யாவுமே உன் சாயல் - காயத்ரி ராஜசேகர்.
தீராக் காதலின் மேலுமொரு தித்திப்பான பிரதி.
காயத்ரி ராஜசேகர் அவர்களின் எழுத்தை முகநூலிலேயே நான் நிறைய வியந்து வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு கவிதைக்கும் அதற்கான உணர்வும் தகுந்த வார்த்தைத் தேர்வுகளும் மிகவும் கச்சிதத் தன்மையோடிருக்கும். துருத்திக் கொண்டு ஒரு வார்த்தை கூட இருக்காது. அவரின் தொகுப்பு வரும்போது ஆவலுடன் வாசித்ததின் அனுபவமே இது ...
ஆதிகாலம் தொட்டுப் பேசிவரும் காதலில் பெண்மனமடையும் மகிழ்வையும் சுகத்தையும் காதலிலும் இல்லறத்திலும் பெண்ணடையும் எதிர்பார்ப்பும் காத்திருப்பும் விரக்தியும் ஊடலும் அதே நேரம் அக்காதல் நிறைவேறாமல் போகும்போது பிரிவின் வலியையும் அதே பெண்மொழியில் எளிமையான புரிதலில் ஈரத்தோடு பேசுகிறது இக்கவிதைகள்.
அருகாமைக்கு ஏங்கவும் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டும் மன்றாடல்களும் தன் தனிமையின் வலிதீர்க்கச் செய்யும் பிரார்த்தனைகளும் நிறைந்த ஒரு வழிபாட்டுச் செயல் போல காதலை எழுத முடிந்திருக்கிறது. அதேநேரம் சில கவிதைகளில் நீயின்றி என்னால் எதுவும் முடியாதா ? என்ற எதிர்த்தர்க்கம் பேசும் தொனியிலும் இருக்கிறது.
காதலென்ற ஒரே உணர்வில் இத்தனை மாதிரிகளை எழுதிப்பார்க்க முடியுமா என மலைக்குமளவுக்கு மிக நுண்ணிய உணர்வுகளைக் கூட மிகப் பெரிய காட்சியமைப்புகளாகத் தம் எழுத்தின் வழி கொண்டு வந்திருக்கிறார்.
சில கவிதைகள் மட்டுமே காதலுக்கு வெளியே எழுதப்பட்டுள்ளது. அக்கவிதைகள் சமூக அவலம் குறித்தும் பெண் வாழ்வியல் குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது. அப்பா குறித்து ஒரு கவிதை இருக்கிறது.
மிகப்பிடித்த கவிதை "மீள்காணல்". தொகுப்பைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே வாசித்த முதல் கவிதை என்றைக்கும் மறக்காத கவிதையாய் போனது.
இளையராஜா பற்றியொரு கவிதை -
காலதேவன் - காலமெல்லாம் நம்மைத் தம் இசையால் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் இசைஞானிக்குச் சமர்ப்பணம் போல இருந்தது.
அதிலொரு வரி
"குலதெய்வக் கயிறாய்
காதுகளில் உறையும் ஹெட்போன் போதும்
எதுவுமே அண்டாது".
இசைஞானியின் பாட்டிருந்தால் போதும் எம்மைத் தாக்கும் எதுவும் கிட்ட அண்டாமல் வாழ்ந்துவிடுவோமெனக் கூறி இசையால் மகிழ்விக்கும் நீர் ஆணென்றாலும் தேவதை நீயென நீள்கிறது.
"வயதாகிவிட்டது" கவிதையில் என்றோ கூட நின்று எடுத்தவர்களின் தற்கால நிலைமைகளையெண்ணி வருந்துவது கண்ணீர்க் கணம்.
எனக்கானவன் என்ற கவிதையில் கடைசிவரி "எனக்கென் இரட்டைத்துணை"யென்ற வார்த்தைகள் எனக்கு நானல்லாமல் நீயின்னுமொரு துணை என்ற அர்த்தம் அழகாக இருந்தது.
"அனைத்தும் நீ" என்ற கவிதை இல்லறத்தில் பெண் ஆணிடம் எங்கணம் தோற்கிறாள் என்ற கூர்மையான பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்வின் அனைத்து அசைவிலும் ஆண் பெரும்பங்கைப் பெறுவதுபோல காட்டிக் கொள்கிறான் . ஆனால் வீட்டு வேலைகளென்று வரும்போது பெண் அதற்கென ஒதுக்கப்படுகிறாள் என்ற கோபம் மென்மையாய் எழுகிறது.
அழுது தீர்க்கட்டும் என்ற கவிதையில் தன் கணவரின் திருமணத்திற்கு முன்னாளுல்ல ஒரு நேசத்தைப் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கிற தருணம் வாழ்க்கையின் பேறு.
தொகுப்பின் குறை - பெரும்பாலான கவிதைகள் ஒரே மாரியாகவே இருக்கிறதென்பதால் வாசித்து முடியும் வேளையில் மேற்சொன்னதைப் போல வித்தியாசமான சில கவிதைகள் மட்டுமே மனதில் நிற்கிறது. மீதக் கவிதைகள் மறந்தது போலவோ ஒரே மாதிரியானது போலவோ குழப்பம் தோன்றுகிறது.
இறுதியாக கவிஞரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்
"அடர் நேசம் நிறைந்த பெண் மனதில் படியும் மீச்சிறு சாயல்களென காதலே நிறைந்திருக்கிறது "
Comments
Post a Comment