அக்காளின் எலும்புகள் - வெய்யில்
புரியாத எதுவும் பிடிக்காது.
கவிதையும் இதில் விதிவிலக்கில்லை.
எனக்குப் புரிந்த கவிதைகளையே நான் விரும்புகிறேன். அக்கவிதைகளை மேலும் மேலும் படித்துக் கரைகிறேன்.
வெகு ஆர்வத்தோடே திரு.வெய்யிலின் நான்கு தொகுதிகளையும் வாங்கி வாசித்திருக்கிறேன். ஆனால் முதல் வாசிப்பிலேயே எனக்குப் புரிந்த (என் கோணத்தில் - கவிஞரின் கோணம் வேறாகவும் இருக்கலாம்) கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இதுவொன்றே.
ஒரு கவிதையின் கடைசி வரி முடியும் தருவாயிலேயே அது என் மனதுக்குள் முழுவதுமாக பெருத்து நின்று எனக்குள் நிறையுமளவு எழுப்பட்ட கவிதைகளை நான் எப்போதும் நல்ல கவிதைகள் என்று சுயவிளக்கம் அளிக்கிறேன். அந்த ஒரு நிறைவைத் தவிர வேறெந்த கவிதை இலக்கணக் கூறுகளையும் தூக்கி நிறுத்து சமன் பார்த்து ஒரு கவிதை தொகுப்பு எப்படி இருக்கிறதென்ற கேள்விக்கு விடையளிப்பதில்லை. அப்படியான நிறைவைத் தரும் பல கவிதைகளைக் கொண்டதே இத்தொகுப்பு.
ஒவ்வொரு கவிதையும் வியப்பு ததும்பும் ஒரு புதுக் காட்சியை விரிக்கிறது.
இதில் ஒரு பழுப்பு நிலமிருக்கிறது. ஒரு பழைய வாழ்க்கையிருக்கிறது.உணர்வு
சண்டைக்கு நிற்கும் உறவிருக்கிறது.
அனைத்துக்கும் சாட்சியாயத் தெய்வமிருக்கிறது. கடைசியாகக் கைக்கொள்ளாக் காதலிருக்கிறது. இதோடு அக்காள் என்ற உறவோ பெண்ணோ கவிதையின் கருப்பொருளாக பெரு உருவம் எடுத்து மாய அழகாயிருக்கிறது.
மரபும் நவீனமும் பிணைந்து முதல் வாசிப்பிலேயே பிடித்துப் போகுமொரு புது வடிவம் காண்கிறது இக்கவிதைகள்.சொற்கள் ரத்தமும் சதையுமாய் முறுக்கேறி நின்று வித்தை காட்டுகிறது.
ஒவ்வொரு கவிதையையும் வரிவரியாக நான் இங்கு எடுத்துக் கூற விரும்பாவிட்டாலும் (முழுத் தொகுப்பையே எடுத்துச் சொல்ல வேண்டி வரும் என்பதாலும்,எனக்கு அதைத் தவிர கவிதை குறித்த விமர்சனப் பார்வையெல்லாம் கிடையாது என்பதாலும் )அந்த வரிகளையெல்லாம் எப்போதும் எப்போதும் மனதுக்குள் அசைபோட்டுக் கொண்டிருக்கும் படியாக நெடுநாளைக்கு நிற்கும்படியான வாசிப்பைக் கொடுத்த தொகுப்பாக இது இருக்குமென்பதால் சந்தேகமில்லாமல் இது ஒரு மிகநல்ல தொகுப்புதான்.
நவீனப் பாணனென்ற வாழ்த்து திரு.வெய்யிலுக்குப் பொருத்தமாய் இருக்கும். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment