புதுமைப்பித்தன் ... ❤️

வைரமுத்து (ஓரளவு முழுக்க),சுஜாதா (சிறுகதைகள், கேள்வின்- பதில்கள்),விகடன் (2.50 ரூ விற்ற காலத்திலிருந்து),எஸ்.ரா (கட்டுரைகள்) வாசித்துவிட்டு அடுத்ததா அதிக இடைவெளிவிட்டு மீண்டும் வாசிக்கத் தொடங்கலாமென்று நான் போய் வாங்கிவந்த இரண்டு புத்தகங்கள்

1.புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு
(ஜெயகாந்தனின் பின்னட்டைப் புகழுரையைப் படித்துவிட்டு)

2.சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுப்பு
(புளியமரத்தின் கதை நோபல் தகுதிக்கென்ற ஒருவரிக் குறிப்பைப் படித்துவிட்டு)

இதில் புதுமைப்பித்தன் சிறுகதைகளைத்தான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த புத்தகம் என்னை இலக்கிய வாசிப்பை நோக்கி மிகவுமாக உந்திய புத்தகம். அந்தக் கதைகள் ஒரு பெரும் வியப்பையும் உற்சாகத்தையும் வாசிப்பின் சுகத்தையும் சுவாரசியத்தையும் எனக்கு அளித்தது. இதுவரைக்குமாக உண்மையாகச் சொல்லப்போனால் அப்படியான வியப்பை எனக்கு எந்தச் சிறுகதை ஆசிரியரும் வழங்கி விடவில்லையென்பது சோகமே.

பிடித்தத்துக்கான காரணங்கள் சில

1. அவருடைய கதைகளுக்கான கரு அதற்கு முன் பேசப்படவில்லையென்ற ஆய்வு. (அவரே அனைத்திற்கும் இன்றுவரை முன்னோடியாக இருப்பது)

2. அவரின் எளிய கச்சிதமான நடையும் மொழியும்

3. நகைச்சுவை

4. ஒரு காலகட்டத்தின் அழுத்தமான குரல். (காலங்களைத் தாண்டியும் நிற்கிறது.)

5. கதைகளுக்கிருந்த முழுமையான ஒழுங்கு.

இன்னொன்று அந்தப் புத்தகம் ஏன் எனக்கு அவ்வளவு பிடித்த புத்தகமென்றால் நானும் எனது மூத்த ஒரு தோழியும் தினமும் மாலையில் கதை படித்து விட்டு அவர்களுக்கு அந்தக் கதையை நான் கூற அதைப் பற்றி அவர் சில கருத்துக்கள் கூற கதை அமைப்பு , சுவை, முடிவு, குறிப்பிட்ட இடங்கள் இப்படித் தொடர்ந்து நிறைய பேசி விவாதித்திருக்கிறோம்.

103 கதைகளில் 90 கதைகளைப் பற்றி நாங்கள் பேசியிருக்கிறோம். சிலகதைகள் அப்போதும் இப்போதும் புரியவில்லை. இன்றைக்கும் அந்தப் புத்தகத்தைப் புரட்டும் போது குறிப்பிட்ட கதைக்கு நாங்கள் பேசிய உரையாடல்கள் மனதுள் ஒலிப்பதிவு செய்து வைத்தது போல மீண்டும் உயிர்பெற்று ஒலிக்கத் தொடங்குகிறது.

நான் சாகும் வரைக்குமாக எனக்குப் பிடித்த புத்தகங்களில் முதலிடம் இந்தப் புத்தகத்துக்குத்தான்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.