பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவம்

"நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளி பாய்ச்சுகிறது" என்று இந்தப் புத்தகத்தின் பின்னட்டையில் ஒருவரி இருக்கிறது. இத்தனை நாளாக நாம் கற்றறிந்த அல்லது கேட்டறிந்த நம் தகவலறிவு என்றும் கேள்விகளோடோ அல்லது கண்மூடித்தனமாக நம்பும் உலக உண்மைகள் என்றும் கைக்கொண்டிருக்கும் அத்தனை அகபுற இருள்களின் மீதும் தொ.ப.தனது நூலாய்விலும் களஆய்விலும் ஆய்ந்து பெற்ற அபார அறிவாற்றலைக் கொண்டு வெளிச்சம் வீசி புத்தொளி பாய்ச்சுகிறார்.

இத்தனை ஆண்டுகளாக என்ன முறையிலான வாழ்வை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ? எத்தனையோ தலைமுறைகள் மாற்றி நம் கைவந்து சேர்ந்திருக்கும் நம்பிக்கைகளையும், சமய கட்டமைப்புகளையும், வழிபாட்டுச் சடங்குகளையும், சமூகப் பொருளாதார இசங்களையும் பின்பற்றித்தானே... ஒரு நாளாவது நாம் மேற்சொன்னவைகளின் உண்மைத்தன்மைகளைக் குறித்தோ வரலாற்று நிறுவல்கள் குறித்தோ பயன்படுத்தும் பொருட்களின் பயன்பாட்டுத் தொடர்ச்சி குறித்தோ நாம் யோசித்திருக்கிறோமா? இல்லை ஒரு படி மேலே போய் அத்தனையையும் ஆய்விற்குப்படுத்த வேண்டுமென்று தோள் நிமிர்த்தித் துணிந்திருக்கிறோமா ? இவையனைத்தையும் தன்னைத் தனிமனித இயக்கமாய் தலையிலேற்றி வைத்துக் கொண்டு ஒராளாய்ச் செய்திருக்கிறார்.

தமிழ் , தமிழர் , தமிழர் தம் வீடும் வாழ்வும், உறவும்,உணவும், உறைவிடமும், சமயமும், சடங்குகளும், சாதியில் விளையும் பெருமையும் சிறுமையும்,விளையாட்டும் விதிகளும், அவ்விதிகளுப் பின்னிருக்கும் சூதும் சுகமும், மக்கள் சூட்டிக் கொண்ட பெயரும் புகழும், தோல் நிறமும் தொல் பொருள் மாண்புகளும், சிறு- பெரு தெய்வ வழிபாடுகளும் மரபிலூறிய வழக்கங்களும் என நீளும் ஆய்வறிக்கைகளின் தொகுப்பில் எந்த ஒரு வரியும் கற்பனையோ களங்கமோ அல்ல. அத்தனை மொழிதலுக்கும் தன் ஆயுள் முழுக்கத் தேடித் தேடிப் படித்த சங்ககாலம் முதல் இக்காலம் வரையிலான இலக்கியங்களில் தேடியெடுத்த மேற்கோள்களாலும் நாடு முழுக்கக் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டியல் கற்றல்களாலும் பல்வேறான மொழியறிவாலும் வரிக்கு வரி மறுப்பில்லாததும் மாற்றில்லாததுமான சான்றளித்திருக்கிறார்.

பௌத்த , சமண சமயங்களின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி என அனைத்தையும் பேசியிருக்கிறார். அச்சயமங்கள் இன்றளவும் தமிழ் மண்ணின் வாழ்வியலின் மீது படிந்திருக்கும் சிறுசிறு பாதிப்புகள் பற்றியெல்லாம் மிக எளிமையாகவும் தரவுகளோடும் பேசியிருக்கிறார். பள்ளி, கல்லூரி, என்ற வார்த்தைகளின் விளக்கங்களும் சமணர்களின் கல்வியறிவு குறித்த விழிப்புணர்வு அந்தக் காலத்திலேயே அதிக அளவு இருந்ததைப் படித்த போதும் பௌத்தர்களின் மொட்டையடித்தல் சடங்கே இன்றும் நம்மிள் நிலவும் மொட்டையடித்தல் சடங்கென நிறுவுவதையும் வாசிக்க வாசிக்க அத்தனை ஆச்சர்யமாக இருந்தது.

பல சமய நம்பிக்கைகள் நிறைந்திருக்கும் நம் சமூகத்தில் அதன் மீதெழுப்பும் கேள்விகள் ஆண்டாண்டுகளாய் கவனப்படுத்தப்பட்டும் அதே அளவுக்கு எதிர்க்கப்பட்டும் வந்திருக்கிறது. ஆனால் எதையும் ஆய்விலடைந்த ஆதாரங்களோடான விவாதங்களுக்கு உட்படுத்துகையில் நிச்சயம் ஒரு தெளிவு பிறக்கும். அப்படித்தான் இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பாகம் தமிழகத்தின் பல சமய நம்பிக்கைகளிலும் சிறு பெரு தெய்வ வழிபாடுகளிலும் நமக்குப் பல விசயங்களை விரிவான பார்வைகளோடும் உள்ளார்ந்த தொடர்புகளோடும் தெளிவாக்குகிறது. அழகர் கோவில் ஆய்வு தொல்லாய்வின் அபாரமான ஆய்வுப் பணிக்கு மைல்கல்லாகத் தொடர்வதும் ஆச்சரியமே.

பக்கம் பக்கமாக திறக்கும் உண்மைகளின் ஆதாரங்களின் அரிவாள் பட்டு நம் அறியமைக்களத்தின் களையும் பிழைய நீக்கப்பட்டு நிலை மாற்றப்படுகிறது. எத்தனை புத்தகங்களால், எத்தனை பயணங்களால் , எத்தனை ஆய்வுகளால் எத்தனை காலச் செலவால் இந்தப் புத்தகம் சாத்தியப்பட்டிருக்குமென்று நினைக்கும்போதே இதற்கெல்லாம் அவர் கொடுத்த உழைப்பு பெருமலைப்பை ஏற்படுத்தி வாய்மைக்கு வணங்கவும் வளர்ச்சிக்கு வாழ்த்தவும் தோன்றுகிறது.

பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகள் மற்றும் கோவில்களின் கட்டிடக்கலைசார் தகவல்களாக நிறையும் இரண்டாம் பாகத்தின் சில பகுதிகளை அடுத்த வாசிப்புக்கு வைத்துவிட்டேன். ஒரே நாளில் அத்தனையையும் சேர்த்து வாசிப்பதில் சுகமோ பயனோ இல்லையென்று.

அனைவரும் வாசித்தறிய வேண்டிய நூல்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.