நான் ஏன் வாசிக்கிறேன் ...?
நான் வாசிக்கவில்லையென்றால் என் சுயம் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது. என் உலகின் நிஜம் என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது. என் தோல்விகளும் இழப்புகளும் என் முதுகின் மேல் என்றென்றைக்கும் மாயாத பெரும்பாரமாய்க் கனக்கிறது.என் எதிர்காலமென்ற மிகப் பெரிய விடையறிய இயலா கேள்விக்குறியின் கொக்கி பாகம் என் கழுத்தை சுழித்து நெரிக்கிறது. என் அகமே துலாக்கோலாகி என் நல்லது கெட்டதுகளை நிறுத்துப் பார்க்கும் நீதிபதியாகி எனக்கான தண்டனை விபரங்களைக் கணக்கிடுகிறது. நான் செய்த பாவங்கள் என் கண் முன்னே பழிதீர்க்கும் ஆயத்தங்களுடன் நின்று பல்லை நெரிக்கிறது. ஆகமொத்தம் இத்தனை துயரங்கள் நிறைந்த சமகாலக் கயிறிறுக்கங்களில் இருந்து என்னை இளக்கிக் கொள்ளவும் நான் இனிமேல் வாழ விரும்பாத நிஜமான இந்த உலகிலிருந்து என்னைத் துண்டித்துக் கொண்டு கனவுகளும் கற்பனைகளும் நிறைந்த அந்தர உலகில் மிதந்து கொண்டே இத்தனைக்குப் பிறகும் இன்னுமிருக்கும் நாட்களை கடத்தி விடவும் சுலபமானதும் எனக்கு மிக மிக பிடித்ததுமான ஒரே ஒரு வழியென்பதால் வாசிக்கிறேன். மற்றமடி அறமோ அறிவோ அடைய அல்ல.
Comments
Post a Comment