தீக்கொன்றை மலரும் பருவம் - லதா அருணாச்சலம்.


"என்னைப் பார்த்து , உன் வாழ்க்கையில் நீ செய்த நல்ல காரியங்களைச் சொல் என்று கேட்டால் என்னால் ஒன்று கூட நினைத்துப் பார்க்க முடியாதென்று" கூறி வருந்தும் போதைப் பொருள் விற்கும் ரவுடி இளைஞனுக்கும் ...

முதுமையின் பலவீனம் ஏற்படுத்தும் அழிவை எதிர்க்கும் ஒரு போராட்டத்தோடு தன்னைப் பொருத்திப் பார்க்கும் போது தன் வாழ்வு புதிய அர்த்தம் கொள்கிற நிலையை ரசிக்கிற ஐந்து குழந்தைகளின் பாட்டிக்கும் ...

இடையிலான

எந்த விதமான சமூக நிர்பந்தங்களுமற்ற,குடும்ப பொறுப்புகளற்ற ,வேறொரு மாய உலகத்துக்குச் சென்று தடைகளேதுமின்றி அன்பு செய்து கொண்டே வாழ்ந்துவிட எண்ணி தன் தடுமாற்ற சுயத்தோடு வாழ்வின் ஒழுங்கு விதிகளில் மீறலைக் கைக்கொண்ட போது அடைந்த வலியும் இழப்பும் நிறைந்த கதை.

பெண்கள் நிறைந்த,பெண்களின் இல்லற வாழ்வியல் மற்றும் அதையொட்டியே நிலைமாறும் பெண்களின் உளவியல் இன்னல்கள் நிறைந்த கதையோடு நாட்டின் அரசியல், சட்டத்தால் சரிசெய்துவிடமுடியாத ஒழுங்கின்மைகளும் உழைப்புக்கான அதாரங்களற்றதால் வறுமையும் சமூக அவலங்களும் தலையெடுத்தாடும் நகரின் கதையும் இணைந்தே பின்னப்பட்டிருக்கிறது.

தன் உடல்தான் இங்கு மிக நிச்சியமாக போற்றப்படுகிறதென்றும் சதை கழிந்த மனமென்ற ஒன்று மறுதலிக்கப் படுகிறதென்பதும் அறிந்திருந்தாலும் அந்த உடலைக் கூட ஆராதிக்கும் வழித்தேடல்களன்றி தன் அடிமையாய் மாற்றி ஆட்கொள்ள நிகழ்த்தும் வன்மங்களைத்தான் சகித்துக் கொள்ள முடியாமலும் பெண்ணுடலாய்ப் பிறந்ததற்காகவே தன்னைத்தானே வெறுத்துக் கொண்டும் எந்த ஒரு மகிழ்வும் மலர்வும் இன்றி நகரும் நாட்களில் அன்பையும் , காதலையும் மனதிற்குள்ளேயே கொன்றுவிட்டும் வாழ்கிற ஏராளம் பெண்களின் வெளிவராக் குரலாய் ஐந்து பேரக்குட்டிகளின் பாட்டி பிந்தாவின் தனிமைக் குரலும் ...

தம் நாட்டின் மீதும் மக்களின் மீதும் அவர்களின் சமூக - பொருளாதார வளர்ச்சியின் மீதும் அக்கறையும் எதிர்காலப் பார்வைகளும் கல்வி குறிந்த வழிநடத்தல்களுமற்ற
ஒரு அரசின் கிழ் வாழும் குடிகளின் இழிநிலையென்பது சொல்லி மாளாத
குறுக்குவழிகளும் வன்முறைகளும் குற்றச் செயல்களும் நிறைந்துதானிருக்கும் என்பதன் அடையாளமாய் தாயால் கைவிடப்பட்ட தந்தையால் முறையாக வளர்க்கப்படாத தொடர்ந்து வாழ பணம் மட்டுமே பொதுமென்ற குறிக்கோளைக் கொண்டு உள்ளூர் கொள்ளைக் கூட்டத் தோழமைகளின் தலைவனாகி விட்ட ரெஸாவின் ஏக்கமும் ...

ஒன்றாகச் சேரும் போது இதுவரை ஏங்கிக் கிடத்த துணையை அடைந்த களிப்பையும் உளம் உணராத நிம்மதியையும் காலம் கடந்தாலும் பொங்கிவழியும் காமத்தையும் தன் விருப்பத்திற்கேற்ப தன் சுதந்திர வெளிகளையும், யாருமறியாமல் காத்துவைத்த மென் உணர்வுகளை மீட்டெடுத்துத் திளைக்க அமைத்துக் கொள்ளும் துணிச்சலையும் அம்மீறலால் சமூகத்தில் பெண்ணடையும் இழிவையும் அல்லல்களையும் குடும்ப சமுக அரசியலையும் மொழிமாற்றிப் பேசியிருக்கிறது நாவல்.

மொழிபெயர்ப்பு என்ற சொல்லுக்கு நியாயம் செய்திருக்கிறார் என்றே வணங்கத் தோன்றுகிறது. இத்தனை சுலபமாக ஏதோ தமிழிலேயே எழுதப்பட்ட கதையை வாசிப்பதைப் போன்ற எளிமையான மற்றும் உறுத்தலற்ற வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது திருமதி.லதா அவர்களின் மொழிபெயர்ப்பு. இம்மொழிபெயர்ப்புக்காக இதுவரை வாங்கிய மற்றும் இனிமேல் வாங்க இருக்கிற விருதுகளுக்கு வாழ்த்துக்களும் அன்பும்...

நீங்கள் நெடுங்காலம் எனக்குள் வாழ்வீர்கள் ஹஜியா பிந்தா ... ரெஸாவின் அருகாமையை அனுபவித்துக் கொண்டே ... ❤️

Comments

Popular posts from this blog

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.

பிடிமண் - முத்துராசா குமார்