கேசம் - நரன்

கதைகள் முடிந்து நெடுநேரமாகியும் கலங்கும் நெஞ்சத்துடன் தொடங்கியிருக்கிறது புத்தாண்டு ...
முன்பெங்கோ படித்த மாதிரி இல்லாததும் காலத்துக்கும் மறக்காதென்பதும் ஒரு சிறுகதைக்கு எவ்வளவு பெரிய வெற்றி. அப்படியான 11 சிறுகதைகளின் மொத்தத் தொகுதியாக இருக்கிறது இத்தொகுப்பு.
மரணங்களும் நோய்மையும் தனிமையும் நொந்துதணியா மனமும் சுழற்றியடித்து அலைக்கழிக்கும் மனித வாழ்வின் கொடும்பக்கங்களைச் சேர்த்துக் கட்டிய கதைத் தொகுதி. ஒவ்வொரு கதை முடிவிலும்
தாயின் உயிர்வாங்கிய மானேந்தி திறந்த சிலையின் கண்களும் ...
அடைக்கலராஜின் கதைகள் கேட்கத் திறந்த காதுகளும் ...
ஆத்தியப்பனின் புண்களாற்ற நீண்ட ஆவுடையின் கேசமும் ...
மரியத்தின் மனதை எட்டிப்பிடிக்க முடியாமற்போம கணேசனின் குட்டைக் கால்களும் ...
சர்க்கஸில் கூட்டம் கூட சிங்கங்களுக்கு இரையாகிப் போன காளியின் உடலும் ...
ஏழு ஆண்டுகளாகியும் மகிமை தெரியும் ஒருவன் வரும் வரை தன் ஓவியத்தைக் உயிராய்க்காத்த திடமனமும் ...
அம்மாவோடு இறந்துவிட்ட தன்னிருப்பை நிருபிக்க மீண்டும் மீண்டும் தீயிட்டுச் சுகம்கண்ட பல்வேறு பெண்களின் ரோமங்களும் ...
தனக்கென யாருமற்றிருந்த உலகிலிருந்து விடுவிடுக்கத் தேவைப்பட்ட தன் குடும்பத்தாரின் சேலைகளும் ...
சுகவாழ்வுக்காய் சுயத்தைக் குடைந்து சூடுபட்டுக் கொள்ளும் வண்டுகளும் ...
வளரச்சித்தீபமேற்ற உயிரைச் சோதனைக்களத்தில் பலியிட்டு உலகைச் சூரையாடும் அறிவியலும் ...
மனதைக் கொல்லும் ஆணைப் புலனறிவில்லாப் பொம்மையாக்கிப் பழிதீர்க்கும் பெண்களின் தீராப் பகையும் ...
இத்தனை இரக்கமில்லாததா வாழ்வென்ற கேள்வியைப் பெரும்பாரமாய் எழுப்புகிறது.
வரும் ஆண்டில் சிறுகதைகளை அதிகமாக வாசிக்க வேண்டுமென்ற என் எண்ணத்தில் விழுந்த முதற்பெருங்கீற்று இத்தொகுப்பு. கட்டாயம் வாசியுங்கள்.

Comments

Popular posts from this blog

கழுதைப்பாதை - எஸ். செந்தில்குமார்.

பிடிமண் - முத்துராசா குமார்