கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்
அன்புள்ள அம்மாக்களின் தற்கொலைகளை, பாவமறியாக் குழந்தைகளின் மரணத்தை, இல்லாமற்போனவர்களால் இருப்பவர்களுக்கு சூன்யமாகும் வாழ்வை, அவர்களும் சாவு வந்து சாகும் வரைக்குமான நீளும் வெறுமைகளை, நிலையாமைகளின் நிறையேற்றுச் சுழலும் இவ்வுலக இன்மைகளை இந்த எழுத்தாளர்கள் ஏன் தான் இப்படி ரசிக்க ரசிக்க எழுதுகிறார்களோ தெரியவில்லை. படித்து விட்டு நமக்குத்தான் உயிர் பதறி உடல் நடுங்கிப் போய்கிவிடுகிறது.
கொடூர மரணங்களோ அல்லது நமக்கு ஒருநாளும் வந்துவிடாக் கூடாது என்ற பதைபதைப்பை ஏற்படுத்திவிடுகிற நோயோ கதைகளாயிருக்கிறது. மொத்தத் தொகுப்பே இப்படியானதாக அமைந்து விட்டது இயல்பா திட்டமிடலா தெரியவில்லை. ஆனாலும் வாசித்து முடிக்கும் போது நமக்குள் வாழ்வு பற்றிய ஒரு பெரிய பயம் தொற்றிக் கொள்வதை உணர்கிறேன்.
ஒவ்வொரு கதையையும் வெகு நேரம் இடைவெளி விட்டே படித்தேன். அடுத்த கதை படித்துக் கொண்டிருக்கும் போதும் முந்தின கதையின் தாக்கமும் சோகமும் மனதை அறுத்துக் கொண்டேயிருந்தது
அதன் காரணமாகவே மீட்பு கதையை தொகுப்பில் கடைசியாகவே வாசித்தேன். வாசித்து முடித்து அதிர்வடங்கும் வரை உறங்கும் என் மகனின் கையைப் பிடித்துக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்தேன். எழும்போது அவனின் அருகாமைகள் மாறாதிருக்கும் என்ற நம்பிக்கையில் அயர்ந்துறங்கிக் கொண்டிருக்கிறான் அவன்.
பட்டாம்பூச்சிகள் நிறைத்துப் பறக்கிற சுக சூழல்களில் உலகக் குழந்தைகளும் வாழட்டும் எப்போதும் ... மகிழ்வின் புன்னகைகள் தவழும் முகங்களோடு அவர்களுக்குக் காவலிருக்கட்டும் உலகக் கடவுள்கள் அன்பின் ரூபத்தில்.
மடக்கி எழுதினால் கவிதையாகிவிடுகிற நிச்சயமுள்ள பல வாக்கியங்கள் இக்கதைகளுக்குள் இயல்பாகவே இருக்கிறது கவிதைக்காரரின் கதையென்பதால்.
ஏறி இறங்கும் மூச்சு இன்னும் எத்தனை காலம் உள்ளிருக்கும் என்பதில் நிச்சயமில்லாத ஒரு வாழ்வைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முடிந்த வரைக்கும் நமக்காகவும் நம்மோடு இருப்பவர்களுக்காகவும் பாதுகாப்போடும் உடல் நலத்தோடும் அன்போடும் இருப்போம். ❤️
Comments
Post a Comment