கசாக்கின் இதிகாசம் - ஓ.வி.விஜயன்.
தமிழில் - யூமா வாசுகி


ஒரு கிராமத்தின் கதை

கிராமத்து மக்களின் கதை

ஒரு கதையை இத்தனை உயிரோட்டமாகச் சொல்லிவிட முடியுமாவென்ற வியப்புடனே தான் படிச்சுமுடித்தேன். கதைசொல்லலில் கி.ரா.வை நியாபகப்படுத்திக் கொண்டேன்.

ரவி என்ற ஒரு இளைஞன் ஆசிரியராகப் பொறுப்பேற்கும் கசாக் என்ற கிராமத்தில் வசிக்கும் சாதாரண மக்களின் இன்பதுன்பங்கள் நிறைந்த வாழ்க்கையப் இதிகாசமாகப் பதிவு செய்திருக்கிறார் திரு. ஓ.வி.விஜயன்.

இந்நாவலின் முக்கியச் சிறப்பாகப் போற்றப்படுவது இதன் பேச்சு வழக்கு மொழிநடை, ஒட்டுமொத்த கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் கொஞ்சமேனும் தொட்டு சென்றது.

இதிகாசம் என்ற பெயரைத் தேர்ந்தது எத்தனை அர்த்தமானதென்று நாவல் முடியும் தருவாயில் நம் மனம் கனக்கும் நிகழ்வுகளிலிருந்து விளங்கப் பெறலாம்.

தன் தந்தையின் இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட மீறலுறவில் மனம் கலங்கி வீட்டைவிட்டுப் புறப்பட்டு ரவி கசாக்கிற்கு ஓராசியர் பள்ளியைத் துவங்கி நடத்த வருகிறார். அங்கு ஏற்கனவே இருக்கும் முகமதிய வேத பாட சாலைக்கும் ஒரு தனியார் ஆங்கிலவழிப் பள்ளிக்கும் இந்த ஓராசியர் பள்ளி ஒரு வருமானப் பிரச்சினையாக உருவெடுக்கிறது. முதலில் அந்தப் பள்ளியை எதிர்க்கும் வேதபாடசாலையின் நிர்வாகி அல்லாப்பிச்சா மொல்லாக்கா என்பவரும் அவரின் சகாக்களும் சில நாட்களுக்குப் பிறகு கல்வியின் தேவையறிந்து ரவியுடன் சுமூக உறவிற்குள் வருகிறார்கள். அதோடு சேர்ந்து அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை காதல், காமம், சோகம், இழப்பு, நோய்கள், மரணங்கள்,மதச் சடங்குகள் என எல்லாம் மக்களின் மொழியில் எந்தப் பூச்சுமின்றி அத்தனை யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ரவியின் படிப்பு, குடும்பம், காதல், கசாக்கிற்கு வருகை, பள்ளித் தொடக்கம், அங்குள்ளோரினுடனான நட்பு,உறவுகள்,காழ்ப்பு, காமம்,பழைய காதலியுடனான மீள்சந்திப்பு என நாவல் பயணப்பட்டு எதிர்பாராத ஒரு முடிவை அடைகிறது.

அல்லா பிச்சா மொல்லாக்கா என்ற கதாப்பாத்திரம் நாவலின் நடுத்தூணாக நிமிர்ந்து நிற்கிறார். ஊர்ப்பெரியவர் , வாத்தியார் என ஊரின் நல்லது கெட்டதுகளுக்கு கடைசி வார்த்தை சொல்பவராக இருக்கிறார். அவரின் மரணம் மிகப் பெரிய இடியாக விழுகிறது கிராமத்தின் மேல்.

பள்ளிக்கு இடம் கொடுத்தவர், ரவியின் தையல்கார நண்பர், மொல்லாக்காவின் குடும்ப உறுபினர்கள், அவர் எடுத்து வளர்த்தும் அவருக்கு எதிராகத் திரும்பும் ஒருவர், டீக்கடைக்காரர், டீக்கடைக்கு வருவோர், பள்ளிக் குழந்தைகள், பள்ளியைத் துப்புரவாக்க வருவோர், ரவியின் அப்பா, சித்தி, காதலி, ஆசிரியர், ஊர் மக்கள் என யதார்த்தமான பல கதாபாத்திரங்களின் வழியாகத்தான் இந்த நாவல் இத்தனை சிறந்த கதையாக மாறியிருக்கிறது.

கிராமத்தைக் கண் முன் நிறுத்தும் விவரணைகள் கொண்ட எழுத்து அட்டகாசம். பள்ளி வாசல், பள்ளி அமைவிடம், டீக்கடை, நடுத்திடல், பஸ் ஸ்டாண்டு போன்ற இடங்கள் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் போலவே முக்கியத்துவம் பெறச் செய்ததால் கதையின் நம்பகத்தன்மை கூடி ஒரு நிறைவைப் பெறுகிறது.

நாவலை தன்னால் ஆன அனைத்து உச்சத்திலும் வைத்தும் கொண்டாடுகிறது மலையாள இலக்கிய உலகம். இந்தக் கதையில் வரும் கிராமத்தில் நாவலாசிரியருக்கு நினைவகம் அமைத்து நாவல் சார்ந்த புகைப்படங்கள், பொருட்கள் கொண்ட கண்காட்சியும் அமைத்திருக்கிறார்கள். பெயரறியாத கசாக் கிராமத்தை தன் எழுத்தால் உலகறியச் செய்திருக்கிறார் ஒ.வி.விஜயன்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.