நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன்.
நேற்றுத்தான் பேசிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு நடக்கும் கதைகள் மாடர்ன் லைப் பத்தின கதைகள் நாம வாசிச்சு சுலபமா நம்மோடு இணைத்துவைத்துப் பார்த்துக் கொள்கிற கதைகள் எந்த அளவுக்குத் தமிழ்ல எழுதப்பட்டு விற்பனைக்கு வருகிறதுன்னு. அதுக்குப் பதில் சொல்ற மாதிரியான ஒரு நாவல் தான் இது.

நான் இந்த நாவலை வாங்கின ஒரே காரணம் ஐடி பத்தி ஒரு நாவல் தமிழ்ல எழுதிருக்காங்கன்னு ஆச்சர்யத்திலும் எதிர்பார்ப்பிலும் தான். இதுவரைக்கும் சில சிறுகதைகளிலும் , பேட்டை, பெயல் நாவல்களில் கொஞ்சம் நான் ஐடி லைப் பத்திப் படிச்சிருக்கேன். முழு நாவலுமே ஐடி பற்றியதென்ற உடனே ஆர்வமா வாங்கி வாசித்தேன்.

90 களின் மத்தியில் இந்தியாவில் பிரபலமாகத் தொடங்கி இன்று ஐடி என்றாலே அதில் இந்தியர்களின் மூளைதான் சிறந்தது என்று பெயரெடுத்திருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறையைக் குறித்து இதுவரைக்குமாகப் புழங்கி வரும் கௌரவ வேலை, உயர்வான ஊதியம், வெளிநாட்டு வேலை - பயணம் , குடும்ப வசதி உயர்வுகள், சமூகத்தில் கவனம் பெறல், நேரம் காலமற்ற வேலை தரும் மன அழுத்தம், பதவி மற்றும் சம்பள உயர்வுக்காக நடக்கும் கால் பிடித்தல்களும், கைவிடல்களும், வேலையைத் தக்க வைக்கப் போராடும் மறைமுக மற்றும் நேரடி மோதல்கள், வேலைக்கு ஆளெடுப்பதில் நடக்கும் குளறுடிகள், எடுத்த ஆட்களுச்சரியாக பணி வழங்காமை, வெளிநாட்டுப் பகலுக்காக உறக்கமிழந்த உழைப்பு, அதனால் ஏற்படும் உடல் நலக்குறைவு, ஆண்- பெண் எதிர் பாலின ஈர்ப்பு, காதல், மீறல், குடும்ப உறவுகளுக்குள் உண்டாகும் உளப் பிரிவினைகள், திருமண முறிவுகள், மன நலம் பாதித்தல்கள், தற்கொலைகள் என இதுவரைக்குமாக நாம் கேட்டறிந்து வைத்திருந்த அனைத்து நல்லது கெட்டதுகளையும் ஒரு மேலோட்டப் பார்வையாய்ப் பேசுகிறது நாவல்.

சென்னையில் ஒரு தொழில் நுட்ப நிறுவனம், அதற்கு வெளி நாட்டிலிருந்து பணி வழங்குபவர்கள், வெளி நாட்டு ஊழியர்கள், சென்னைக் கிளைத் தலைவர்,மேலாளர், துணை மேலாளர்கள், அதன் கீழ் பணிபுரியும் அடுத்த நிலை அலுவலர்கள், கடை நிலை ஊழியர்கள், வன்பொருள் பிரிவின் பணியாளர்கள், புதுச் சேர்க்கையாட்கள், வாட்ச்மேன், அலுவலகம் பெருக்குபவர் என அனைவரது தனிமனித வாழ்க்கையிலும் குடும்பத்திலும் சமூகத்திலும் அதே அலுவலக வேலையென்ற ஒன்று செலுத்தும் அதிகாரத்தையும் ஐடி எனும் மாய உலகத்தின் எப்பொழுதும் ஈர்க்கும் பிரம்மாண்டமான கண்ணாடிக் கூண்டிற்குள் வெளியிருந்து பார்க்கும் நமக்குத் தெரியாலிருக்கிற அதன் சுதந்திரமற்ற சுழலும் அடிமைத்தன அடக்குமுறைகுகளும் நிறைந்த
களம்.

மனிதன் பணத்திற்கும் அதன் மூலம் கிடைக்கும் அந்தஸ்த்திற்கும் ஆசைப்பட ஆரம்பித்த போது அடைய நேர்ந்த கட்டுப்பாடுகள் நிறைத்து வைத்துக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு சம்பளம் என்ற ஒற்றை இரையைக் காட்டியே வேட்டையாடப்படும் மனித மேன்மைகளை இழந்துவிட்டு வாழும் இயந்தரத்தன வாழ்க்கையின் கொடூரப் பக்கங்களை அறிய கதையை ஒரு வட்டம் போல தொடங்கிய இடத்திற்கே கொண்டு வந்து சேர்ப்பதற்குள் சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் அனைவரும் அறியாத துறைசார் விளக்கங்களோடும் இக்காலத்திய மொழியோடும் சிரமமின்றிப் புரிந்து கொள்ளும் விதமாக சொல்லியிருக்கிறார்.

நித்திலன் - மீரா திருமணத்திற்கு முன்னான சந்திப்பும், கடைசிப் பகுதியில் வரும் மீராவின் கடிதமும் நாவலின் அழகுப் பக்கங்கள்.அதே போல அவர்களின் திருமணத்திற்குப் பிறகாக அவர்களுக்குள்ளெழும் முரண்கள் சுகவாழ்வுப் பயணத்தில் களைய வேண்டிய கண்ணிகள். வேலையால் காதலையிழந்த விவேக்கின் கடைசிப் பக்கம் கண்ணிர். கம்பெனி மீது கோபப்பட்டு வேலையை விடத்துணிந்த சாஜூவின் சங்கடம் சகிக்க முடியா நிமிடங்கள். கணவனின் தவறான நடவடிக்கைகளால் விவாகரத்துப் பெற்றுத் தணித்து வாழ்ந்தும் வீழாது முன்னேறும் அர்ச்சனா மீண்டெழும் வர்க்கத்தின் உதாரண மாதிரி. பணியிடமாற்றத்துக்காக விண்ணப்பித்துவிட்டு கம்பெனியின் வறட்டுப் பிடிவாதத்தால் அவதியுற்று மன நிலை பாதிக்கப்பட்டுப் பரிதாபத்துக்குள்ளாகும் பார்கவியின் நிலைகண்டு அனுதாபமும் கோபமும் கொப்பளிக்கிறது. வேலையே தெய்வமென்றிந்த போதும் கம்பெனிக்குத் தேவையில்லாத போது வெளியே தூக்கியெறியப்படும் வேணுவைப் பார்க்கையில் எழுவது பரிதாபத்தின் விம்மல். இவைகளெதுவறியாமல் ஏவலுக்குப் பணியும் முதியவர் ராமசுப்புவுக்கு எதார்த்த காவலாளி வேடம்.

சிறு சிறு சந்தோசங்களால் நிறைவுபெறும் வாழ்க்கைக்காக மனதையும், அறிவையும், உடலையும், உறவுகளையும் இழக்கச் செய்யும் வேலையென்பதும் பணமென்பதும் நம்மீது இத்தனை ஆதிக்கம் செலுத்துகிறதே என்ற ஆதங்கமும் அதையும் விட்டால் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் மனிதர்களின் வலியோடும் இயலாமையோடும் ஐடி வேலையை விட்டுவிட்டு ஒரு சாதாரண வேலையைச் செய்யத் தொடங்கிய ஒருவனடையும் பெரிய சந்தோசத்தைப் பார்த்து அதிர்ச்சியும் பொறாமையுறும் துன்பியல் முடிவோடு நாவல் முடிகையில் நம்மைத் தொற்றிக் கொள்கிறது.

இன்றைய கதைளின் மீது ஆர்வம் இருப்பவர்கள் தாராளமாக வாசிக்கலாம்

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.