ஏழு தலைமுறைகள் , அலெக்ஸ் ஹேலி.

வெள்ளைக்காரன் எங்க போனாலும் முதல்ல கோர்ட் கட்டுவான். சட்டங்கள இயற்றி அடிமைகள உருவாக்க. அதன்பிறகு மாதா கோவில் கட்டுவான். நான் கிறித்துவன்னு சொல்லிப் பரப்ப.

- ஏழு தலைமுறைகள் , அலெக்ஸ் ஹேலி.

(வெள்ளைக்காரன்னா பிரிட்டிஷ் மட்டுமல்ல. சிவப்பு நிறத்தவர்கள்.)

இந்த இரண்டும் ஏழு தலைமுறைகள் நாவல்ல மட்டுமல்ல உலகம் முழுக்கவும் நடந்திருக்கு. குறிப்பா நாவல்ல நிறத்துக்கு ஒரு சட்டம்னு ஒருசார்புடைய சட்டங்களின் மூலமா கறுப்பின மக்கள பல நூறாண்டு காலமா பல தலைமுறைகளா அடிமையா வச்சிருந்தாங்க. இரண்டாவதா முந்தைய தலைமுறைகளில் வேற்று மதமா இருந்தவங்க இன்னத்த தலைமுறைல கிறிஸ்துவ மதமா மாற்றிருக்காங்க.

நாவலாசிரியரின் தன் முந்தைய தலைமுறைகளைத் தேடிச் சென்று கண்டடைந்த பின்னோக்கிய பயணமா நாவல் எழுதப்பட்டிருக்கு. சாதரணர்களாக சந்தோசமிக்க வாழ்க்கைய வாழ்ந்துகிட்ட இருக்கிற ஒரு கிராமத்துக் குடும்பத்துல ஒரு இளவயது பையனா குண்ட்டா வெள்ளையர்களால் அடிமையாக்க வேண்டி கடத்தப்படுகிறான். அங்கிருந்து நீளும் கதை நாவலாசிரியரின் தாத்தாவான கோழி ஜார்ஜின் காலம் வரை தொடர்ந்து ஐந்து தலைமுறைகள் வெவ்வேறு முதலாளிகளிடம் வெவ்வேறு ஊர்களில் வலுக்கட்டாயமாக குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டும் விற்கப்பட்டும் ஆண் பணிடிமையென்றால் பெண் படுக்கையடிமையாக்கப்பட்டும் மனிதர்களென்ற குறைந்தபட்ச உரிமைகளுமற்று வாழ்ந்து மரித்த துன்பியற்த் தொடர்கதை நாவல்.

நிறவேறுபாடின்றி ஒரு பாவமுமறியாத கறுப்பினர்களின் மீதான கொடூர எதேச்சதிகாரப் போக்கும் சிறு- பெரு முதலாளித்துவ மன நிலையும் நாங்கள் தான் மண்ணின் ராஜாக்கள் நீங்களெல்லாம் எம் வேலையாட்கள் என்ற பணத்திமிர்த் தோரணையும் ஒரு மன நோயாக மாறிவிட்ட வெள்ளைக்கார சமூகத்திடம் சிக்கும் கறுப்பின மனிதர்களின் மீதான தாக்குதல்களும், பாலியல் அத்துமீறல்களும், குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகளும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சொல்லி மாளாத எத்தனை விதமான கொடுமைகளை இந்த நிறவேற்றுமையால கறுப்பின மக்கள் அனுபவிச்சிருக்காங்கன்னு நாவல் படிக்கும் போது நடுங்கிக் கொண்டே உணரவும் கலங்கவும் முடியுது.

அடிமையாக்கப்பட்ட பின்னரும் தலைமுறைகள் மாறும் போது கறுப்பின மக்களின் மனம் எத்தனை மாற்றமடையுதுன்னும் அழகா சொல்லிருக்காங்க. மூத்த தலைமுறை மொத்தமாக முரண்டுபிடிக்கும் போது அடுத்த தலைமுறை கொஞ்சம் அனுசரிக்கத் தொடங்குகிறது. அதற்கடுத்த தலைமுறை தொழில் வாய்ப்புகளுக்கு வேண்டி இணைந்து பயணிக்கத் தொடங்குது. அடுத்த தலைமுறை சொந்தக் காலில் நிற்கத் திராணியைப் பெற்றுக் கொள்ளும் போது எதிர்த்துப் பேசத் தொடங்குது. ஆனால் இத்தனை தலைமுறை மாற்றத்திலும் விடுதலை உணர்வு ஒரு உரிமைக்கோல் போல கைமாற்றப்பட்டுக் கொண்டே வருகிறது. அதை அடைகிற போது அவர்களடையும் ஆனந்தமும் அவர்களின் மூத்த தலைமுறைக்காரகள் உட்பட தனது மொத்த வாழ்க்கையையுமே கடந்துபோன அடிமையிருட்காலம் விழுங்கிவிட்ட போதும் பெருங்கொண்டாட்டத்தை நிகழ்த்துகிறது.

வேற்றுமைகளும் அடக்குமுறைகளும் இல்லாம இருந்திருந்தா இந்த பூமியில் அநேக மக்கள் தம் குடும்பத்தோடும் தம் சொந்த - சமூக வளர்ச்சிகளோடும் எத்தனையோ மகிழ்வுகளை அடைந்து பெருவாழ்வு வாழ்ந்து மடிந்திருக்கும். இந்த நிமிசம் கூட எங்கோ ஒரு மூலையில் அடிமைப்பட்டுத்தப்படும் உரிமை மறுக்கப்படும் ஜீவன்களின் கண்ணீரிலிருந்தும் கதறல்களிலுமிருந்தும் நாளைக்கான கனவுச் சிதைவுகளிலிருந்தும் விடுபட்டு சுகவாழ்வு வாழ வேண்டுமென வேண்டச் செய்கிறது நாவல்.

மூல நாவலான ரூட்ஸின் சுருங்கிய வடிவமான இந்த நாவலே வாசிக்க வாசிக்க மனதைப் பதைக்கச் செய்கிறது. விரிவான புத்தகம் நிச்சயமாக நம்மை இன்னும் மிகப் பெரிய பாதிப்புக்குள்ளாக்கவே செய்யும்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.