கொண்டல் - ஷக்தி

ஒரு கொலை
ஒரு காதல்
ஒரு புயல்

மூன்றுமே திட்டமிடல் போல ஒருவனை நொறுங்கச் செய்யும் கதை.

அவ்வொருவனின் பார்வை வழி அண்ணனின் கொலையும் அன்பில் பிழைத்த காதலும் ஒரு புயல் கடந்த பாதையில் வாழ்விழந்த மக்களின் இழப்பையும் வலியையும் அனைத்தையும் வெற்று அறிக்கைகளில் கடக்கும் அரசியலையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் கரை கடந்துவிட்ட காற்றின் சீற்றத்தோடு பேசுகிறது நாவல்.

அரசியல்வாதிகள் தம் சுய நலங்களுக்காக கைவிட்டுவிட்ட தமிழர் நிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நிகழ்ந்து வரும் நிலம், நீர் ,காற்று என்று இயற்கை வளங்களைப் பாழாக்குவதை எதிர்த்து நாளொரு போராட்டங்கள் நடைபெறுவதும் அதை நடத்தும் தன்னார்வலர்களை அடக்குவதும் ஒடுக்குவதும் கொல்வதும் கூட நடப்பதைக் கண்டும் காணாமல் நாம் கண்மூடிக் கடந்து கொண்டுதானிருக்கிறோம். அப்படிக் கதைநாயகனின் வழக்கறிஞரான அண்ணன் பாழ்படும் தம் நிலத்தைக் காக்கவேண்டி சட்டப் போராட்டம் நடத்தப்போய் சம்மந்தப்பட்டவர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டு இறக்கிறார். அவரின் குடும்பமும் சுற்றமும் கொலைக்கெதிராக வினையாற்ற இயலாத ஆத்திரத்தை அழுகையில் அடக்கிக் கொள்வதில் தொடங்குகிறது கதை.

அண்ணனை இழந்த சோகத்திலிருந்து மீளவேண்டி வெளியூருக்கு வேலைக்குப் போகுமிடத்தில் பூக்கும் ஒரு காதல் சற்றே அன்பையும் நிம்மதியும் அளிக்கிறது. மொழி, இன, சாதி மாறுபாடுகள் கொண்ட அக்காதல் தொடர்ந்து வரும் பிரச்சினைகளால் திருமணம் வரைக்கும் கூட நீடிக்காமல் கலைகிறது.

அதனிடையே திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயல் தாக்குகிறது.
புயல் குறிந்த எந்த வானியல் முன்னறிவும், மக்களைத் தயார்படுத்தும் தொழில்நுட்ப பின்னறிவும், பாதுகாப்பு முன்னேற்பாடு வசதிகளுமற்ற ஒரு சொரணையற்ற அரசு கடக்கும் புயலைக் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்திருந்து விட்டு நிலம், வீடு, விவசாயம், மரங்கள், கால்நடைகள், என மொத்த வாழ்வாதாரங்களையும் இழந்து திக்கற்ற நிலையில் நின்று வேறுவழியின்றி கையேந்தி அதே அரசிடம் நிவாரணம் கேட்கையில் அங்கும் அரசியல் அடிமைகளால் நடக்கும் குளறுபடிகளுக்காக அரசின் கையாலாகத்தனங்களை விமர்சிக்க நேர்பவர்களைத் தாக்கிப் பொய் வழக்குப் போட்டு கைது செய்து அடைத்து விடுவதென்றும் அவர்களை மேலும் முடக்குவதும் எத்தனை கொடூர மனப்பான்மையை தம் மக்களின் மீதே ஒரு அரசு கொண்டிருக்கும் என்பதைக் கோபமும் கொப்பளிக்கக் கூறியிருக்கிறார்.

இங்கு நடக்கும் அனைத்துத் தவறுகளையும் சரியாக்கிவிடும் ஒரு புரட்சிக்கார மன நிலையில் மிகவும் தைரியமாக அரசைச் சாடியும் கேலி பேசியும் கடந்தாலும் அதெல்லாம் அத்தனை சாதாரணமானதல்ல என்ற ஆற்றாமையிலும் ஆனாலும் இயற்கையைக் காக்கும் இன்னலான சேவவையைத் தொடர்ந்து செயலின் மூலமோ எழுத்தின் மூலமோ செய்து கொண்டே இருப்போம் என்று நாவல் முடிக்கப்ட்டிருக்கிறது

ஒரு பேரிடர் சம்பவிக்கும் போது அங்குள்ள சாதாரணர்கள் அடையும் அல்லல்கள், இழப்புகள்,உயிர்காக்கும் போராட்டங்கள் குறித்தான வலிமிக்க வர்ணனைகள் கண் நிறைக்கும் காணொளிக் காட்சி போல சொல்லப்பட்டிருக்கிறது.

தொழிலுக்கு வேண்டித் திட்டமிட்ட கடல் நீர்க் கலப்பால் பாழடிக்கப்படும் நிலங்கள், நிலத்தடி நீர் பாதிப்பு , இறால் பண்ணைகளின் இயங்கு விளக்கங்களெலாம் இயற்கை வளம் குறித்தும் மக்களின் நலம் குறித்தும் பெரும் கேள்விகளையெழுப்பி எதிர்கால வாழ் சூழலையெண்ணி பதறடிக்கிறது.

இத்தனை வலுவான கதையில் இன்னும் இன்னும் நிறைய எழுத களம் கிடைத்தும் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் முடித்துவிட்டார். சுருக்கமாக இருப்பது கதையின் ஒட்டுமொத்தமான தீவிரத்தையும் உணர்வையும் புரிந்து கொள்வதில் ஒரு போதாமையைக் கொடுக்கிறது.

இருந்தாலும் கஜா புயல்ப் பாதிப்புகளின் வலி குறைந்தாலும் வடு மாயாத கதையான இந்த நாவலுக்குத் தடையோ நாவலுக்குள் மாற்றங்களோ நிகழ்வதற்குள் வாய்ப்பிருந்தால் வாசித்து விடுங்கள்

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.