இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன்.

கதைகளின் மாயக் குடுவை.

ஔரங்கசீப்பின் இறுதி நாட்களில் நோய்மையால் ஏற்படும் தளர்வைக் கண்டு அவரே அச்சமுறுவதில் ஆரம்பிக்கும் கதை அவரின் வாரிசுகள், அவரின் மறைவுக்குப் பிறகாக நடத்தும் அதிகாரப் பசிக்கான சண்டைகள், அஜ்யா என்ற ஒருவர் அரசருக்கு நெருக்கமான பணியாளின் வாழ்வு அரசரின் ரகசியங்களறிந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கொடுமைக்குள்ளாக்கித் தீர்க்கப்படுவதும்,தூமகேது என்ற சாதாரணணின் வாழ்வு ஒரு புத்தியில்லா மன்னனின் கேடுகெட்ட ஆட்சிமுறையால் பாதிக்கப்பட்டு, அனாதையாக்கப்பட்டு, கடைசி காலம் வரை பல சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டு குடும்பத்தைப் பிரிந்து வாடும் துர் நிலைக்குத் தள்ளப்படுவதும், பிஷாடன், சனத், சிகிரியர், குலாபி, பறவை மனிதன், என்றோர் பலரின் வாழ்வென புரட்ட புரட்ட பக்கங்கள் தோறும் கதைகள் விரிந்துகொண்டே இருக்கிறது. சிறியதும் பெரியதுமான அத்தனை கதைகள் நிறைந்துள்ளது புத்தகம் முழுவதும்.

பல கிளைக்கதைகளை ஒரு முக்கியக் கதைக்குப் பக்க பலமாக அடுக்கிக் கொண்டே போகிறார் ஆசிரியர். வாசிப்பின் போது இது யாருடைய கதை என்ற குவியத்தில் நிலைபெறாமல் போகும் அயர்ச்சியைத் தாண்டி இது உலகம் முழுக்க நீதி மறுக்கப்பட்டவர்களின் பெருங்குரலாக ஒலிக்கும் இயலாமையும் வலியும் நிறைந்த கதைகளின் தொகுப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.

நீதி என்ற ஒரு வார்த்தை பல முறைகள் பயன்படுத்தப் பட்டு அதன் வரையறைகளை பலமுறை விவாதப் பொருளாக மாற்றி பல கருத்தாக்கங்களைக் கொடுத்திருக்கிறார்.
புத்தகம் முழுக்க நீதி,நீதி வேண்டுதல், நீதி மறுத்தல் குறித்தான விவாதங்கள் ஒரு முடிவின்றி நீண்டு கொண்டே போகிறது. அது அவரவர் சமூக நிலைக்கேற்ப மாறும் தன்மையுடைதென்ற தொன்று தொட்டு வழங்கி வரும் முடிவையும் அது மாற்றப்பட்டு அனைவருக்குமான நீதி என்ற பொதுத்தன்மையை அடையும் நிலையை மனிதர்கள் உயர்த்த வேண்டுமென்றும் பேசியிருக்கிறார்.

தத்துவமும் வரலாறும் கதையும் பக்கங்களாகக் கொண்ட கலைடாஸ் கோப் போன்ற வடிவத்தில் காண்பதெலாம் ஆட்சி, ஆசை, அதிகாரம், காதல், களவு, துரோகம், பணம் ,இழப்பு, வறுமை, என்பதையெல்லாம் அடிப்படையாய் கொண்டு பலவிதமாய் விரியும் வாழ்வின் வண்ண விளையாட்டுக்களை மிக எளிய மொழியில் வாசிக்கப் படைத்திருக்கிறார்.

எஸ். ரா. வின் கற்றறிந்த மேதமையாலும் தேசந்திரியாகத் திரிந்து பெற்ற வரலாற்றறிவாலும் தேர்ந்த கதை சொல்லும் பாங்கிலும் இக்கதைகள் மிக எளிய நடையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு மையக்கதை, அது நிகழும் காலம், நிலம், முக்கிய மாந்தர்கள், அவர்களின் நல்லது கெட்டதுகள் என்றெல்லாம் இதில் பிரித்துப் பார்க்க ஒன்றுமில்லாதது இப்புத்தகத்தை முழுமையாக்கவில்லையோ என்ற நெருடல் இருக்கிறது.

ஆனாலும் இந்தப் புத்தகம் இதில் சொல்லப்படிருக்கும் கதைகளின் வரலாறுகளைத் தேடிப் பயணிக்கச் செய்யும் கதவுகளைத் திறக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

புத்தகம் பரிசளித்த 'டியருக்கு' நிறை நேசங்கள் ❤️

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.