேன்" என்றார். அதிர்ந்தே விட்டேன். (சமூக வலைதளங்களின் மேன்மையை உணர்ந்துகொண்டேன்) அந்த அளவுக்கு காலப் பொறுமையும் கலை நேர்த்தியும் தன் கவிதைகளுக்கு வழங்கியவரின் மேலும் ஒரு நல்ல தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.

புதிய மொழிதலை வழங்குகிறேன்று வாசிப்பைக் கடினமாக்கிடாத, இசங்களைக் கைக்கொண்டெழுதுகிறேனென்று கவிதை அனுபவங்களைத் தொலைக்கச் செய்து விடாத, காட்சிகளை விளக்கி கதைகூறும் சொற்பொழிவாக இருந்துவிடாத, அடுத்தடுத்த வரிகளில் பிரித்து வைத்த வார்த்தைகளில் தம் மேதமைச் செருக்கையெல்லாம் கொட்டிக் காட்டிடாத கச்சிதமும் கவிதைக் கணங்களும் நிறைந்த எழுத்தாகவே அமைந்த இந்தத் தொகுப்பில், அமைப்பில் நீண்ட கவிதைகள் ( ஒருபக்கக் கவிதைகள் கூட ) குறைவாகவும் சிறிய கவிதைகளை அதிகமாகவும் கொண்டு எளிமையாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும் படியாகவும் இருக்கிறது.

முன்னிரண்டு தொகுப்பிலும் இல்லாததாய் ஒரே தலைப்பில் பல கவிதைகளாக எண்ணிட்டு எழுதியவைகள் நிறைந்த தொகுப்பு. அம்மா தலைப்பில் எழுதிய கவிதைகள் இயல்பானதாகவே இருந்தாலும் கலக்கமுறச் செய்வதாகவும், சிசிடிவி பற்றிய கவிதைகளெல்லலாம் அதன் ஆளுமைகளையும் காலத்தையும் பிரதிபலிப்பதாகவும், இதயத்துக்கு கண்ணீர்ச்சொட்டு வடிவம் போன்ற காதல் கவிதைகள் குறைவாகவும், வசந்தத்தில் பழுத்த ஒரு இலையே சுட்டும்விழிச் சுடர் போன்ற அனுபவ முதுமைகள் நிறைந்ததாகவும் தான் தைத்ததிலேயே பிசிறு தட்டிய ரவிக்கை ஒன்று தன் வீட்டிலேயே உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வைத்த கிளியான கதையாய் முடிந்த கொக்கிப் பூ போன்றவை உயிரோட்டமானதாகவும் ஜனரஞ்சகமானதாகவும், அப்பா ஒரு காலக்கல் போன்றவை சுய அனுபவச் சேகரத்திலிருந்து மேலெழுந்தவையாகவும் இளையராஜாவையும் மறக்காத பழைய தலைமுறை மனமாகவும் இருந்து கனகமணிக்கொலுசில் ஆரம்பித்து மாட்டின் கழுத்து ஓசையில் முடிந்த ஒரு பெரிய சுற்றாய் இருந்தது உயர்திணைப்பறவையின் வலசை.

முதல் வாசிப்பில் போதிய புரிதல்க் குறைபாடுகளையும் சில முன்முடிவுகளை வழங்கிவிடக் கூடியதான அபாயங்களும் கவிதை வாசிப்புக்கு இருந்தாலும் இந்தத் தொகுப்பின் வாசிப்பு மனதை நிறைத்த தொகுப்பாகவே முடிந்திருக்கிறது


Comments

Popular posts from this blog