திரு. பவா செல்லதுரை 

 பவா செல்லதுரை அவர்களின் அனைத்துக் கதை சொல்லல்களையும் ஒன்றுவிடாமல் தொடர்ந்து விடாமல் கேட்டுக் கொண்டே வருகிறேன்.

ஒரு கதை பவாவால் சொல்லப்படும் போது அக்கதை அடைகிற வீரிய வெளிப்பாடு மிக அதிகம். கதை கேட்டு முடித்து அதன் எழுத்துவடிவத்தைப் படிக்கும்போது உண்மையாகவே அக்கதை மாற்று மதிப்பையே அடைகிறது. இன்னும் சொல்லப் போனால் (என்னளவில் ) ஒருகதையின் எழுத்துவடிவம் பவாவின் உணர்ச்சிக் கலப்புகளுடன் கூடிய விவரிப்புக்கும் சொல்லாடல்களுக்கும் முன்னால் சற்று சிறுத்தே விடுகிறது.

இதுவரைக்கும் சொல்லிய அனைத்துக் கதைகளையும் கேட்டுவிட்டு அடைந்த பரவசமும் மகிழ்ச்சியும் சொல்லிலடங்காது.

சந்தோஷின் பிரியாணியில் பாஸ்மதி பசியால் செத்த செய்தியோடு கதையை முடித்தபோது சற்றேனும் கண்ணீர் கசிந்திருக்கவே செய்தது.

வேல ராமமூர்த்தியின் இருபத்தியோடு கிடாயின் கதையில் ஆடுதிருடப் போன குழுவில் இருந்த யாரோ ஒருத்தரால் கூட அக்கதையை அத்தனை உயிரோடு சொல்லியிருக்க முடியாது.

மண்ணை மீறும் விதைகளில் அப்பா இறந்த அன்றே சடங்காகிவிட்ட மகளுக்குக் குச்சு கட்ட மனமுவந்து வந்த மனிதருக்கு பவாவோடு சேர்த்து நானும் கையெடுத்தேன்.

தமிழ்ச்செல்வனின் கருப்பசாமியின் அய்யாவுக்கு நானுமோர் மகனாய்ப் பிறந்திருக்கவேண்டிய எண்ணத்தையே விதைத்தது.

அழகிய பெரியவனின் தோப்பில் என் தாயையே அமரவைத்துப் பார்க்கச் செய்தது .

பாதசாரியின் காசியுடனே அவனோடு ஒரு நிலையற்ற வாழ்வு வாழக் காலாறப் போய்விடத் தோன்றச் செய்தது.

சுந்தரராமசாமியின் எங்கள் டீச்சரின் மனம் மடிந்த ஒரு வைராக்கிய முடிவுக்குப் பிறகு விடைபெற்று சென்ற எலிசபெத் டீச்சருக்குப் பின்னாலிருந்து கையசைத்துக் கண் நனைக்கச் செய்தது.

ஜெயமோகனின் தேவகி சித்தி டைரியில் என்ன எழுதியிருக்கிறாள் என்று தெரிந்து உங்களுக்கு என்ன ஆகிப் போகிறதென்று அவளுக்கு ஆதரவாய்ப் பேசத் தூண்டியது.

வண்ண நிலவனின் பலாப் பழத்தில் ஒரு சுளை நழுவி கீழே விழுந்து அது என் கைக்குக் கிடைக்காதா என்று காத்திருக்கச் செய்தது

கிராவின் மின்னலில் பேருந்தில் ஏறிய கைக்குழந்தையின் ஆனந்தமாய்க் கன்னம் கிள்ளியதும்

சுஜாதாவின் நகரத்தில் நாளைக்குச் சாகப் போகும் குழந்தையைக் காப்பாற்றப் பின் தொடர்ந்தோடியதும்

அசோகமித்திரனின் புலிக்கலைஞனில் டைகர்பாட் பார்த்துப் பிரமித்ததுமென ஒரு கதைசொல்லியின் வழியாக நான் அடைந்த அனுபவங்கள் எப்போதும் எப்போதும் மனம் விட்டகலதாவையாகத் தேங்கி நிற்கிறது.

கதைகளோடு எழுத்தாளர்கள் பலரோடு தம் காலம் முழுக்கச் சேர்த்து வைத்திருக்கும் எத்தனையோ வாழ்வனுவங்களை அவர் பெருமையுடன் குறிப்பிடும் போது இறந்த காலம் உயிர்பெறவே செய்கிறது.

உச்சமாய் கடந்த வாரம் வெளியிட்ட பெருங்கதையாடல் - ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - கேட்டதற்குச் செலவழித்த இரண்டு மணிநேரங்கள் என் வாழ்வின் மிக உன்னதப் பொழுதென்று என்னால் மிக நிச்சயமாகக் கூறிட முடியும். இந்திய நாவல் வரலாற்றில் ஒரு மேன்மைமிக்க நாவலின் கதையை இதைவிட கதைமுறியாமல் சாரம் குறையாமல் உணர்ச்சி மேம்பட யாராலாவது இப்படி எல்லோருக்கும் பிடித்து விடுமளவுக்கான குரலின்பத்தில் சூழலமைதியில் சொல்லிவிட முடியுமா என்பது மிகப்பெரும் சந்தேகமே.

நான் கேட்டதோடு நில்லாமல் எனக்குத் தெரிந்த அனைவருக்கும் இதைக் கேட்கச் சொல்லி மன்றாடியபோது சிலர் கேட்டு விட்டுத் தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து கூறிக்கொண்டே வருகின்றனர். சிலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நன்றி சொல்கின்றனர். என் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்து கதையாடலை ஒளிபரப்பச் சொல்லி ஒரு திரைப்படம் பார்க்கும் கடமை உணர்ச்சியோடு அமர்ந்து கேட்கின்றனர்.

அதிலும் எங்கிருந்தோ ஒரு தோழி கேட்டு முடித்த நொடியில் இப்படிக் எனக்குக் குறுஞ்செய்தியனுப்புகிறாள். - அவளின் வார்த்தைகளிலேயே - "கார்த்திக் நீங்கள் பக்கத்தில் இருந்தால் வடியும் கண்ணீரோடு உங்களை அணைத்து இத்தனை உயர்ந்த இலக்கியத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சொல்லியிருப்பேன்" என்று.

உளமாறச் சொல்கிறேன் பவா... இத்தனை உணர்ச்சிப்பெருக்குகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் அந்த மேன்மையான இலக்கியங்களைப் படைத்த பேரிலக்கியவாதிகளையும் அக்கதைகளைச் சுருக்கிக்கூறிய உங்களையுமே சாரும்.

பல நூறு மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் உங்களிடம் கதை கேட்கும் கூட்டத்தில் முன்வரிசையில் உங்கள் காலுக்கடியில் எப்பொழுதும் அமர்ந்திருக்கிறேன் பவா. கதை முடிந்தெழுந்து கைதட்டி நன்றிப் பரவசத்தோடு உங்களைக் கட்டிக்கொள்கிறேன் பவா.

வாழ்க்கைக்குப் பிறகும் வாழ்வீர்கள் பவா. வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்.

பிடிமண் - முத்துராசா குமார்