லிலித்தும் ஆதாமும் - நவீனா

பெண்ணியம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பெண்ணியம் என்பது "தன் பாலினத்தின் மீதான அன்பும் மற்ற பாலினத்தை மீதான புரிதலும் தான்" என்ற எளிய விளக்கத்தோடு தொகுப்பைத் தொடங்கியிருப்பதே மிகப் பெரிய ஆறுதலையும் வாசிப்பு ஊக்கத்தையும் அளித்தது.

23 தலைப்புகளில் பெண்,பெண்ணியம், பெண் உளவியல், பெண்சார்ந்த குடும்ப,சமூக,பொருளாதாரப் பார்வைகள், விமர்சனங்கள்,அடக்குமுறைகள், பெண் உடல் குறித்த தோற்ற மயக்கங்கள்,ஆண்-பெண் சகோதர உறவில்,திருமண பந்தத்தில், குழந்தைப் பேற்றில் உருவாகும் உடல்நிலைச் சிக்கல்கள், குழந்தையற்ற பெண்களின் மீது கொண்டவனும் குடும்பமும் சமூகமும் நடத்தும் கூட்டு வன்மங்கள், குழந்தை வளர்ப்பில், குடும்ப பராமரிப்பில், விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து அதில் பயணித்தல்களில்,தகுதிக்கேற்ற பணியைத் தேர்ந்தெடுத்தலில்,பணிக்குப் போவதில், ஊதிய வேறுபாடுகளில்,சொத்துப் பகிர்வில் நிலவும் உரிமை மீறல்கள் என அனைத்து பாலின சமநிலையற்ற போக்குகள், இயற்கை உட்பட இந்த உலகின் அத்தனையும் பெண்ணுக்கெதிராகாக் காட்டும் கொடூர முகங்கள்,தெய்வ வழிபாடுகளில் பெண்ணுக்குச் சமயங்களின் ஒரவஞ்சனைகள், காதலைத் தேர்ந்தெடுத்தல்களில் நடக்கும் வன்முறைகள், கொலைகள் குறித்தெல்லாம் மிக மிக எளிய மொழியில் மென்மையான உரத்துப் பேசாத சொல்லாடல்களில் தீர்மானமான கருத்துக்களோடு, தான் கண்டு கேட்டு கவாசித்துப் பெற்ற பல இலக்கிய - திரைப்பட உதாரணங்களோடும் விளக்கக்கங்களோடும் எடுத்துரைத்திருக்கிறார்.

ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு பெருஅதிர்வும், புரிதல்களற்ற மனதின் மீதான சுயகோபமும், மனமுதிர்ச்சிக்கு வேண்டியதைத் தேடும் கட்டாயமும் நிகழ்கிறது.

தொகுப்பின் சிறப்பென என்னளவில் தோன்றியது வழக்கம்போல ஆணாதிக்கத்துக்கெதிரான வசைகள் புகார்கள் என ஒரு சார்பில்லாமல் ஆண்டாண்டு காலமாக பெண்ணியம் பேசுவோர் பேசும் தொனியிலிருந்து சற்றே மாறி ஆண் - பெண் என்ற இரு தரப்பு நியாங்களையும் ஆராய வேண்டுகிறது. அப்படி ஆராய்வதன் மூலமே இங்கே பெண்ணியம் சார்ந்த உண்மையான விடுதலைக்குத் தேவையான தெளிவை நோக்கி நகர முடியுமென தீர்க்கமாக நம்புகிறது.

புதுப் பார்வைகள் என்ற நிலையைத் தாண்டி இங்கே உலகத் தோற்றம் முதல் பெண்ணுக்கெதிராக இருக்கும் நிலைப்பாடுகளில் விமர்சனப் பார்வைகளைப் புகுத்தி எளிய தர்க்கங்கள் வழியாக நியாயமான தீர்வுகளை நோக்கிச் செல்லப் பணிக்கிறது.

பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒரு பெண் வாழ்வு குறித்த முன் வரையறைகளைப் பரிசீலனைசெய்யவும் பெண்ணுக்கான உளமார்ந்த தேவைகளான அன்பு, நட்பு, மரியாதை, உரிமை,இணக்கம் முதலியவற்றைக் கொடுத்து சகமனுஷியாக கூட நடைபோட முன்வரவும் வேண்டுகிறது

பெண் என்னளவில் எப்போதும் வணங்கத்தக்கவள்தான். பெண்ணெருக்கம் அதிகமில்லாமல் வளர்ந்த எனக்கு பெண் எப்போதுமே விருப்பத்திற்குரியவள்தான். அதேபோலவே நெருங்கிப் பார்க்க பெருங்கூச்சத்தைத் தருபவர்களாகவே நினைத்து அடுத்தண்டாதிருந்திருக்கிறேன். அதையெல்லாம் மீறி குடும்பத்திற்கு வெளியே தான் எனக்கு பெண்ணன்பு என்ற அபூர்வம் வரமாய்க் கிடைத்தது. அவர்கள் தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை மகனாக, தோழனாக, விருப்பதிற்குரியவானாக வார்த்துக் கொண்டார்கள். ஆனால் அவ்வனைவருக்கும் அன்பென்ற தித்திப்போடு நான் என் ஆண் திமிரையும் துரோகங்களையும் பொய்களையுமே கொடுத்து வந்திருக்கிறேன். ஏற்கமாட்டார்கள் என்ற முன்னறிவிருந்தாலும் அவர்களனைவரின் தாழ்தொட்டு வணங்கி ஒரு பெருமன்னிப்புக் கோரல்களை இக்கட்டுரைகளில் அடைந்த சிறுதெளிவின் நெகிழ்வுகளில் நிகழ்த்துகிறேன்.

கடைசியாக ஒரு ஆணாக நான் நிறைய திருந்த வேண்டுமெனவும், பெண்ணைப் பார்க்கும் பார்வைகளை மாற்றவும் அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவும் அவர்களின் சுக துக்கங்களில் சமபங்கேற்கவும் சொல்கிறது.

வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

பிடிமண் - முத்துராசா குமார்

உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்.