சித்தன் போக்கு - பிரபஞ்சன்

நன்மை மரம் நல்கிய நறுமலர்கள் ... ❤️

"அவனுக்கு என்ன கஷ்டமோ ?" என்று அடுத்தவனின் நிலை நின்று யோசிக்கத் தொடங்கும்போதே பாதியாகி விடுகிற பிரச்சினைகளின் வீரியம் "சரி விட்டுக் கொடுப்போம் !" என்று கடக்கிற போது முழுவதுமாக கரைந்து போய்விடுகிறது.

இந்தத் தொகுப்பின் கதைகள் முழுக்க அல்லது பிரபஞ்சன் அவர்களின் கதையுலகம் முழுக்க மனிதர்களின் மனதுகளின் நன்மைப் பக்கங்களை மட்டுமே திரும்ப திரும்ப எழுதி மகிழ்ந்திருக்கிறது. சல்லிப் பயல்களுக்குள்ளும் இருக்கும் சௌந்தர்யங்களை சலிப்பின்றித் தேடிக் கண்டடையச் சொல்கிறார். அதை மட்டுமே ஏற்றுக் கொண்டு எதிர்காலங்களில் நடைபோடச் சொல்கிறார்.

முதல்வரியிலிருந்தே நல்லவன் அல்லது கடைசி வரியில் திருந்தும் கெட்டவன் என அவரவர் வாழ்வின் சந்தர்ப்பங்களுக்கேற்ப விதவிதமான பிரச்சினைகளுள்ள எளிய மனிதர்களைப் படைத்திருக்கிறார். அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பும் புரிதலுமே தீர்வாகுமென்ற தீர்க்கத்தையும் கதை முடிவுகளாகக் கொடுத்திருக்கிறார்.

நான் முதன்முதலாக பிரபஞ்சன் அவரை வாசிக்கிறேன். சுந்தர ராமசாமி அட்டையில் " கலை வெற்றியை உறுதிப்படுத்தும் கதைகளை எழுதியவர்" என்று குறிப்புக் கொடுத்திருக்கிறார். அது எத்தனை உண்மையென்று கதைகளை வாசிக்கையில் உணர்கிறேன். அளந்துவைத்த சொற்கள். சுவாரஸ்யமானதும் சுகமானதுமான உரையாடல்கள், புன்முறுவலான உவமைகள், பல நேர்மறையான கதாபாத்திரங்கள் என கதைகள் எனக்கு மிகுந்த மகிழ்வான வாசிப்பனுபவத்தையே கொடுத்தது.

எனக்குத் தெரியும், பிரும்மம், குமாரசாமியின் பகல் பொழுது, சுகி, மரி என்கிற ஆட்டுக்குட்டி ஆகிய கதைகள் நெடுநாளைக்கு மறக்காத அழகான கதைகள்.

Comments

Popular posts from this blog

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.