மானசரோவர் - அசோகமித்திரன்.

ஒரு சிறுகதைக்கான சிரத்தையுடனும் கச்சிதத்துடனும் ஒரு நாவல். மூன்று மணி நேரத்திலேயே நான் வாசித்து விட்டேன். உள்ளும் புறமும் வேறு வேறான சிந்தனைகளும் செய்ல்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் மனப்பிறழ்வுகளும் கொண்ட இரு நண்பர்களின் கதை.

சினிமா உலகம் எத்தனை கவர்ச்சியானதோ அத்தனை அசிங்கங்களும் அத்தனை வறுமைகளும் நிறைந்ததே. கோடிகள் புரளும் சினிமாக் கம்பெனியில் அடுத்த வேளை சோற்றுக்குக் கூட வழியில்லாத பாவப்பட்ட கூலிகளின் வாழ்வியலை அருகிலிருந்து பார்த்தவர் அல்லது தானும் அதே போல் வாழ்ந்தவரென்பதால் அந்த மாய உலகத்தைப் பற்றி எழுதி எழுதி பழுத்த கதை.

சினிமாத் துறையைச் சார்ந்த ஒரு உச்ச நட்சத்திரத்துக்கும் ஒரு சாதாரண கதையாசிரியருக்கும் இடையில் ஏற்படும் எதிர்பார்ப்புகளற்ற மனமொத்த நட்பு அவர்களை நெருங்கச் செய்து காலங்கள் கடந்து தத்தமது பிழைகளையும் நிலைகளையும் உணர்ந்து மனம் திருந்தச் செய்வது வரை இருவரையும் இணைந்திருக்கச் செய்கிறது.

ஒரு ஒழுக்க மீறல்.ஒரு குடும்பத்தை, இரு மனிதர்களை எப்படிப் பாதித்து அவர்களின் வாழ்வையும் மனதையும் எப்படி பாதிக்கிறது ? எதிர்காலத்தை எப்படி அலைச்சலுக்குள்ளாக்கி கேள்வியாக நிறுத்துகிறது ? என்பதையும் மிகச் சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டே தம் எழுத்தாளுமையால் ஒரு சினிமா பார்க்கும் சுவாரஸியமாக மாற்றி கூறியிருக்கிறார்.

கதையைக் கண் முன் நிகழ்த்த மிக எளிமையான இயல்பான எழுத்தே போதுமாயிருக்கிறது. வாசிக்கும் நமக்கு மிக நெருக்கமானதாகவும் பழக்கப்பட்டதாகவும் தோன்றி சாதாரணமாக நம்மைக் கதைக்குள் ஒன்றுபடச் செய்கிறது.

ஆன்மீகத்தை ஒரு விடுதலையைப் போல, தெளிவுறுதலைப் போல நிறுவுகிறது. ஆனால் அனைவருக்கும் அது அத்தனை சுலபமாக நிகழ்ந்துவிடுவதில்லையென்பதையும் சுட்டிக் காட்டுகிறது. ஒருவருக்குத் தெளிவோடும் ஒருவருக்கு கேள்வியோடும் முடியும் நாவல் முடிவுக்குப் பின்னான கதையைப் பற்றி நிறைய யோசிக்கச் செய்கிறது.

ஒரு வரியில் கதை எதிர்பாராத் திருப்பங்களையும் உச்சத்தையும் அடைவது அபாரம். ஒவ்வொரு அதிகாரத்தின் கடைசி வரியும் சுவாரஸ்ய ஆச்சர்யம்.

"அது என்ன மானசரோவர்

வடக்கே பனிசூழ்ந்த ஹிமாலய மலைகளுக்கு நடுவே ஒரு ஏரி. அங்கே குளித்துவிட்டு வந்தால் மனம் சுத்தமாகும். மனம் சுத்தமானம் யோகம் சித்திக்கும். யோகமெல்லாம் நமக்கெதுக்கு ? மனம் சுத்தமானால் போதாதா ...?"

Comments

Popular posts from this blog

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.

பிடிமண் - முத்துராசா குமார்