பொன்னி - ஷான் கருப்புசாமி

படிக்கச் சுவாரசியமான களமும் கதைசொல்லும் முறையும் எளிய மொழியும் கொண்ட ஒரு நாவல்.

என் வாசிப்பு அறிவின் வரையில்

1.தங்கம் பற்றிய தகவல்கள் கொண்ட முதல் நாவல்

2.சுரங்கம்+ அதன் அமைப்பு + அதன் தொழிலாளர் வாழ்வியல் ஆகியவற்றைப் பதிவு செய்த முதல் நாவல்.

இரண்டாயிரம் ஆண்டுகளாய் தங்கம் விளையும் கோலாரில் இரண்டாயிரம் வருடமாய் ஒரு சத்தியத்துக்காய்ப் பாதுகாத்து வரும் தங்கச்சுனையைப் பற்றிய ரகசிய வரலாற்றையும் அது சார்ந்தோரின் வாழ்க்கையையும் இரணிய காலத்திலிருந்து இன்டெர்நெட் காலம் வரை கோர்த்துக் கொடுத்த கதை.

முதல் அத்தியாயத்தில் சோழர் காலத்தில் சுற்ற ஆரம்பிக்கும் கதைராட்டினம் கடைசி அத்தியாயத்தின் கடைசிப் பத்தியில் கதையின் நாயகி பொன்னியோடு விமானம்விட்டுத்தாவி நம்மையும் காற்றில் பறக்கச் செய்து விட்டு ஓய்கிறது. அத்தனை வேகம், அத்தனை திருப்பம்.

சுரங்கத் தொழில் என்பதன் கொடுமையான பிண்ணனியை நாவல் முழுக்கப் பேசியிருக்கிறார் ஆசிரியர். யாரோ செழித்துக் கொழிக்க தம் உயிரையே பணயம் வைத்துப் பணியெடுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பல்லாண்டுகளாய்ப் பேசாத வரலாறுகள் அவை. ஒரு சின்ன அன்பும், பரிவும் கூட இல்லாமல் அடிமைகளென்ற ஒரு காரணத்தைக் காட்டி நம் மக்களை ஆங்கிலெயர் படித்திய பாடெல்லாம் படிக்கப் படிக்கப் பதைக்கிறது.

ஒரு இனத்தின் சோக வரலாற்றை ஒரு குடும்பம் மாற்றியெழுத போராடும் கதை. அதன் தற்காலத் தலையெடுப்பாய் இந்திய வம்சாவளி வாரிசான இங்கிலாந்தின் தொழிற்பெரும்புள்ளி பொன்னி அமெரிக்க + இந்திய உளவுத்துறைகளோடும் இரணிய சேனையின் இக்கால தலைமறைவு வீரர்களோடும் நிகழ்த்தும் துணிவான செயல்கள், தாண்டும் தடைகள், எதிர்கொள்ளும் துரோகங்கள், துணையாகும் புத்திசாலித்தனக் கூட்டுகள், எதிர்பாராததைச் செய்து திகிலூட்டும் எதிரிகள் என ஒரு மாயாஜாலக் கதை போல உலகம் முழுக்க தம் கிளைகள் விரித்து இத்தோடு முடியவில்லை இரண்டாம் பாகமுமிருக்கிறது என புதிரோடு முடிகிறது நாவல்.

தங்கம் ஒரு ரத்தம் கேட்கும் செல்வம் என்றும் அது எக்காலத்திற்கும் நாம் நமக்கு நாமே சேர்த்து வைத்துக் கொள்ளும் வினைதானென்றும் ஆனாலும் தங்கம் சேர்த்து வைத்து தம்மை உயர்ந்தவர்களாய்க் காட்டிக்கொள்ளும் சமூகப் பொது ஆசையை மங்க விடாதபடி அந்த தங்க வியாபாரிகள் பார்த்துக் கொள்கிறார்களென்றும் அதற்காய் தம் உயிரையும் அடுத்தவர் உயிரையும் கூட பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லையென்ற நிலைக்கு வந்துவிட்ட காலத்தில் இதைப் படிப்பது சற்றே சுய நிம்மதியை அசைத்துப் பார்க்கிறது.

எரியும் பனிக்காடு படித்த போது தேநீரின் வரலாறு நம்மை அதிர்ச்சிக்குள்ளாகியது போல இந்நாவல் நாம் அணிந்திருக்கும் தங்கத்தை அதிர்ச்சியாகத் தொட்டுப் பார்க்கச் செய்யும். நாம் அணிந்திருக்கும் தங்கம் எத்தனை பேர் ரத்தக் கறையோடு நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறதென்பது நினைக்க வலிக்கும் நிஜம்.

இந்நாவல் படித்து முடித்த எல்லாருக்கும் இரண்டு செயல் செய்யத் தோன்றும்.

1. கே ஜி எப் வரலாற்றைத் தேடி அறிந்து கொள்ளும் ஆவல்

2. சுரங்கத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றிப் பார்க்கத் தோன்றும்.

(நானும் படித்து முடித்து விட்டு யூடியூபில் பல காணொளிகள் கே ஜி எப் பார்த்து வியந்தேன்)

வெட்டாட்டாத்தில் இருந்த 3 கேள்விகள் இதிலும் இருக்கிறது. ஆனால் அக்கேள்விகளுக்குப் பதில் காலத்திடம் இருக்கிறதென்பதால் கேட்டும் பயனில்லையென்று கடக்கிறேன்.

மற்றபடி ஒரு சுவாரசியமான வாசிப்புக்கு மிகச் சிறந்த தேர்வாகும் இந்த பொன்னி ...

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.