காலம் உறைந்த சட்டகம் - தமிழ்நதி

"தனக்கு வலிக்கும் வரை மற்றவர்களின் வலி என்பது நமக்கு ஒரு தகவலே" என்ற ழாக்'கின் அழியாப் பெருவாக்கியம் போல உலகின் போதாமைக்காலத்தில் உங்களின் போதாமைக்காலத்தை "காலம் உறைந்த சட்டகம்" கவிதைகள் வழி அறிந்து கொண்டிருக்கிறேன்.

கவிதை என்பது உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் போது மனதிற்கு மிக நெருக்கமாக வந்துவிடும் என்பதை தங்களின் ஒவ்வொரு கவிதையும் நிருபிக்கிறது. அதுகோரும் திறப்புக்கு நாம் உள்ளத்தளவில் முன்தயாரிப்புகளோடு தட்டும் போது கவிதை ஒரே தட்டலில் திறந்தும் கொள்கிறது.

இத்தொகுப்பின் கவிதைகளையெல்லாம் எழுதிய காலகட்டத்தில் உங்கள் மனதின் அலைச்சலை எண்ணிப் பார்க்கிறேன். போரென்ற பொய்முகத்திரையோடு ஒரு இனமே அழித்தொழிக்கப்பட்ட வன்கொடுமைகளை நேர்கண்ட போது முதல் முறையும் எழுதிய போது இரண்டாவது முறையும் உள்ளழுத்தி உயிர் வலிக்கச் செய்திருக்குமென நிச்சயமாக உணர முடிகிறது.

அரசியல் அதிகார அமைப்பின் ஒவ்வொரு அசைவும் ஒரு தனிமனித மனதை எப்படி அசைத்துப் பார்க்கிறதென்ற பார்வையில் பார்க்கிற போது தமிழீழப் போர் இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் பெரும் உயிரிழப்புகளின் சாட்சியாகவோ அல்லது மனச்சிதைவுக்குட்பட்ட மீட்சியாகவோ தனிமையும் வெறுமையும் மிக்கவர்களாக விட்டுவைத்திருக்கிறது. அவர்தம் வாழ்வின் முன்னேற்றங்களிலும் கலை - இலக்கியப் படைப்புகளிலும் பெரும் புகைப் படலமாய்ப் படர்ந்துகொண்டு ஒன்று அடுத்ததான பிழைப்புப் பாதைகளின் வழித்தடங்களை மறைக்கிறது அல்லது தெளியும் வழிகளில் துன்பத்துணையாய் கூடவே வருகிறது

வலிக்க வலிக்கக் கடந்ததை வெல்லும் சொல் வேறின்றி இட்டும் பழிகொடுத்த வாழ்வியலைப் பயனிலாச் சொல்லின்றிப் பக்குவமாய்ப் பகிர்ந்தும் நிரப்பியிருக்கும் உங்கள் இழப்புகளின், உணர்வுகளின் இயலாமையின் கண்ணீர்ப் பிரதிகளாகவே கச்சிதமாகவும் காத்திரமாகவும் வெளிப்பட்டிருக்கும் இக்கவிதைகள் ஒரு ஊழிக்காலத்தினை உறைந்த சட்டகத்திற்குள் உயிர்சாட்சிகளாய்ப் பேணுகிறது.

ஒரு கவிதையைச் சரியாகப் புரிந்துகொள்ளும் போது வாசகனும் எழுத்தாளரும் கைகுலுக்கிக் கொள்வதாக ஆளுமைகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இக்கவிதைகள் ஒரு படி மேலே போய் தங்களின் கவியாளுமையாலும் எழுத்தாற்றலாலும் மாண்டது கண்டு மறுகிப் போயும் மீண்டது கண்டு மகிழ்வெய்தியும் மனம் குலுங்கச் செய்திருக்கிறது.

தமிழினி பதிப்பகத்தின் பிழையில்லா அச்சும் கலையான ஆக்கமும் வாசிப்பின்பத்தை உறுத்தலின்றித் தருகிறது

எழுதித் தீர்த்த போது கொஞ்சமேனும் ஆறுதலை அடைந்துவிட்ட உங்கள் மனதை இக்கவிதை வாசிப்புகளின் அனுபவப் பகிர்வுகள் தேற்றும். நிச்சயம் நலம் வரும். வாழ்த்துகிறேன். வேண்டுகிறேன்

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.