இத்துப் போன இதிகாசம்ங்க
கசந்து போன காவியம்ங்க
பிழைப்புக்கு வழியில்லாப் பிரதிங்க
உழைப்புக்கு ஓய்வில்லாக் கதைங்க

ஆண்டமாரும் பெரிய துரைமாரும்
கரைக்காரும் வயக் கொத்துக்காரும்
கூறுபோட்டு வீசிய கந்தலுங்க
சீருபோட்டு பேச ஒன்னுமில்ல

சாதியில ரொம்பக் கீழங்க
சந்ததிப் பெருமைன்னு ஏதுங்க
சகதி அழுக்கோட மல்லுக்கட்டும்
சனத்துக்கு வண்ணான்னு பேருங்க

பிரவசத்துக்கு நாங்க வேணும்
குச்சுக்கட்ட நாங்க வேணும்
மேடைகட்ட நாங்க வேணும்
பாடைகட்ட நாங்க வேணும்

வெள்ளாமைக்கு நாங்க வேணும்
வெள்ளாவிக்கு நாங்க வேணும்
நல்லதுகெட்டதுக்கு நாங்க வேணும்
போனதுவந்ததுக்கு நாங்க வேணும்

வேளை பார்க்காமக் கூப்பிட்டு
வேலை சொன்னாச் செய்யனும்
வாடா போடான்னு ஏசினாலும்
வாயத் திறக்காம நிற்கனும்

கையப் பிடிச்சு இழுத்தாலும்
வைக்கோலுப் பொம்மை போல
முந்தனை விரிச்சுப் படுத்துட்டு
மறைவுல மாரடிச்சு அழுகனும்

ஆம்பிளைக பேசாம அடங்கனும்
பொம்பளைக கூசாம மடங்கனும்
பொதிமாட்டுக் தலை தூக்காம
காலத்துக்கும் கதியேன்னு கடக்கனும்

ஆனாலும் ஆகாத ஆளுக
அடிச்சாலும் நோகாத மேலுக
போக்கத்த பயலுகன்னு வஞ்சாலும்
பொதுவுல பொங்காத சாலுக

எங்கள மாறவும் விடமாட்டீக
உங்கள மீறவும் விடமாட்டீக
காலச் சுத்திக் கிடந்தாலும்
வாழவும் சாகவும் விடமாட்டீக

அழுது அழுது தீர்க்குறோம்
அந்திய வெறிச்சுப் பார்க்குறோம்
விடிஞ்சா சரியாப் போய்டும்னு
விடிய விடியக் குமையுறோம்

ஏழைக்கு என்னசாமி வேண்டுதலு
மாலைக்கு நாராக இருக்கிறோமே
நாளைக்கு மாறும்னு ஆசையா
நாங்களும் காத்துக் கிடக்கிறோம்
 

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.