பேட்டை - தமிழ்பிரபா
நம்ம சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை மக்களின் வாழ்க்கையை அச்சு அசலாக உயிரோடு ரத்தமும் சதையுமாக நாவலில் பதிவு செய்து ஒரு சாதனையே படைத்திருக்கிறார் தமிழ்பிரபா.
சிந்தாதிரிப்பேட்டையின் வரலாற்றை வெள்ளைக்காரன் காலத்தில் ஆரம்பித்து சமகாலம் வரைக்குமாக கிளியாம்பா மற்றும் அவரின் சந்ததி, சுற்றம் ஆகியவற்றைக் கொண்டு "மெட்ராஸ் பாசையின்" உதவியோடு உண்மையாகவும் எந்த பூச்சுமின்றி ரகளையாகவும் சொல்லியிருக்கிறார் தமிழ் பிரபா. வாழ்த்துகள் தல.
கிளியாம்பா என்ற ஒற்றைப் பெண்மணி தான் வாழ்ந்த காலத்தில் எப்படி வாழ்ந்தாள் என்றும் மறைந்துவிட்ட காலத்தில் எப்படி நினைக்கப்படுகிறாள் என்று காட்ட கிளியாம்பாவின் மகன் குணசீலனின் மனைவி ரெஜினாவின் மேல் கிளியாம்பாவே பேயாக மாறி அவளை ஆட்டும் சில பக்கங்களுக்குள்ளாகவே நமக்குப் புரிந்து விடுகிறது.
குடிக்கு அடிமையாகிவிட்ட குணசீலன் - தெய்வத்திற்கு அடிமையாகிவிட்ட ரெஜினா தம்பதிக்கு ரூபன் என்ற மகன் பிறக்கிறான். அவன் வாழ்க்கைதான் இந்த நாவலில் நிறைய நிறைய அரிதாரமில்லா அசலான கதாபாத்திரங்களின் துணையோடு பெரியதாகப் பேசப்படுகிறது.
தாய் ரெஜினா நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரத்தில்
ரூபன் பிறக்கிறான். . கர்த்தரின் ஆசிர்வாதத்தால் தால் பிறந்தானென்ற நம்பிக்கையில் ரூபன் தெய்வத்தின் குழந்தையாக கருதி வளர்க்கப்படுகிறான் . குறும்பு நிறைய செய்கிறான்.கூட்டம் சேர்த்துக் கொண்டு ஊர் சுற்றுகிறான் கிரிக்கெட் விளையாடுகிறான். பள்ளிக் கல்வியை முடித்து கல்லுரிக்குப் போகிறான். அதையும் முடித்து ஒரு பன்னாட்டு கணிப்பொறி நிறுவனத்தில் வேலைக்குப் போகிறான். அங்கே ஒரு பெண்ணுடன் காதல், சற்று நாளில் அது தோல்வியடைய மனம் சிதறுகிறான். அந்த நினைவுகளோடே வாழ்கிறான்.
ரூபன் பிறக்கிறான். . கர்த்தரின் ஆசிர்வாதத்தால் தால் பிறந்தானென்ற நம்பிக்கையில் ரூபன் தெய்வத்தின் குழந்தையாக கருதி வளர்க்கப்படுகிறான் . குறும்பு நிறைய செய்கிறான்.கூட்டம் சேர்த்துக் கொண்டு ஊர் சுற்றுகிறான் கிரிக்கெட் விளையாடுகிறான். பள்ளிக் கல்வியை முடித்து கல்லுரிக்குப் போகிறான். அதையும் முடித்து ஒரு பன்னாட்டு கணிப்பொறி நிறுவனத்தில் வேலைக்குப் போகிறான். அங்கே ஒரு பெண்ணுடன் காதல், சற்று நாளில் அது தோல்வியடைய மனம் சிதறுகிறான். அந்த நினைவுகளோடே வாழ்கிறான்.
பின்பொரு நாள் நண்பனின் அப்பாவை அவரின் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கப் போக அங்கொரு பெண்ணின் மேல் மையல் கொள்கிறான். அவளைத் தொடர்ந்து போய்ப் பார்த்துப் பேசி காதல் செய்ய வைக்கிறான். நாளும் பொழுதும் போனும் கையுமாகக் காதல் வளர்க்கிறான். திருமணம் வரைக்குமாகப் போகுறது அந்த உறவு. இதற்கிடையில் நண்பனின் மரணம், நண்பனின் தந்தை மரணம், ஆகியவைகளால் சற்று மனம் கசிகிறான். கடைசியாக நண்பனே பேயாக மாறியோ அல்லது மன நிலைப் பிற்ழ்வை உண்டாக்கும் நோயாகவோ மாறி ரூபனின் உடலில் புகுந்து அவனை தன் ஆசைகளுக்கு அடியாளாய் மாறும்படி ஆட்டுவிக்கக் குடும்பம், காதல், சுற்றத்தார், கூட வேலை செய்வோர் என எல்லோரையும் பாடாய்படுத்துகிறான்.
ரூபனின் தந்தை குணசீலன் ஒரு பெரும் குடிகார ஊதாரியாக இருக்கிறார். ஆனா தாய் ரெஜினாவோ அதற்கு நேர் எதிராக எந்நேரமும் கர்த்தரின் ஜெபித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார். ரூபனுக்குச் சித்தப்பா, அத்தை என்ற இருவர் அவ்வுறவுகளுக்குண்டான எவ்வித இலக்கணங்களுமற்று இருக்கிறார்கள். தேவைக்கு வருகிறார்கள். போகிறார்கள்.
நிறைய மனிதர்கள் நாவலுக்குள் (பேட்டைக்குள் )உலா வருகிறார்கள். அதனாலேயே இந்நாவல் அத்தனை எதார்த்தமாக இருக்கிறது. நாகம்மா என்கிற நகோமியம்மா கதையின் மிக முக்கியாமான நெடுங்கிளையாக இருக்கிறார். ரூபனின் பாட்டியின் தோழியான அவர்தான் தனக்கு குழந்தை இல்லையென்ற மனக்குறையைப் போக்க ரூபனை வளர்க்கிறார். ரூபனின் மேல் உயிராக இருக்கிறார். ரூபனும் நகோமியம்மாவின் பேச்சைத் மதிக்கிறான். கட்டுப்படுகிறான்.
ரூபனுக்கு சௌமியன் என்ற ஒரு சற்றே பொருளாதாரத்தில் உயர்ந்த ஒரு சிறுவன் வகுப்புத் தோழானாக இருந்து உற்ற நண்பனாகக் மாறுகிறான். அவனின் அப்பா லாரன்ஸ் ஒரு பேர்பெற்ற கேரம் போர்டு விளையாட்டு வீரராக முடிசூடி அதன் மூலம் கிடைத்த அரசு வேலையில் பணியிலிருக்கிறார். மனைவி பூங்கொடி.
சௌமியன் நன்றாகப் படிக்கும் திறமை பெற்றவனாக இருக்கிறான். இளமைப் பருவத்தில் எல்லொருக்கும் வரும் பாலியல் வேட்கைக்கு ஆளாகி தெருவிலுள்ள ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழகி உறவுகொண்டு அதை அந்தப் பெண்ணின் கணவன் பார்த்து அசிங்கப்படுத்தி விட அதோடு விடாம அவளின் நினைவாகவே போதைக்கு அடிமையாக அரசு வேலைக்குத்தான் போவேனென்ற திமிர்த்தனத்தில் வெறுமனே திரிந்து வாழ்க்கை திசைமாற, தந்தைக்குப் புற்றுநோய் வர ஒரு நாள் மாரடைப்பு வந்து இறந்தும் போகிறான். சௌமியனின் தந்தையும் நோயில் இறக்கிறார்.
சௌமியனின் தந்தையை புற்று நோய்ச் சிகிச்சைக்கு அனுமதித்திருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் தான் இவாஞ்சலின் என்ற கேரளக்கரையிலிருந்து வந்து ஒரு பெண் செவிலியாகப் பணிபுகிறாள். அவளோடுதான் ரூபனுக்குக் கண்டவுடன் காதல்.
இவாஞ்சலின் ஒரு அன்பும் ஆசையும் நிறைந்த ஒரு பெண்ணாக இருக்கிறாள். பார்த்தவுடன் காதலென்று காதலைச் சொல்ல வந்தவனை அலைக்கழித்து அவளும் அவனின் அன்பு கண்டுகொண்ட ஒரு சந்தர்ப்பத்தில் காதலையேற்கிறாள். இவாஞ்சலின் கதாபாத்திரம் ஏக்கம் நிறைந்த ஒரு பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது. யாரும் தடைசொல்லாமல் தானே தனக்கு வேண்டிய மட்டும் குளித்து மகிழ தனக்கென்று தனியாக ஒரு அருவியை வாங்கித் தருமாறு காதலினிடம் கூறும் இப்படி ஒரு பெண்ணா என்று அவளைப் போன்ற ஒரு பெண்ணிற்காக நம்மையும் ஏங்கவும் ரசிக்கவும் வைத்திருக்கிறது.
காதல் சந்திப்புகளாலும் பேச்சுக்களாலும் கனிந்து கனிந்து சொட்டும் நேரத்தில் தான் ரூபனுக்குப் பேய் பிடிக்கிறது. அல்லது பேய் பிடித்திருக்கிறதா என்ற பைத்திய நிலை நோயாக உருவாகிறது.
இந்த சௌமியன் தான் பிற்காலத்தில் ரூபனின் உடலுக்குள் புகுந்து ரூபனை அலைக்கழிக்கிறான்.
அடுத்ததாகப் சுய நலத்தோடில்லாமல் நன்மையை விரும்பும் பாஸ்டரய்யா, அறிவியல் காண்டிபிடிப்பு இறக்குமதிகள் வர வர தான் கொண்டிருந்த சாம்ராஜ்யங்களை இழந்துவிட்ட கைவினைத் தொழிலாளர்கள் வர்க்கத்தின் ஒட்டுமொத்த சாட்சியமாய் வாழ்ந்துகெட்ட ஓவியர் பூபாளன், அவரின் மனைவி,மகள், சோற்றைக் கூட தனக்குப் பசிக்கும் நேரத்திலல்லாமல் கூப்பிடும் போது போய் வெளியே நின்று பெற்றுக் கொண்டு வந்து உண்டுவிட்டு அடிமைத் தொழில் செய்கிற தவுடாசோறு குடும்பத்தினரின் வாரிசாய் பிறந்து கேரம் என்ற விளையாட்டில் வாகை சூடி வளர்ந்து ஆளாகி தன் குடும்பத்தில் இழிநிலை போக்குகிற பாலு, தந்தையை கொன்றவனைப் பழிவாங்கும் எண்ணத்தோடே எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் குடிகாரன் ஆமோஸ், முன்பகுதியில் கூட இருக்கும் நண்பன் அண்டா உருட்டி, பாலமுருகனாக பிறந்தாலும் ஜான்டி ரோட்சுக்கே சவால் விடும் கேட்சுகளைப் பிடித்து ஜான்டியாகவே பேர்பெற்றுவிட்ட ஜாண்டி, கேரம் போர்டு ஜாம்பவான் மாசிலா, ரூபனின் அலுவலக நண்பர்களான "வொர்க்ககாலிக்" விசால், ஜாலி பிரண்ட் சைலேந்தர், கார்த்தி, குடித்து விட்டு சண்டையிழுத்து பல்லுடைபட்டு மனைவியிடம் மரியாதை இழந்து ஐயப்பனுக்கு மாலை போட்டிருப்பதால் மட்டுமே குடியை விட்டிருக்கும் ஏரியா நண்பரான குடிகாரன் யோசேப்பு அவரின் மனைவி, சின்ன பாஸ்டரய்யா இடிமுழக்கம் அவரால் பாலியல் துன்புறுதல்களுக்கு உள்ளாகும் பெண்கள், இன்னும் இன்னும் இப்படி எத்தனையோ கதாபாத்திரங்கள் பேட்டைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மேற்சொன்னவர்களின்வாழ்க்கை தான் கதை. சின்னஞ் சிறியதொரு வாழ்வை வாழ இந்த கதைமாந்தர்கள் இழக்கும் சந்தோசங்கள், உரிமைகள், பட்ட அடிகள், காயங்கள், அந்தக் காயங்களையே விழுப்புண்களாக நினைத்து வாழும் ஏமாற்றங்கள் ஆகியவை அத்தனையும் பிரசாரமாக இல்லாமல் பேசப்பட்டிருக்கிறது.
நாவலின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை மக்களின் ஒரு சாராரை அவர்களின் கல்வியின்மையையும் விழிப்புணர்வின்மையும் பயன்படுத்தி அவர்களை வாழ்வின் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களாக மாற்றி அதன் மூலம் தனது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டு வாழ்கிற உயர்குடி மக்களுக்கெதிரான அரசிலை மிகத் தெளிவாகப் பேசுகிறது.
இந்நாவலின் மொழி நமக்கு எளிதில் விளங்குகிற சமகாலத்தியதாக இருப்பதால் வாசிப்பு தடையின்றி நீள்கிறது. சென்னையின் வட்டார வழக்குச் சொற்களையும், மிகுந்த வசைச் சொற்களையும் அத்தனை அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
நாவலில் காலம் முன்னும் பின்னுமாகப் போய்வந்தாலும் படிக்கும் நமக்கு ஒரு குழப்பமும் அலுப்பும் இல்லை.
190 ம் பக்கம் காதலைச் சொல்லும் வழிமுறை பற்றி சைலேந்தர் ரூபனிடம் விளக்கும் பத்தியில் காதல் உணர்வுகளின் மென்மையைக் கூறிய விதம் அருமை.
கதையைச் சொல்லும் மொழியும் கதை மாந்தர்கள் பேசும் மொழியும் வேறு வேறாக இருந்தாலும் இரண்டையும் செறிவாகக் கையாண்டது பண்பட்ட பத்திரிக்கையாளரின் கைமுதலான மொழிவளத்தைக் காட்டுகிறது.
இந்நாவல் சிறந்ததா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி இந்நாவல் வரலாற்றை உண்மையாகவும் எந்த பூடகமின்றியும் பேசியிருக்கிறது.
அந்த உண்மைகள் மக்களின் வாழ்வின் மேல் தீராத ஆதிக்கம் செலுத்தியவைகளென்ற நொக்கில் பேட்டை மெச்சப்பட வேண்டிய கொண்டாடப்படவேண்டிய நாவலே.
அந்த உண்மைகள் மக்களின் வாழ்வின் மேல் தீராத ஆதிக்கம் செலுத்தியவைகளென்ற நொக்கில் பேட்டை மெச்சப்பட வேண்டிய கொண்டாடப்படவேண்டிய நாவலே.
இன்னும் இன்னும் தோன்றும் என் எண்ணங்களை இதில் சேர்த்துக் கொண்டே இருப்பேன்.
மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் - இந்நாவலை எழுதியதன் மூலம் நதிமூலமற்றிருந்த ஒரு ஜனத்திரளுக்கு தன் வரலாற்றை மீட்டெடுத்துத் தந்து பெருமை சேர்த்திருக்கும் தமிழ் பிரபா அவர்களுக்குக்கு வாழ்த்துக்களும் அன்பும் ...
Comments
Post a Comment